Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, 14 October 2014

கதை உண்மையாகுமா ????

என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .

 தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????



தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.

ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை  முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.

 இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு  காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.

 இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.

அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.

பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்............
                                                                                                                                           தொடரும்

Friday, 1 August 2014

ஜிகர்தண்டா - MASS + COOL

கடந்த மூன்று மாதங்களாக எத்தனை படம் பார்த்தாலும் அது பற்றி சிலாகித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை , இன்று படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் போட்ட டைட்டில்ஸ் போதும் அது பற்றியே நாலு பத்தி எழுதலாம் அந்தளவுக்கு  அதை ரசிக்க வைத்து விட்டார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இது நிச்சயம் மிக தைரியமான முயற்சி அதில் வெற்றி பெறுவது பார்வையாளர்களாகிய நம் கையில் தான் உள்ளது. நான் பார்த்த திரைஅரங்கில் என்ன மாதிரியான மனநிலையில் எல்லோரும் சென்றார்கள் என்பதை இறுதில் சொல்லுகிறேன்.


குறும்பட போட்டியில் தோற்றவனுக்கு அம்மேடையிலையே முழுநீள திரைப்படம் எடுக்க வாய்ப்பு வருகிறது, அதற்காக அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறானா என்பதே கதை,எப்பொழுதும் கதை சொல்லுவது எனக்கு பிடிக்காது என்றாலும் இப்படம் பற்றி கூறும்பொழுது கதை ஒரு விஷயமே இல்லை என்பதால் தான் கூறுகிறேன்.முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படைப்பு. கதாபாத்திரங்களின்  தேர்வு , காட்சி நேர்த்தி , இசை , கலை , எடிட்டிங் என்று மிக கச்சிதமாக வேலை வாங்கி உள்ளார்.

சித்தார்த் இந்த படத்தில் நடிக்க ஒற்று கொண்டதற்கே அவரை பாராட்டலாம் , அவரைவிட மற்றவர்களுக்கு தான் இப்படத்தில் நிறைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ளது. லக்ஷ்மி மேனன் மேக் அப் இல்லாமல் பார்க்க சகிக்கவில்லை, கலகலப்பாக சென்று கொண்டு இருக்கும் காட்சிகளில் இவர்களின் காட்சிகள் தான் பெருந்தடையாக இருந்தது இறுதிவரை.


சிம்ஹா அசால்ட் சேதுவாக  சும்மா சிங்கம் போல நடிச்சு இருக்கார் , அரங்கம் அதிர்கின்றது முதல் பாதியில்  அவரின் காட்சிகளுக்கு, அதுவும் சேதுவை போட வந்தவன் தவறுதலாக இன்னொருவனை போடும் காட்சியில் பின்னணியில் அதை சேது காணும் பொழுது பின்னணி இசையோடு சேதுவின் பார்வையில் செம்ம கெத்து சீன , அதுபோல அவரின் வீட்டில் கொலை செய்துவிட்டு பின்னர் போலீசிடம் பேசி கொண்டு இருப்பது என்று முதல்பாதி முழுக்க அவரின் ராஜாங்கமே அதுவும் இடைவேளை ட்விஸ்ட். கிளாஸ் பிளஸ் மாஸ் படம் டோய் என்று எல்லோரும் கைதட்டி கொண்டே சென்றனர்.

இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாம் நிமிடம் படம் அப்படியே வேறுஒரு கோணத்திற்கு செல்ல தொடங்கிவிட்டது சிறிது நேரம் முதல் பாதியில் இருந்த அந்த ஆர்வம் இதை ஏற்று தயங்கினாலும் பின்னர் இயக்குனரின் கைவண்ணத்தில் அதனுள்ளும் நம்மை இழுத்து கொண்டு சென்று விடுகிறார். அது தான் படத்தின் சிறப்பே.

ஊரணி என்று வரும் கருணாகரன் படத்திற்கு படம் பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கின்றார். படம் முழுக்க ஹீரோவுடன் வந்து நிஜமாகவே செகண்ட் ஹீரோ கூடியவிரைவில் ஆகிவிடுவார் போல. அதுவும் அவர் கனவு கண்டு பதறும் காட்சிகள் , அடியாட்களுக்கு எப்படி மிரட்ட வேண்டும் என்று டிப்ஸ் தரும் காட்சி , நடிப்பு கற்று கொள்ளும் இடங்கள் எல்லாம் அரங்கில் சிரிப்பதிர்வு அடங்க பல நிமிடங்கள் ஆனது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு வழியை  தமிழ் சினிமாவிற்கு வகுத்துள்ளார். சேதுவிற்கு போடும் பின்னணி இசை அட்டகாசம் அதே போல இடைவேளைக்கு முன் நடக்கும் செம்ம ட்விஸ்ட் காட்சிகளுக்கும் அஃதே. படம் முழுக்க பின்னணி இசை பின்னி பிடலேடுக்கின்றது. அதிலும் பாண்டிநாட்டு கொடியின் மேலே பாடல் இந்த ஆண்டின் சிறந்த குத்து சாங்.

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் A FILM BY KARTHIK SUBBURAJ  என்று போட்டு கொள்ள முழுதகுதியானவர். கடைசி அரை மணி நேரம் பார்வையாளர்களின் எண்ணங்களை திரையில் கொண்டு வராமல் தன்னுடைய படம் என்று காட்சிகளால் அழுத்தமாக புரியவைத்துவிட்டார். படம் நல்ல வெற்றி பெற்றால் (???) நிச்சயம் அவரின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியே.


எப்பொழுதுமே ஒரு படத்தின் உண்மையான  வெற்றி இறுதியில் போடப்படும் இயக்குனரின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டலே, இங்கே இன்று நான் கண்ட இரவுக்காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் பெயருக்கு இறுதியில் அரங்கம் அதிர கைதட்டல் கிடைத்தது. இது போல நம்ம ஊரிலும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராவலுடன் இருக்கின்றேன்.

Sunday, 27 April 2014

நான் அஜித் ரசிகன்-1

என்னுடைய பால்ய காலத்தில் வீட்டில் ஒளியும் ஒலியும் என்றால் எல்லோரும் ஆஜர் ஆகிவிடுவோம். அப்பொழுது தொடர்ந்து நான்கு வாரங்களாக அந்த பாட்டை போட்டு கொண்டே இருந்தனர்.முதல் முறை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தபொழுது பாட்டைவிட அதில் வந்த நாயகனை மிக பிடித்துவிட்டது . அந்த பாட்டு "உன்னை பார்த்த பின்பு நான்" என்றால் பாடல் காதல் மன்னன் திரைப்படத்தில் இருந்து. அதற்குமுன் எல்லாம் எல்லோரையும் போல விஜயகாந்த் சண்டைக்காக பிடித்ததும் பின்னர் எல்லோரையும் போல ரஜினிகாந்தை பிடித்தது மாறிப்போனது என்றல்லாமல் ரஜினிக்கு பிறகு ஆசை நாயகன் அஜித் என்று ஆனது.பின்னர்  தூர்தர்சனில் பவித்ரா (அமராவதி போட்டது போல நினைவே இல்லை) படம் கூட  சலிக்காமல் எத்தனை தடவை போட்டாலும் பார்த்த நினைவு எல்லாம் வருகின்றது கொஞ்சம் நினைவோட்டத்தை ஓட்டி பார்த்தால்.இவைகள் ஐந்தாவது படித்த போது என்று நினைக்கின்றேன், 1998 . 



பின்னர் அமர்க்களம்(1999) திரைப்படத்தை தஞ்சை சாந்தி  திரைஅரங்கில் கண்ட பொழுது தான் மிக பிடித்து போனது, மூச்சு விடாம பாடுன  பாட்டு அதுக்கு அஜித் பயங்கரமா நடிச்சு இருக்காரு. சண்டைலாம் சூப்பர போட்டுருக்காரு. ரகுவரன் கூட பேசுவாரு பாரு  ஆவ்வூனு நண்பர்களிடம் பேசிய ஞாபகம் இப்பொழுது கடந்து போனது தெரிகிறது. இதற்க்கு முன் வந்த வாலி திரைப்படம் கூட தஞ்சை லோக்கல் கேபிள் டிவி ஜென் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.


