Sunday, 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்


தன்னுடைய முதல்படம் தொடங்கி இன்றுவரையில் அவரின் அனைத்து 6 திரைப்படங்களிலும் (முகமூடியிலும்) தன்னுடைய தனித்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார் , அவரின் கிளிஷேக்கள் கிண்டல் அடிக்கபட்டாலும் அதை தவிர்க்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இயக்குனர் என்று ஒரு குழுவின் தலைவனாக திரைப்படத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி , பாமரனுக்கும் இது மிஷ்கின் படம்பா என்று சொல்லாமல் புரியவைத்தது உள்ளார்.  இவரின் இருளுலக  படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்திற்கு காத்திருந்து சென்றேன்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் , கதாநாயகி இல்லை என்றால் பிரபல நாயகி இல்லாமல் (சூது கவ்வும் படத்துக்கு கூட சஞ்சீதா ரெட்டி தேவைப்பட்டு இருந்துச்சு பார்த்துக்கோங்க ) நாயகன் என்று ஒருவனை முன்னிறுத்தி பயணிக்காமல்.நீண்ட நாட்களுக்கு பிறகு  , என்ன கதையோ எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை எந்தவொரு சமரசமும் விட்டு கொடுத்தாலும் (முன்பு மிஷ்கினின் நந்தலாலா தவிர அனைத்திலும் சமரசம் செய்து இருப்பார் ) இல்லாமல் நேர்மையாக வழக்கமான மிஷ்கினின் கிளிஷேவுடன் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் அமர்ந்து இருந்த எனக்கு மிஷ்கின் விருந்து படைத்தார் என்றே சொல்ல வேண்டும், காட்சிக்கு காட்சி மிரள வைத்தது படத்தின் மேகிங், முதலில் சாலையில் தொடங்கும் காட்சி குண்டு துளைக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பவனை(ஓநாய் ) , எல்லோரும் எவ்வாறு அணுகிவிட்டு செல்கின்றனர் என்ற காட்சி அமைப்பு சமகால நிகழ்வுகளை வேதனை பகடி செய்கின்றது. அதிலும் ஒரு இளகிய மனம் கொண்ட மருத்துவ மாணவன் (ஆட்டுக்குட்டி ) அவனை காப்பாற்றுகிறது. பின் தொடர்ந்து அதனால் வரும் இன்னல்? ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று இயக்குனர் மிஷ்கின் நடத்திய வேட்டை தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

தமிழ் திரைப்படங்களில் இந்த படத்தின் திரைக்கதைக்கு தனி இடம் நிச்சயம் உண்டு, சர்வசாதரணமாக 2 மணிநேரம் பார்வையாளர்களை கட்டி போட்டுவிடுகிறார், பின் மீதி 20 நிமிடங்கள் அதுவரை இருந்த ஆர்வத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று அட்டகாசமாக வெற்றி கண்டுவிட்டார் மிஷ்கின்.

படத்தின் மொத்தமே எல்லோரும் பேசும் வசனங்களை பார்த்தல் 20 முதல் அரைமணி நேரம் தான் இருக்கும் , மீதி உள்ளவை அனைத்தும் இளையராஜாவின் ராஜாங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு (நந்தலாலா) அவரிடம் 20 வருடதுக்கு முந்தைய இசையை உணர முடிந்தது. கல்லறையில் நடைபெறும் காட்சி பின் கார் பார்கிங்ல் வரும் காட்சிகள் இசையில் உருக வைத்துவிட்டார். பின்னே படம் முழுக்கவும் இசை தனியே தெரியாமல் படத்தோடு பயணித்தது மிஷ்கின் & இளையராஜா இருவரின் நேர்மை வெளிப்பட்டது.

ஒளிப்பதிவு மிஷ்கினின் படங்களில் மிக சிறப்பான இடம் பெரும் என்பது எல்லோரும் அறிந்ததே அதிலும் இதில் பாலாஜி வி ரங்கா எனும் புதியவரின் ஒளியில் இருளை அழகாக்கி திரையில் விரித்து உள்ளார், குறிப்பாக கார் பார்கிங் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது , ட்ரைன் காட்சிகள் யதார்த்தமாக நம்மை நம்ப  வைத்தது இவரின் சாதுர்யம். அதே போல பல காட்சிகள் ஒளிபதிவில் புதுமை புகுத்தி உள்ளனர் அது வித்தியாச கோணங்கள் , லைடிங்கில் , என்று. எப்பொழுதும் மிஷ்கினின் படங்கள் ஒளிப்பதிவில் அவரின் அதுவரை படங்களை முந்தும் அதுபோலவே இப்பொழுது இது முதலிடத்தில் உள்ளது.