அல்டிமேட் ஸ்டார் தல ஆன போது தான் உச்சமானது , தீனா (2001) எட்டாவுது படித்தபொழுது படத்தின் ஸ்டில் வந்த பிறகு  சில நண்பர்கள் தேள் செயின் போட்டுவருவது அதை பார்க்கும் பொழுது எனக்கு போட்டு கொள்ள ஆசையாக இருக்கும் ஆனால் அது இறுதி வரை நான் போட்டு கொள்ளவில்லை. படம் பார்க்காமலையே தீனா படத்தை பற்றியே பேசிய காலங்கள். படம் பார்த்த நண்பனை அருகில் அமர்த்தி முழுபடத்தையும் சொல்ல சொல்லி கேட்டு கொண்டே மனதில் பார்த்து கொண்டு இருந்த நேரம். அப்பொழுது தான் இன்னொரு கூட்டம் ப்ரெண்ட்ஸ் படத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது. முதல் முறை போடா அஜித் தான் சூப்பரு என்றும் அவர்கள் ஹ்ம்ம்க்கும் இளைய தளபதி படத்தை பாருங்கடா என்று எங்களை பிரைன் வாஷ் அப்பொழுதே சண்டை ஆரம்பிக்கும் முன்னேயே கூற தொடங்கி இருந்தனர்.



பின்னர் வந்த சிட்டிசன்(2001) படம் எல்லாம் அவரின் பலவிதமான கெட் அப் எங்களின் விவாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அப்படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை ஆனால் நான் பெரிதாக வியக்கும் எங்களின் சீனியர்கள் , பஸ் ஸ்டாண்டில் கெத்தாக திரிபவர்கள் , ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் அஜித் விரும்பிகளாக தீனா ஸ்டில் அவர்களின் நோட் அட்டைகளிலும் , ஆட்டோ முன்  கிளாஸிலுமாக இருந்தது பெருமிதம் கொள்ளவைக்கும்.தினகரன் , தினத்தந்தி பேப்பர் சினிமா பக்கம்  என்னிடம் நீண்ட நேரம் அல்லோலப்படும்.இதன் பிறகு வந்த ரெட்(2002) படத்திற்கு  தஞ்சையில் அதுவரை வைத்திராத அளவுக்கு கட்டவுட்கள் வைத்து நகரையே பிரமிக்க வைத்து இருந்தனர் என்ற பேச்சு தான் அதிகமாக இருந்தது. அப்படத்தின் தோல்வி பயங்கரமாக  ஓட்டபட்டோம் அதுவும் நடனம் என்று ஓட்டும் போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிட்டத்தட்ட ஓடி போய்விட தோன்றும்.தொடர்ந்து வந்த ராஜா(2002) பட தோல்வி அதற்க்கு மேல் ஓடவைத்தது எங்களை அதிலும் சிலர் எங்க தளபதிய வச்சு இவர் தாண்டா துள்ளாத மனமும் துள்ளும் படத்த எடுத்தாரு இப்போ உங்க ஆள வச்சு எடுத்தாரு ஊத்திகிச்சு என்று கூற , நாங்களோ அடேய் இந்த படத்துல உங்க தளபதி நடிச்சு இருந்தாலும் ப்ளாப் தான் என்று எவ்வளவோ மல்லுகட்டி கூறினாலும் இறுதிவரை அந்த நண்பன் ஒற்றுகொள்ளவே இல்லை.


எல்லோருக்கும் நாங்களும் வில்லன் ஆகிவிட்டோம் வில்லன்(2002)  வருவதற்கு முன்னே. ஆனால் வில்லன் எங்களை ஹீரோ ஆக்கிவிட்டது வருகைக்கு பிறகு. அப்பொழுது உடன் வந்த பகவதி நாங்கள் ஓட்டுவதற்கு வசதியாகவும் வில்லன் படத்தின் இரட்டை வேட நடிப்பு பெருமிதம் கொள்ள வைக்கவும் நன்றாக இருந்தது. ஓரளவுக்கு நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் போது டெக்னிகலாக திரைகதை யுக்திகளை எடுத்து கூறி பேச துவங்கிய காலங்கள். அதுக்கு ஏற்றது போல வில்லன் படம் எங்களுக்கு அமைந்தது. அது போலவே தினகரன் சிறந்த நடிகர் அவார்டும் , பிலிம் பேர் அவார்டும் அவ்வருடத்தில் அவருக்கே கிடைத்தது அப்படத்திற்காக. தப்பு தண்டா பாடல் பற்றி இங்க பேச வேணாம் அதுவும் ஒரு விவாதம் ஆனது அப்படத்தில்.

பின்னர் ஒருவருட இடைவெளிக்கு பிறகு 2003 தீபாவளி வெளியீடாக வந்த ஆஞ்சநேயா படத்தின் கதி ஊரே அறியும். ஆனால் அதற்க்கு முன் நாங்கள் தந்த அலப்பரைகள் வல்லரசு டைரக்டர் படம் செம்மையா இருக்க போகுது என்றெல்லாம் ஹைப் கொடுத்துட்டு இருந்தோம். படம் வெளியானா அடுத்த நாள் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்கள் படை சூழ தஞ்சாவூர் படம் பார்க்க செல்லும் போதே திருமலை என்று சிலர் , நாங்க தல படம் தான் என்று கூற , மூன்றாவுது அணி பிதாமகன் என்றது. அங்கு போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றோம். தஞ்சை சாந்தியில் தல படம் கமலாவில் பிதாமகன் சற்று அருகே இருந்த ஜுபிடெரில் திருமலை. தல ரசிகர் போல தெரிந்த ஒருவரிடம் பாஸ் படம் எப்படி என்று கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்.பின்னர் வம்படியாக கேட்க, நேத்து பாக்குறப்போ நல்லா இருந்துச்சு ஆனா இன்னைக்கு திரும்ப வந்து பார்த்தேன் என்று இழுக்க நாங்கள் பாஸ் இன்னு ஷோ முடியலை பாஸ் என்று பதறினோம் அவரோ ஆமாங்க உள்ள விஜய் ரசிக நண்பர்களை அழைத்து வந்தேன் ஒட்டுறானுங்க அதான் வெளிய வந்துட்டேன் என்று கூறி எங்களை இறக்க வைத்து விட்டார்.அதை கேட்ட மற்ற குரூப் நண்பர்களோ சிரித்து கொண்டே எங்களை பார்த்தனர் ஆனால் விடவில்லையே கடைசி வரை போராடி திருமலை அல்லாமல் பிதாமகன் சென்று.அடுத்தநாள் வந்து ஆஞ்சனேயே தனியாக பார்த்தோம் பயத்தில். முதல் முறை நாங்கள் சொல்லி கொண்டும் விட்றா தல அடுத்த படத்துல பட்டய கிளப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு ஒரு கட் அவுட்டை பார்த்தோம் அதில் இருந்த வாசகம் எங்களை கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விட்டது வெளிய சொல்லலையே அதை. அந்த வாசகம்,
"திருமலையை தூக்க வரார்டா எங்க ஆஞ்சநேயா "

இந்த காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் நான் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக கூறினார் அஜித். அதனாலையே எல்லோரின் கோபங்களுக்கு உள்ளானார் ஆனால் ரசிகர்கள் அவருக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜி பட படபிடிப்பு எங்கள் திருவையாறில் நடந்தது வெறும் நான்கு மணிநேரம் எங்கள் ஸ்ரீனிவாச ராவ் மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள காவேரி ஆற்றில். அப்பொழுது தான் அஜித்தை நேரடியாக முதலும் இறுதியுமாக நான் கண்டது. ஆற்றில் அங்கங்கே ஓடி கொண்டு இருந்த நீரை முகத்தில் அவ்வப்போது அள்ளி தெளித்து கொண்டு நடன காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அந்த படபிடிப்பை கண்டு களித்து கொண்டு இருந்தோம்.

கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை சுவைத்து கொண்டு இருந்தநேரம் , அஜித் பிறந்தநாள் மே 1  அன்று வெளிவந்த ஜனா படுதோல்வியை சந்தித்தது. கோடைவிடுமுறை என்பதாலும் +2 ஸ்பெஷல் கிளாஸ் வேறு இருந்த நெருக்கடியில் அப்படத்தை காண வாய்ப்பில்லாமல் போனது ஆனால் கில்லி படத்தை அந்நாட்களில் திரை அரங்கில் கண்டோம் படம் பிடிக்க கூடாது என்ற நினைப்பிலேயே கண்டேன் என்பதை இப்பொழுது நினைத்தால் கூட  சிரிப்பாக இருக்கின்றது. பின்னர் பள்ளி தொடங்கிய போது ஜனா படத்தை வம்படியாக எங்களிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினர் நண்பர்கள். 


2004 தீபாவளி அட்டகாசம் வெளியீடு சரண் இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது எப்போதும் இரட்டை வேடம் என்றால் அஜித் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று உறுதியை நம்ப வைத்த திரைப்படம் அட்டகாசம். 2002க்கு பிறகு அஜித்தின் வெற்றி படவரிசையில் இணைந்த அட்டகாசம் ரசிகர்கள் மதித்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் ஸ்டில் தான் இன்றைக்கும் கூட மிக பிரபலம். இப்படத்திற்கு பிறகு வெளியான அஜித் அவர்களின் எந்த திரைப்படத்திற்கும் திரைஅரங்கில் வைக்கப்படும் கட் அவுட்களில் அட்டகாசம் ஸ்டில் இல்லாமல் இருக்கவே இருக்காது. தல என்று அஜித்தை எல்லோரும் அழைக்க தொடங்கிய காலமும் அதுவே அதற்க்கு ஏதுவாக அமைந்த பாடல் ''தல போல வருமா ''. தஞ்சை யாகப்பா திரைஅரங்கில் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் சென்று மதியகாட்சிக்கு 12மணி முதல் டிக்கெட் கவுண்டரில் நின்று 2அடிக்கு குறைவான அகலம் கொண்ட கவுண்டரில் நீண்ட வரிசையில் மூச்சு விடகூட திணறி கொண்டு 2 மணிநேரங்கள் தவித்து சென்று , பரவசமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடிய படம் . ரசிகர்களுக்காகவே அஜித் நடித்த அட்டகாசம்.


அஜித் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது , அஜித் மூன்று வேடங்களில் நடிக்கபோகிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசை , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு .படத்தின் பெயர்  காட் பாதர் என்று தினசரிகளில் பரப்பாக செய்தி வெளி வரத்தொடங்கியது. அதே போல அந்நேரத்தில் வதந்திகளும் வந்தது அஜித் நடிக்கும் மூன்று வேடங்களில் ஒன்று  அரவாணி என்று கூட. அந்த பரபரப்பில் 2005 பிப்ரவரி ஜி திரைப்படம் வெளிவந்தது. அதே தஞ்சை யாகப்பாவில் முதல்நாள் அஜித் அவர்களின் திரைப்படத்தை முதல்முறையாக  திரைஅரங்கில் காண்கிறேன்(அன்று முதல் இன்றுவரை முதல் நாள் தான் பிறகு வெளிவந்த திரைப்படங்களுக்கு). ராஜா ,ஆஞ்சநேயா , ரெட் , ஜனா போன்ற படங்களை போலல்லாமல் இன்றைய அரசியல் யதார்த்தத்தை கூறியவகையில் எனக்கு பிடித்த படமே ஜி.  ஆனால் இதுவும் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. எனக்கு இன்றைக்கும் இப்படத்தின் இயக்குனர் மேல் கோபம் தான் அவர் லிங்குசாமி. தன்னுடைய படங்கள் என்று அவர் ஜி தவிர ஒதுக்கி தான் பத்திரிகையில் பேசுவார் அவரின் தோல்வி படமான பீமாவை கூட பெருமையாக குறிப்பிடுவார் ஆனால் ஜி படத்தை பற்றி வாய் திறக்க மாட்டார். இப்பொழுது சிவா கார்த்திகேயேன் எப்படி மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து ஒருவர் நடித்து இருப்பதை போன்று நடந்து கொள்வதை போல்.




                                                                                                                          தொடரும் ....

அடுத்த பகுதி

Monday, 31 March 2014

நெடுஞ்சாலை - தமிழில் ஒரு டைப்பான ரோடு மூவி



உதயநிதி வெளியீடு என்று தெரிந்தவுடன் ஏற்கனவே இருந்த ஆவல் அதிகமானது. படம் சில்லுனு ஒரு காதல் இயக்குனர் என்று நினைத்தால், அவர் படத்தின் முன்னோட்டத்துலேயே. அப்படி ஒரு நினைப்பை நம்மிடம்  சுக்கு நூறாக தகர்த்து எறிந்து விட்டார்.

1980களின் நடுபகுதியில் கதை நடைபெறுவது போல இருக்கின்றது. நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளில் உயிர் பணயம் வைத்து கொள்ளை அடிப்பவன் நாயகன், அவனை சுற்றி 3 நபர்கள். அவர்களுடைய பின்னணியே கதை. நாயகனை திருத்த காதல் அதற்க்கு வேண்டும் கதாநாயகி. இவர்களுக்கு காதல் ஏற்பட தேவை மோதல் பின்னர் ஊடல் அதற்க்கு தேவை ஒரு வில்லன். என்று வழக்கமான தமிழ் சினிமா தான் என்றாலும். இயக்குனரின் திரை யுக்தி பல இடங்களில் அசர அடிக்கின்றது. தார் பாய் முருகனாக நாயகன் ஒவ்வொருமுறை கொள்ளை அடிக்கும் போது பின்னணி இசை நெஞ்சை பதற வைத்து , காட்சியின் உள்ளே எளிதாக நுழைய வைத்துவிடுகின்றது. படத்தில் மிக பிடித்தது அவர்கள் கொள்ளை அடிக்கும் காட்சிகள்.

இன்ஸ்பெக்டராக வருபவர் நடிப்பில் புது மொழியை காட்டி உள்ளார். காட்சிக்கு காட்சி பட்டய கிளப்பி உள்ளார். யார் இவர் ???? இனி நிறைய படங்களில் இவரை காணலாம். இவருக்காகவே படத்தை நிச்சயம் காணலாம்.

மற்றபடி படத்தின் திருப்புமுனைகளாக பல காட்சிகள் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும்.

மறந்துட்டேன் இந்தப்படத்தில் வரும் நண்டூருது நரி ஊருது இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு இதுலையே பாருங்க அந்த இன்ஸ் மேனரிசங்களை. பாட்ட தினமும் இப்போ நாலு அஞ்சு தடவ கேட்குறேன்(கேட்க மட்டும் தான் செய்யுறேன்) :)





குறிப்பு : நான் இரண்டுமுறை பார்த்துவிட்டேன் படத்தை. நேரமின்மை காரணமாக விரிவாக எழுத முடியவில்லை. நம்பி போகலாம் கொடுத்த காசு மோசம் போகாது :)

Saturday, 29 March 2014

இனம் - பிழையான படைப்பு

இனம் -

80 நபர்கள் மட்டுமே இருக்கைகள் கொண்ட திரை அரங்கில் இன்று மதிய காட்சிக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து தங்களுடைய இனப்பற்றை காட்டிக்கொண்டோம். உணர்வுபூர்வமான படம் என்று நினைத்த எனக்கு ஏன் வந்திருந்தவர்களும் அப்படி தான் இருந்தனர் முகத்தை விறைப்பாக வைத்து கொண்டு , ஆனால் என்னவோ  பல இடங்களில் நகைச்சுவை படம் போல குட்டி திரை அரங்கமே அதிர்ந்தது சிரிப்பொலியில். சந்தோஷ் சிவன் நம்மிடையே ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பி இருப்பார் போலும் ????