ஓநாயாக மிஷ்கினும் ஆட்டுக்குட்டியாக  ஸ்ரீயும் புலிகளாக காவல்துறையினர்களும் , கரடியாக தம்பா ஓநாயின் தலைவனும் , என்று அனைவரும் இயல்பு மீறாத நடிப்பில் பதிவு செய்கின்றனர் இவர்களை மீறி சில வேறு மென்மையான  ஆட்டுக்குட்டிகள் நெஞ்சில் பதிந்து போனது வழக்கமான மிஷ்கினின் வகையறா. இதில் ஒரே விதி  விளக்கு சாஜி சுத்தமாக பொருந்தவில்லை மிஷ்கினின் இது போன்ற பாத்திரங்கள் அற்புதமாக பொருந்தி போகும் அஞ்சாதே நரேன் , யுத்தம் செய் ஜே.பி ஆனால் இதில் தவறி போனது. அவரின் உடல்மொழி கூட அன்னியமாக பட்டது.


மிஷிகின் நடிப்பில் நந்தலாலாவை மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும் அதிலும் இதில் ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள் தான் பெரும்பாலும் ஆனால் கல்லறையில் வரும் ஒரே ஷாட் காட்சி இப்படத்தின் உச்சம் குறைந்தது 4 முதல் 5 நிமிடங்கள் உறையவைத்து விடும், அதுவரை படம் பிடிக்காதவருக்கு  (வாய்ப்பில்லை இருந்தும் சிலருக்கு ) கூட இந்த காட்சிக்கு பிறகு பிடித்துவிடும் என்பதை விட படத்தினுள்  உள்ளே இழுத்துவிடும். அவ்வளவு அற்புதமான காட்சி.

மருத்துவ மாணவர்கள் போதை மருந்து சர்வ சாதரணமாக உபயோகிப்பதை , அலட்சியமாக பதிவு செய்து உள்ளார். அதில் எந்த தர்க்க நியாயமும் கூறவில்லை ஏன் அந்த மருந்து தான் அடிபட்டவனை காக்கின்றது ஒரு வகையில்.

வில்லனை (கரடி) எழுந்து நடக்க கூட இயலாதபடி ஆரம்பம் முதல்  இறுதிவரை நோயாளியாக(ஓநாய் கடித்து குதறியதால் )  காட்டியது புதுமை.

சிறுமி தன் உடன் இருந்த சித்தி இறந்த பின்னும் கதை சொல்ல சொல்லி கேட்பது நமக்கும் அனுதாபம் ஏற்படும் .

பார்வை அற்றவர் துப்பாக்கியை மேல் நோக்கி சிரித்துக்கொண்டே சுடுவதும் தொடர்ந்து தானும் இறப்பதும், பல அர்த்தங்களை கூறிவிடுகிறது.

படத்தில் மரணிக்க போவோர்கள்  இறக்கும் தருவாயில் அதுவரை தன் வாழ்க்கையில் எவரை நினைக்கின்றனரோ அவர்களின் பெயரை சொல்லிவிட்டு இறப்பது போல காட்சிபடுத்தியதும் உணர்ச்சியின் அழகு.

படத்தின் குறை என்று எனக்கு படுவது பெரிதாக இல்லை என்ன அறுவை சிகிச்சை செய்து சில நிமிடங்களில் நேரங்களில்  ஒருவர் இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள முடியுமா ? இப்படி எல்லாம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முடியுமா என்று படத்தின் முதல் 20 நிமிடங்கள் அப்பொழுதே யோசிக்க வைத்தது. இவை தவிர அந்த புலி ஷாஜி நடிப்பு அவரின் தேர்வு.