படம் தொடங்கியது முதல் இறுதிவரை எந்தவொரு இடத்திலும் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பதை மருந்துக்கும் கூட கூறவில்லை ஆனால் படம் நெடுக்க இனக்கலவரம் இனக்கலவரம் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக  காண்போரிடம் பதியவைத்து விட்டார். என்ன ***** இனக்கலவரம் , அங்கே மக்களுக்கும் மக்களுக்கும் இடையேவா பிரச்சனை??மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தானே ஒரு அரசாங்கமே (பல நாட்டு துணையுடன் ) தலைமை ஏற்று நடத்திய போரை மிக எளிதாக இனக்கலவரம் என்று எப்படி கூற முடியும். அவர் கூறியது போலவே நானும் கதை கூற வேண்டும் என்றால், ஒரு நாட்டில் இறுதி கட்ட கலவரத்தில் இருந்து தப்பித்து பக்கத்து நாட்டில் தஞ்சம் அடைவோரில் , ஒரு இளம் பெண் ??? அவளுடைய வாழ்வை அவள் பார்வையில் கூறுவதாக படம் இருக்கின்றது.

அதே போல காட்சிகள் நெடுக்க குறியீடு குறியீடு என்று என்னன்னவோ போட்டு பார்வையாளனை (குறியீடு புலிகள் யாரேனும் விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்)  குழப்பி அடித்து உள்ளார், படம் ஆரம்பம் டைட்டில் கார்டில் நான் எதை பார்க்க வேண்டும் என்று குழம்பிவிட்டேன் படத்தில் யார் யார் பங்காற்றி உள்ளனர் என்பதை காண தொடங்கி இவர் அதனூடே போட்ட கார்டூன் குறியீடுகளில் அதைவிட்டு இதை தொடர வேண்டி (ஒரு வேளை படத்திற்கு உதவியவர்கள் என்று யுனிபார்ம் போட்டவர்களுக்கு நன்றி செலுத்தி இருப்பாரோ ???) , இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் போனது தான் மிச்சம்.

சிறுமிகளை (கதை சொல்லும் சிறுமி கூட ) வன்கலவி யுனிபார்ம் போட்டவர்களால் அரங்கேற்ற படுகிறது , அதை மற்றொருவர்  வீடியோ எடுக்கிறார், அப்படியே அருகில் இருக்கும் கேப்டன் பிரசன்னாவிடம் "இதை பற்றி எதாவுது கூறுங்கள் என்று கேட்க , அவரோ என்ன சொல்லுவது இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் தான் ஆனால் போர் இவர்களை மிருகமாக்கி விட்டது "என்று கூறுகிறார். இங்கு இயக்குனர் யாரை நியாயபடுத்துகிறார். கருணாஸ் கதாபாத்திரம் அகிம்சை வழியா ?? போராளிகள் எதிர்ப்பாளரா?? சுயநலவாதியா ?? எது என்பது சந்தோஷ் சிவனுக்கே வெளிச்சம்.

சுனாமி அக்காவாக சரிதா நீண்ட நாள் கழித்து அவரை திரையில் காணவே நிறைவாக தான் இருந்தது அவரின் பாத்திரப்படைப்பும் தெளிவு இல்லாமல் கொன்று விட்டார். சிறுவர்களின் நடிப்பு மிக எதார்த்தமாக அளவாக இருந்தாலும் இயக்குனர் அவர்களுக்கு யதார்த்தம் மீறும் வகையில் திருமணம் செய்து வைத்து முதலிரவு காட்சிகள் கூட வைத்து இருக்கின்றார். இரண்டாம் பாதியில் இவ்வாறான காட்சிகளை காணும் பொழுது இவர் நம் மக்கள் மேல் உள்ள அனுதாபத்தை மறக்கடிக்கவே இப்படத்தை எடுத்து உள்ளார் போல என்றே நினைக்க தோன்றியது. அனுதாபத்தை கூட வெளிக்கொணர முடியாமல் தவிக்கும் என்னை போன்ற சிலரையும் மிக சினம் கொள்ள தோன்றியது.



ஒளிப்பதிவு , இசை , நடிப்பு என்று எதை பற்றியும் கூரவிடாமல் தடுத்து விட்டது இயக்குனரின் நேர்மையற்ற எண்ணங்கள் , அதுவும் அவருடைய சாட்சியாக இப்படம் இருக்க வேண்டும் என்று கூட நினைத்து இருப்பார் போல.

நந்தன் என்ற கதாபாத்திரம் தான் படத்தில் என்னை மிக மிக கவர்ந்தது , அவரை அவ்வளவு மெருதுவாக நடிக்க வைத்து உணர்ச்சி காட்டிய இயக்குனருக்கு ஏனோ உணர்ச்சி இல்லாமல் போனது என்று தெரியவில்லை.

படத்தில் வரும் யுனிபார்ம் போட்டவர்கள் எல்லாம் திடமான ஆண்மகனாக காட்டி விட்டு அவர்களை எதிர்த்து போராடுவோர் அனைவரும் அரும்பு மீசை கூட முளைத்து இருக்காதவர்கள், ஏன் ஒருவேளை ஜூனியர் ஆர்டிஸ்ட் பிரச்சனை இருந்து இருக்கும் போல இயக்குனருக்கு. சந்தோஷ் சிவனிற்கு என்ன பாசமோ தெரியவில்லை நம் தமிழ் மக்கள் மேல் அவரும் விடாமல் நமக்காக எடுத்து கொண்டு தான் இருக்கின்றார், ஆனால் பிழையாக அவருக்கு யாரேனும் இதுவரையில் வந்த சேனல் 4 வீடியோக்களை காட்டி தெளியவையுங்களேன்.

இனம் போன்ற  தவறான பதிவுகள் சாட்சியாகி விட கூடாது, இப்படத்தை கண்டு எல்லோரும் அவரவர்களுக்கான எண்ணங்களை புரிந்து எதிர்ப்பை காட்ட வேண்டும். பின் வரும் தலைமுறையினர் இப்படத்தை கண்டு பிழையானவற்றை தெரிந்து கொள்ளாமல் தவிர்க்க தற்பொழுதைய எதிர்ப்புகளே தெளிவு பெற வைக்க வேண்டும் .

Friday, 21 March 2014

குக்கூ - காவியக் காதல்

சென்னையில் பணிபுரிந்து பொழுது சில மாதங்கள் வேளச்சேரி-மைலாபூர் மின்சார ரயிலில் தான் பயணம் , அப்பொழுது அங்கே ரயிலில்  காணும் மாற்றுதிறனாளிகள் பலரும் தங்களுடைய குறைகள் பற்றி எந்தவொரு கவலையும் இன்றி மிக கலகலாப்பாக தங்கள் பணியை செய்து கொண்டு இருப்பார்கள்.அதை காணும் பொழுதெல்லாம் ஏன் இவர்களுடைய இந்த இன்பமான பக்கங்களை எவரும் பதிவு செய்வதை மறுத்து இருளான பக்கங்களாக காட்டுகின்றனர் என்று தோன்றும்.அதை நிவர்த்தி செய்யும் வகையில் குக்கூ திரைப்படம் அற்புதமாக  பதிவு செய்து உள்ளது.

 வழக்கம் போல கதை சொல்லி உங்களின் சுவாரசியத்தை குறைக்க விருப்பமில்லை. காதல் கதை இருவர் சேர்ந்தார்களா இல்லையா அவ்வளவே. தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் 95% படங்களின் கதை தான் என்றாலும் அதை இயக்குனர் சொன்ன விதத்திலும் , கதாபாத்திரங்களின் நடிப்பிலும்  நமக்கு கிடைத்த அருமையான பதிவு இப்படம். இப்படத்தின் ஆக சிறந்த சிறப்பு ஒரு காட்சியில் கூட நமக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்று திணிக்கப்படவில்லை. கதையை அவர்களின் பார்வையில் யதார்த்தமாக காட்சிபடுத்தி உள்ளனர்.


அட்டக்கத்தி தினேஷ் , பிரமிக்க வைத்து உள்ளார் தன்னுடைய பங்கை மிக சிறப்பாக வெளிகாட்டி உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தமிழ் கதாபாத்திரமாக மனதை உருக்கிவிட்டார். சுந்திரகொடியை முதல்முறை சந்திக்கும் இடத்தில் நக்கல் அடிப்பதும் , பின் அவளின் கைகள் தன்னை தொட்டவுடன் அதில் காதல் உணர்வில் திளைக்கும் காட்சி, அவளோடு வாழ்ந்து விட போராடும் காட்சிகள் என்று தினேஷ் நடிப்பில் இப்படம் என்றும் அவருக்கு ஓர் பொக்கிஷம் தான். பல விருதுகள் நிச்சயம் காத்துக்கொண்டு இருக்கின்றது இந்த படத்திற்காக. நான் உங்களை ஒரு தடவ பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கட்டிபிடித்து உடலை தொடும் காட்சியில் நெகிழ வைத்துவிடுவார். தன்னுடைய இயலாமையை ஒரு காட்சியில் கூட வெளிகாட்டிகொள்ளாமல் பார்வை அற்றவனின் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளார். மொத்தத்தில் இவரின் நடிப்பு கிளாஸ்.

மாளவிகா சுதந்திரகொடியாக தன்னுடைய குறை மறந்து வாழ்க்கையில்  ஆசிரியராக ஜெய்க்க வேண்டும் என்று வாழ்ந்து வருபவர். காதல் தோல்வியின் போது அந்த வலியை நமக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு சிறப்பு தான் ஆனாலும் தினேஷ் நடிப்போடு போட்டி போட முடியவில்லை. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க இவருக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும். பிங்க் கலர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , ஆனா அது எப்படி இருக்கும் என்று கேட்டு கொண்டே அது இளையராஜா பாடல் போல இருக்கும் என்று கூறும் பொழுது கண்கள் கலங்கிவிடுகிறது.


சந்திரபாபு , எம்,ஜி.ஆர் , அஜித், விஜய் என்று இவர்களும் தங்களுடைய நடிப்பை வாரி வழங்கி உள்ளனர் அதிலும் விஜய் -அஜித் வரும் காட்சிகள் அட்டகாசம். சந்திரபாபு தான் அவர்களின் காட்பாதராக இருக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரே காட்சியில் இறுதியில் தான் யார் என்பதை மீண்டும் நிருபித்து இருப்பார் (படத்தை பார்த்து இங்கே நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்). அதுவும் தினேஷின் நண்பராக உடன் வருபவர் அட்டகாசமான நடிப்பு. அவரை எங்கோ பார்த்தது போலவே தோன்றுகிறது வேறு எந்த படத்திலாவுது நடித்து உள்ளாரா???. பின்னர் ஆடுகளம் முருகேஷ் தண்ணி பாரதியாக இசை பிரியராக தினேஷை புகழ்ந்து அவருக்கு உதவும் காட்சிகள் என்று தன்னுடைய இருப்பை சரி செய்து உள்ளார்.

இதுபோன்ற களம் உள்ள படங்கள் பெரும்பாலும் அவர்களை பெரும் வாதைக்கு உள்ளாக்கி நம்மை அழவைத்து விட வேண்டும் என்றே இருந்து இருக்கும். அதை முற்றிலும் உடைத்து புதுமையாக படத்தில் வரும் பெரும்பாலோனரும் நல்லவர்களாக , இரக்கம் உள்ளவர்களாக விபத்து என்றால் உதவி செய்வோர் ,யார் என்று தெரியாத  பார்வையற்ற பெண் என்றாலும் அவருக்கு உதவி செய்வோர்கள் .... இப்படி ஆச்சிரியபடுத்தும் காட்சிகள் அதிகம் உண்டு.இரண்டாம் பாதியின் நீளம் சற்று அதிகம் தான்.

இசை அவ்வளவு அழகாக கதையோடு இழையோடுகிறது , சந்தோஷ் நாராயணன் அவர் மீது   எதிர்பார்ப்பை கூடி உள்ளது என்றால் மிகை இல்லை. பின்னணி இசை உறுத்தவே இல்லை இது போன்ற படங்களில் வயலினை போட்டு தீட்டி எடுத்துவிடுவார்கள் ஆனால் இவர் அழகாக ரசிக்க வைத்து உள்ளார் .அதே போல ஒளிப்பதிவும் ரம்மியமாக கவர்கின்றது , பார்வையற்ற அவர்களின் கரு விழிகளில் கூட கமெரா விளையாடி உள்ளது. அற்புதமான பாடல்களை இவரின் ஒளிப்பதிவில் இன்னும் மெருகேத்தி உள்ளார்.எடிட்டிங் தான் கொஞ்சம் இன்னும் கட் செய்து இருக்கலாம் ஆனாலும் அது குறையாக தெரியவில்லை.


இயக்குனர் ராஜு முருகன் தன்னுடைய முதல் படைப்பை காலத்திற்கும் அழியாத படைப்பாக தந்த வகையில் அழுத்தமான வருகையாக பதிவுசெய்து உள்ளார். படம் ஆரம்பித்தது முதல் பல கதாபாத்திரங்கள் வர தொடங்கியதும் அவர்களுக்கு என்று எந்த முன்னுரையும் காட்டாமல் காட்சிகளின் வழியாக நமக்கு புரியவைத்த இடங்கள் மிக சிறப்பு. இதையும் நீங்கள் காணும் போது உணருவீர்கள். படத்தில் ராஜு முருகன் அவராகவே நடிக்கவும் செய்து உள்ளார் நல்லா தான் இருக்கார். சார் ப்ளீஸ் நீங்களும் அமீர் , சசி குமார் , சேரன் போல வர வேண்டாம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்க வைத்துவிட்டது உங்களின் முதல் படைப்பே.

குக்கூ- காவியக் காதல் , அனைவரும் நிச்சயம் திரை அரங்கில் சென்று காண வேண்டிய திரைப்படம்.

Friday, 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சூப்பர் பீல் குட் மூவி

திரைப்படம் பார்க்கும் பொழுது அதனுள் எளிதாக நாம் உள்நுழைய வேண்டும் அதனோடு பயணிக்க வேண்டும் இறுதியில் அதன் முடிவு நம்மையும் ஈர்க்க வேண்டும் அதை நினைத்து பெருமிதம் கொள்ளவைக்க வேண்டும். அப்படி தான் என்னை உணரவைத்தது நேற்று நான் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம்.


90களின் தொடக்கம் நம் கிராமங்களில் விஞ்சான படைப்புகளின் வருகை ஆரம்பித்த நேரம், அப்பொழுது எல்லாம் போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார்  வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர். அப்படி அதை மற்றவர்கள் உபயோகிக்கும் போது பெருமிதத்துடன் காண்பது அவ்வீட்டில் உள்ளவரின் வழக்கமாக இருக்கும். இந்த அனுபவம் எனக்கும் கூட உண்டு அப்படி அந்த ஊருக்கு முதல் முறை ஒரு சந்தர்பத்தில் கார் அந்த பண்ணையார் வசம் சில நாட்கள் இருக்குமாறு வந்து பின் இறுதிவரை உடன் இருந்ததா என்பது தான் கதை அதை எவ்வளவு சுவாரசியமாக தர வேண்டுமோ அப்படியே தந்து உள்ளனர்.

விஜய் சேதுபதி படத்திற்கு படம் மனிதர் மேன்மை அடைந்து கொண்டே இருக்கின்றார் , வளர்ந்து வரும் ஹீரோ நிச்சயம் இது போன்ற படைப்புகளில் நடிக்க தயங்கவே செய்வர் உதாரணம் சிவகார்த்திகேயன் அவரின் படங்களில் அவரை சுற்றி தான் களம் இருப்பது போல பார்த்து கொள்கிறார் அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் வி.சே படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லோரின் நடிப்பிற்கும் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடித்து தனி ட்ரென்ட் போல உருவாக்கி கொண்டு இருக்கின்றார். உடல் மொழியில் மனிதர் படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பது இவரின் தனித்தன்மையை நன்கு புரியவைக்கின்றது பார்வையாளர்களுக்கு. படத்தில் பண்ணையாரின் மகளிடம் உதவி கேட்க சென்று அக்காட்சியில் விஜய் சேதுபதி வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது. பண்ணையாருடன் சேர்ந்து கொண்டு துளசியை (பண்ணையாரின் .மனைவி ) கலாய்க்கும் இடமும் சுவாரசியமாக இருக்கும். இவரின் காதல் காட்சிகள் திணிப்பு என்றாலும் ஓகே தான். குறையாக தெரியவில்லை.


ஜெயப்ரகாஷ் -துளசி இவர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி தான் படத்தின் மொத்த கதையும். இருவரும் மிக மிக அழகாக நடித்து உள்ளனர். ஒரு படத்தில் ஜெயப்ரகாஷ் நடித்து உள்ளார் என்று தெரிந்தாலே அந்த படத்தின் தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான் அப்படி தான் மூடர் கூடம் படம் எல்லாம் நம்பி போனேன். அவரும் ஒவ்வொரு படத்திலும் அந்த நம்பக தன்மையை என்னுள் அழுத்தமாக நிருபித்து கொண்டே இருக்கின்றார். படம் முழுக்க நடிப்பு வேட்டை நடத்தி உள்ளார். வெள்ளாந்தியாக இவர் கேட்கும் கேள்விகள் , சிரிப்பு ,பார்வை என்று பிச்சு உதறி உள்ளார் , அதுவும் இவர்களுக்கான காதல் காட்சிகளை நமக்கும் உணரவைத்து நம்மை ரசிக்க வைத்த இடத்தில் கிளாஸ் மிக அருமையாக இருக்கும். இவர்களுக்கான அன்னியோன்யம் நிச்சயம் படத்தை காணும் எல்லோருக்கும் பொறமை கொள்ள தான் செய்யும் படத்தின் வெற்றி அதில் தானே உள்ளது.

பீடையாக வரும் பாலா இப்படத்திற்கு பிறகு நிச்சயம் நகைச்சுவை பாத்திரங்களில் தனி வளம் வருவார். இயல்பான காட்சிகளில் எல்லோரையும் இவர் தான் சிரிக்க வைத்து உள்ளார்.சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் பதிந்து போனது இயக்குனரின் தேர்விற்கு கிடைத்த வெகுமதி அதை படம் பார்க்கும் பொழுது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.

இசை ஜஸ்டின்  மண் சார்ந்து மண் வாசத்தோடு இருபது வருடம் பின்னே அழைத்து சென்று விட்டது படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது.கோகுலின்  ஒளிப்பதிவு உறுத்தவில்லை ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம் சில காட்சிகள் ப்ரேமில் செட் ஆகாமல் இருப்பது என்ன யுக்தி என்று தெரியவில்லை. ஒரு வரி கதையை வைத்து அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக எடுத்தால் அதில் மிக மிக முக்கியமான பங்கு எடிட்டிங்க்கு இருக்கும் அது இந்த படத்தில் மிக அருமையாக இருக்கின்றது . ஸ்ரீகர் பிரசாத்திற்கு சொல்லியா தர வேண்டும் ???

இயக்குனர் அருண் குமார்  தன் முதல் வருகையை மிக அழுத்தமாக பதிவு செய்து அதில் நல்ல வெற்றியையும் பெற்று உள்ளார். இயக்குனராக அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி மிக சிறந்த படைப்பாக கொண்டு வந்து உள்ளார்.குறும் படத்தை  எப்படி திரைப்படமாக எடுக்கலாம் என்று பாடமாக  எடுபதற்கு படமாக எடுத்து விட்டார் போல , வாழ்த்துக்கள் அருண்  குமார்.

பண்ணையாரும் பத்மினியும் குடும்பத்தோடு நிச்சயம் எல்லோரும் காண வேண்டிய அருமையான சிறந்த திரைப்படம்.

Friday, 24 January 2014

கோலி சோடா - யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் படம்


விஜய்மில்டன் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களில் பணி புரிந்து இருந்தாலும் இயக்குனராக அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வியாபார ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது ஆனாலும் நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது இயக்கிய படமே கோலி  சோடா அதுவும் அவரின் தயாரிப்பிலேயே துணிவுடன் பசங்க படத்தில் நடித்த பசங்களை கொண்டு எடுத்து உள்ளார்.

படத்தின் முன்னோட்டங்களில் கூட படத்தை பற்றிய சின்ன டீடேயிளிங்  கூறாமல் விட்டது தானோ என்னவோ படம் பார்க்கும் போது அதுத்த காட்சி என்னவாக இருக்கும் எந்தஒரு யூகமும் இல்லாமல் காண முடிந்தது. யதார்த்தமான பாத்திர அமைப்பில் நல்ல ஒரு கமெர்சியல் படைப்பாக வந்துள்ளது.

கதை என்று கூறி உங்களையும் ஒரு யூகத்துக்குள் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. கோயம்பேடு மார்கெட்டில் அவர்களுக்கு  அடையாளம் என்று ஏதும் இல்லாத  மூட்டை தூக்கும் நான்கு இளம் பையன்கள் அவர்களுக்கான அடையாளங்களை தேடி எளிதாக பெற்று பின் எதிர்பாராமல் அதை பெரும் வலியுடன் இழந்து மீண்டும் பெறுவது தான் கதை. புரியாதவங்களுக்கு படம் பார்க்கும் போது நிச்சயம் புரிந்துவிடும்.


பசங்க படத்தில் நடித்த அந்த முக்கியமான நான்கு சிறுவர்கள் தற்பொழுது இந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வளர்ச்சியை பெற்று இருந்த காரணத்தினாலோ அவர்களையே நடிக்க வைத்துவிட்டனர். அந்த பையன்கள் மிக சிறப்பான நடிப்பை தந்து உள்ளனர் அதுவும் அவர்களுக்கென்று நிறைய மாஸ் சீன்கள் கூட இருக்கின்றது. கதைக்கு ஏற்றவாறு அவைகளும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது. அதுவும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கின்றது பசங்களிடம். உணர்வுள்ள காட்சிகளில் அவர்கள் கலங்கும் போது நிச்சயம் நாமும் கலங்கி தான் போகின்றோம்.

ஆச்சியாக பருத்திவீரன் சுஜாதா நடித்துள்ளார் மிக யதார்த்தமான அளவான நடிப்பு , தன் பெண்ணையும் உடன் வேலை  செய்யும்  அந்த நன்கு பசங்களையும் வாஞ்சையுடன் நேசிக்கும் போது நல்ல பாத்திரமாய் நெஞ்சில் பதிந்து போவது சிறப்பு.

இமான் அண்ணாச்சி பசங்கள் உடன் தங்கி வேலை செய்து கொண்டு அவர்களுக்கு அவ்வப்போது உதவி கொண்டும், முதல் பாதியில் கானா பாலா பாடிய பாடல்கள் இவர் பாடுவது போல வந்து குதுகலிக்க வைத்தது அதுவும் பாடல்கள் கானா பாலாவின் குரலில் மிக அருமையாக இருந்தது. அண்ணாச்சி அனைத்து காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்தாலும் , சில நொடியே பாடலில் வரும் ஒரு காட்சியில் அவரின் சோகத்தை காட்டி உருக்கி விட்டனர்.

நாயுடுவாக வருபவர் தான் பசங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தருபவர் , மார்கெட்டின் சங்க தலைவராக செல்வாக்குள்ள மனிதராக கச்சிதமாக கதையில் பொருந்தி போகி காட்சிகளுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து உள்ளார் அவரின் மச்சானாக வரும் மயில் கூட லோக்கல் ரவுடி எப்படி இருப்பானோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நாயுடுவின் மனைவிகளாக ஆம் அவருக்கு இரண்டு மனைவிகள் வருபவர்களும் கணவனின் கம்பீரத்தை தாங்களும் ஏற்று அவாறே நடந்து கொண்டனர், அதிலும் மீனாள் சில காட்சிகளில் தூள் சொர்னாக்காவை மிஞ்ச பார்த்துள்ளார்.

ஆச்சியின் மகளாக வருபவர் அழகு, பசங்களுக்காக உருகுவதும் அந்த வயதுக்கு ஏற்ற காதலில் விழும் போது நம்மையும் விழுங்கிவிட்டார் மென்மையாக. பசங்களின் முதல் தோழியாக வருபவர் அழகில்லை என்று படத்தில் அவளே கூறினாலும் காணும் நமக்கு நிச்சயம் அந்த வலி தெரியும் அதுவும் அதற்காக அந்த பெண் கூறும் பதில் "என்னால தப்பு நடந்து இருந்தா நான் கவலை படனும் , யார் செஞ்ச தப்போ " என்று சர்ச்சில் கூறும் பொழுது செவுட்டடியாய் இருந்தது. பசங்களுக்காக அந்த தோழி முயற்சி எடுக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவளையும் மதிக்க  தொடங்கிவிடுவோம்.

படத்திலேயே மிக சிறந்த காட்சிகள் என்றால் அவர்கள் பெற்ற அடையாளத்தை எப்படி இழக்கின்றனர் என்று இடைவேளைக்கு முன் வரும் போது , அங்கே தான் படம் கமெர்சியல் என்பதையும் மீறி எல்லோர் ஊர்களிலும் எளியோர்கள் வளியோர்களால் படும் வேதனைகளை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து தனி இடம் பிடிக்கிறது. அதன் பின் அவர்கள் அதை திரும்ப பெற கமெர்சியல் சினிமா என்ற மாயயைக்குள் சிக்கினாலும் நம்மை பரிசோதிக்காமல் இனிதே சென்றவகையில் நல்ல படமாகிவிட்டது.

வசனம் மிக பெரிய பலம் படத்திற்கு பாண்டியராஜ் பட்டைய கிளப்பிவிட்டார், ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வையும் அபத்தங்களையும் சோகங்களையும் பிரதிபலித்தது. அதுவும் ஆச்சியிடம் பசங்கள் தாங்கள் ஏன் இப்படி இருக்கின்றோம் என்று கூறும் இடம் மிக அருமையாக இருந்தது. டாஸ்மாக் சில்மிஷங்கள் என்று பல அபத்தங்களை வசனம் மூலம் போகிற போக்கில் தெளித்துவிட்டு போகிறார். பசங்களுக்கு என்று வரும் மாஸ் காட்சிகளில் அவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாக கையாண்டு நம்மையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடும் இடத்தில் வெற்றி பெற்று விட்டார் பாண்டியராஜ்  வசனகர்த்தாவாக.

ஒளிப்பதிவு ஷூட்டிங் சென்று படம் பிடித்தது போல் அல்லாமல் கதை களங்களில் கேமரா பதுக்கி வைத்துவிட்டு எடுத்தது போல இருந்த இடத்திலும் இந்த படம்  கமெர்சியல் படமா என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது. பாடல்கள் என்று தனியாக காட்சியை விட்டு இல்லாமல் கதையோடு உணர்ந்து  காட்சிகளோடு இனைந்து உறுத்தாமல் இருந்தது. மீண்டும் கூறுகிறேன் கானா பாலா பாடல் அருமை. பவர் ஸ்டார் ஒரு பாடலில் பவராகவே &  நடன இயக்குனராக சாம் அன்டேர்சன் உடன்  வந்து சிரிக்கவைக்கிறார்.

படம் முடிந்து கோயம்பேடு மார்கெட்டை  பார்க்க  வேண்டும் என்ற ஆவல் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு நிறைவுடன் வந்தேன் . நிச்சயம் இது தவிர்க்க வேண்டிய சினிமா இல்லை ஒரு தடவை ஆச்சும் எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா கோலி சோடா , யதார்த்த பாத்திர படைப்பில் கமெர்சியல் கலவை.

பின் குறிப்பு :
1. மொத்தம் இரண்டு பேர் மட்டும் தான் இன்று பார்த்தோம் அதுவும் நான் சென்று டிக்கெட் எடுக்கும் போது இன்னொருவர் வந்தால் தான் என்று வழக்கம் போல கூறிவிட காத்திருந்து ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்வமுடன் அண்ணே என்ன படம் என்று பதட்டத்தில் கேட்டு (ஜில்லா வீரம் வேற ஓடிட்டு இருந்தது ) கோலி சோடா என்று கூறியவுடன் திருப்தியுடன் சென்றோம். அவருக்கு இது போல 600 நபர்கள் கொள்ளளவு கொண்ட திரை அரங்கில் வெறும் இரண்டு நபர்கள் மட்டும் காண்பது முதல் முறை போல . நமக்கு மூடர் கூடம் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , என்றென்றும் புன்னகை என்று பழகிடுச்சு. 

Wednesday, 8 January 2014

வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி

தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை  பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும்  இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. 

வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)


இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற  பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.

நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)


ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை  நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக  சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக  தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)


தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)


ரஜினி-கமல் அடுத்து  அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு  இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை  பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.

வில்லன் -பகவதி (2002)


அஜித் அவர்கள்  வித்தியாச முயற்சி , காதல்  , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால்  பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.

திருமலை -ஆஞ்சநேயா (2003)


அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.

பரமசிவன் - ஆதி (2006)


அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும்  மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு  இருந்த வரலாறு  பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின்  தயாரிப்பில்  நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு  அவரேஜ் படமாக தான் போனதே  தவிர  நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில்  தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று  மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.

ஆழ்வார் -போக்கிரி (2007)


வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


அதை  தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை  காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும்  வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே தள்ளிவிட்டது.  எப்பொழுதும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி   தான்  அதே  நம்பிக்கையில்    தான்  அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு  வித்தியாசமும்  தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும். 

ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி  படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங்  என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது    விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித்  ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா  வெற்றி பின்   தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார  கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த  ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.

ஜில்லா- விஜய்க்கு அவசியம்  தேவையான முக்கிய வெற்றி 

வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி 

பின் குறிப்பு :

1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.

2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன். 

Saturday, 21 December 2013

பிரியாணி- வெங்கட் பிரபு டயட்

எப்பொழுதுமே வெங்கட்பிரபு படம் என்றாலே எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு அதை நான் எப்பொழுதுமே நான் விரும்புவேன் , எப்படியும் கண்டுவிடுவேன் கோவா உள்பட எனக்கு பிடித்ததே ஆனால் அதில் ஓரு சூட்சமம் உள்ளது அதை இப்படத்தில் தான் உணர்ந்தேன் அதை உங்களுக்கு இறுதியில் கூறுகிறேன்.அப்படி ஒரு ஆர்வத்தில் இன்று மதியம் 12.00 மணி காட்சி காண சென்றேன் பிரியாணி ஆனால் நான் சென்று டிக்கெட் எடுக்கையில் யாரும் முன் இல்லை அதனால் என்றென்றும் புன்னகை போங்க அப்படின்னு டிக்கெட் கொடுப்பவரு சொல்ல வேற வலி இல்லாம அதை எடுத்து வர, ஒரு ஜோடி கண்ணுல தென்பட கேட்டா பிரியாணி அப்படின்னு சொன்னாங்க. அது போதுங்க அப்படின்னு டிக்கெட் மாற்றி பார்த்தேன் இன்னைக்கு பிரியாணி.

படம் தொடங்கியதில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தது பின் தேவை இல்லாத விரிவு போல இலுவையோ இழுவை இடைவேளை முன் ஒரு 15 நிமிடங்கள் வரை அப்புறம் சரியான செம்ம ட்விஸ்ட் இடைவேளை முடிந்து ஆரம்பம் ஆர்வமாக தொடங்கியது பின் வழக்கமாக இழுவை தேவை இல்லாத டீடெய்லிங்க் கடைசி 30 நிமிடங்கள் செம்ம ட்விஸ்ட் பரபர செம்ம ஆர்வம் பார்க்கும் பொழுது அங்கே வெற்றி பெற்று விட்டார் வெங்கட் பிரபு.


பிரியாணி தேடி சென்று அதனால் பெற்ற வினையே படத்தின் கதை. இந்த விஷயம் நாம படம் பார்க்கின்ற போது  30 நிமிடங்களுக்கு மேல் தான் தெரிய வரும் ஆனா அதற்க்கு முன் வந்த காட்சிகளின் முக்கியத்துவம் படத்தின் கடைசி 30 நிமிடங்களில் வெறும் முடிச்சி அவிழ்த்து நம்மக்கு புரிய வைக்கும் பொழுது கண்டிப்பாக வெங்கட் பிரபு திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

கார்த்தி தன்னுடைய பங்கை வெகு சிறப்பாகவே செய்து உள்ளார் நடனம் தவிர மற்றும் அவர் ஒரு காட்சியில் சிங்கம் சூர்யா போல  வருவது செம்ம காண்டு ஏன் தேவை இல்லாமல் அவருக்கு விளம்பரம். ப்ளே பாய்  பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். தன் அக்காவை கடத்தி செல்லும் காட்சியில் தன் இயலாமையை நினைத்து வருந்துவது கூட மிக நன்றாக செய்து இருப்பார். ஒரு கதாநாயகனாக தன்னுடைய வேலையை சிறப்பாகவே புரிந்துள்ளார், 3 தோல்வி படங்களை தந்து விட்ட அவருக்கு இப்படம் நல்ல ஒரு ரிலீப் தந்து இருக்கும்.

பிரேம்ஜி  இதுவரை வந்த வெங்கட் படங்களில் என்ன பாத்திரமோ அதையே செம்மையாக செய்து உள்ளார் , ஆனால் இது தான் அவருக்கு கடைசி இதற்க்கு மேல் பொறுமை காக்க நமக்குவழி  இல்லை. ஒரே முகபாவனைகள் அப்படியே தயவு செய்து மாற்றுங்கள் வெங்கட் உங்கள் தம்பி என்பதற்காக எல்லாம் பொறுத்து கொள்ள இயவில்லை. ஆனாலும் சில காட்சிகள் நான்றாக தான் இருந்தது, குறிப்பாக சிங்கம் சூர்யா வேடம் அவருக்கு அப்போ கமல் புலி வேடம் பிரேம்ஜி க்கு  அது நன்றாகவே இருந்தது மற்றும் சில காட்சிகளின் பாவனைகள்.

ராம்கி நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அருமையான ரீஎன்ட்ரி, தன்னுடைய வேலையை காண கச்சிதமாக புரிந்து உள்ளார். கதை இவரை மையம் கொண்டே செல்லும் இரண்டாம் பாதியில் ஆனால் இறுதியில் வரும் சஸ்பென்ஸ் செம்ம. ஹன்சிகா ஊறுகாய் அவ்வளவே செம்ம அழகு ஆனாலும் அந்த ஹோட்டல் பாட்டுக்கு வருபவர் செம்மையோ செம்ம ஒரு சாங் ஆனாலும் செம்ம. நாசர் பேசவே இல்லை ஆனாலும் படம் முழுக்க இவரை சுற்றியே. ஒரே வருத்தம் சம்பத் மற்றும் ஜெய் பிரகாஷ் இவர்களை ஏன் இப்படி வீணாக்கினார் வெங்கட் ஸோ சேட். சம்பத்தின் நண்பராக வருபவர் சரியான ட்விஸ்ட் க்கு உபயோகம் இப்படி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.


எனக்கு மிக பெரிய ஏமாற்றம் முதல் முறை யுவன்-வெங்கட் தோல்வியே அதுவும் 100வது படத்தில் முதல் பாடல் தவிர வேறு ஒன்றும் மைண்டில் இல்லை ஆனால் வழக்கம் போல பின்னணி  கலக்கல். அந்த டிக்கெட் வர பாடல் கூட யோசிச்சாலும் வரலை ச்சும்மா கோடான கோடி  பாடு போல வர வேணாம் , என்னமோ போங்க யுவன்.

கேமரா விறு விறு  சரவணன், வெங்கட் படம்னாலே பிச்சி எடுத்துடுவார் போல முதல் காட்சி கார் ஜம்ப் அப்போவே வாய் பிளக்க வச்சிட்டார் அப்புறம் வர அனைத்து சேசிங் காட்சிகளும் மிக அருமையாக செய்து உள்ளார்.

ஆக பிரியாணி படம் பொருத்தவரை கண்டிப்பாக பார்க்கலாம் , அதுவும் வெங்கட் படம் பிடிக்கும் என்பவருக்கு நிச்சயம் பிடிக்கும். சரோஜா பிடித்தவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும். இரண்டாம் பாதி படம் நன்றாக இருந்தால் பிடிக்கும் என்பவருக்கு கண்டிப்பாக நீங்கள் காண செல்லலாம்.


எனக்கு இந்த படத்தில் புதிதாக தோன்றியவை வெங்கட் பிரபுவிடம்

1. இவருக்கு ஸ்டார்டிங் ப்ரொப்லெம் அப்படியே போக போக பிக் அப்  ஆகும் படம் நல்லா கவனிச்சி பார்த்தா முன்ன வந்த இவர் படம் கூட அப்படி தான் இருக்கும் மங்காத்தா கூட.

2.முதல் பாதியில் பிடிக்க வில்லை என்றாலும்  தேவை இல்லாத விரிவாக்கம் தருகிறார் எல்லோருக்கும் முன்ன வந்த கோவா படத்துலையும் அப்படி தான்.

3. வெங்கட் பிரபு அவருக்கு முன்ன விட பின்ன தான் ரொம்ப பிடிக்கும் போல அதனால தான் அவர் படத்துல முன்னடிய விட பின்னாடிய ரொம்ப ரொம்ப நல்லாவே காட்டுறார். ( நான் முன் பகுதி பின் பகுதிய சொல்லுறேன் நீங்க வேற எதுவையும் நினைக்காதீங்க )

4.கண்டிப்பா மிக மிக திறமை உள்ளவர் என்பதும் புலப்பட்டது . ரெண்டு மணி நேரம் கடுப்பாகிய படத்தை கடைசி அரை மணிநேரத்தில் எல்லாம் தேவை என்று நமக்கு புரிய வைத்ததில்.

5. செல்வராகவன் படம் ஆரம்பம் முன் பகுதி மிக பிடிக்கும் என்று எல்லோரும் சொல்லுவர் அது போல இப்போ வெங்கட் பிரபு படம் பின் பகுதி எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லுகின்றனர்.

Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு :

இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.

இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும்   மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல  என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல்  நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.


படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை  பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று  காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.

ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.

அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின்  கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம்  குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.


பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.

இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை  தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.

சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது  போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்



பின்குறிப்பு :

1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை  மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள்  என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.

3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.

Friday, 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)