திரைஅரங்கில் பார்க்கவேண்டும் என்றும் மக்களை இழுக்க வேண்டும் என்று எங்கள் படத்தில் இந்த சவுண்ட் சிஸ்டம் முதல் பயன் படுத்தி உள்ளோம் , சில காட்சிகள் இப்படி எடுத்து உள்ளோம் , vfx படத்தில் நிறைய உள்ளது என்று விளம்பர படுத்துவோருக்கு மத்தியில். அமைதியாக எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் பெரியதாக இல்லாமல் வெளியீடு கண்ட இப்படத்தை திரைஅரங்கில் மட்டுமே முழுமையாக கண்டு ரசிக்க முடியும் , நிச்சயம் வேறு எதிலும் அந்த அனுபவத்தை பெற்றுவிட முடியாது. இந்த படத்தை பொருத்தவரை எப்படியாவது திரை அரங்கிற்கு இழுக்க வேண்டும் , அவர்கள் உள்ளே வந்தால் போதும் மிஷ்கினின் திரை மொழி நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் கட்டி போட்டுவிடும்.

இறுதியில் படம் முடிந்து எல்லோரின் பெயர்களை தொகுக்கும் பொழுது அவரவரின் பாத்திரங்களுக்கு ஏற்ப ஓநாய் , ஆட்டுக்குட்டிகள் , புலிகள் , கழுதை புலிகள் என்று மிருகங்களின் பெயர்களை கூறியதும் எல்லோரையும் போட்டுவிட்டு அதுவே இரண்டு நிமிடங்களுக்கும் மேல் பின் கடைசியாக இணைய இயக்குனர் புவனேஷ் என்று பெருமை படுத்தி விட்டு இறுதியாக

எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடித்துவிட்டு வந்தேன்.

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்
---------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :(படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும்)

*சிங்கப்பூரில்  எப்பொழுதும் எதிர்பார்ப்பு உள்ள சிறு முதலீடு கொண்ட திரைபடங்கள் கூட எளிதாக  வெளியீடு கண்டுவிடும் ,ஆனால் அதை நாம் காண ஞாயிறு தவிர மற்ற நாட்கள் பெரும்பாடு படவேண்டும் . அதுபோலவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டு திரைஅரங்கில் வெளியாகி விட்டது, அதை நான் காண்பதற்கு வழக்கம் போலவே பெரும் பாடுபட வேண்டியானது.முதலில் சென்ற திரை அரங்கில் வெள்ளிகிழமை ஆள் இல்லை என்று கூற சரி அடுத்த காட்சிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால் அதற்கும் இல்லை ஷோ நேரத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட கடுப்பாகி , அடுத்த திரைஅரங்கு சென்று(இந்த இடம் பெயரே லிட்டில் இந்தியா அதனால தமிழர்கள் நிறைந்து இருப்பர்  ) அங்கும் இதை போலவே கூற வேறு வலி இல்லாமல் என் நண்பனை வர சொல்லிவிட்டு காத்திருந்து படத்தை பற்றி நண்பர்களிடம் செல்லில் பயங்கர பப்ளிசிட்டி போல கொஞ்சம் சத்தமாக பேச , ஒரு சில புண்ணியவான்கள் எப்படியோ டிக்கெட் எடுத்துட்டாங்க , ஒரு படம் பார்க்க எவ்ளோ வேலை பண்ண வேண்டியது இருக்கு அப்படின்னு நினைச்சிடே உள்ளே போனோம் நானும் என் நண்பனும் (அவனும் என் மேல் செம்ம காண்டாகி இருந்தான் ராஜா ராணி டிக்கெட் என்று வர சொல்லிவிட்டு இதை காட்டினேன் அதனால் )

*இறுதியில் எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடிக்கும் பொழுது ஒரு ஜோடி எங்களோடு இருந்து, பையனை வழுக்கட்டாயமாக நிற்க சொல்லி அந்த பெண் பார்த்து சென்றது ஆச்சிரியமாக இருந்தது.

*பிடிக்காமல் படத்திற்கு உடன் வந்த நண்பன் முடிந்து சூப்பர் படம் மச்சி அஞ்சாதே வராம இல்லை அந்த படத்த பார்க்காமா இத பார்த்தா இன்னும் மிரட்சியா இருக்கும் என்று பாராட்டு பத்திரம் வாசித்தான்.

Saturday, 14 September 2013

மூடர்கூடம் - புதியமுயற்சி நல்ல முயற்சி


இத்திரைப்படத்தை பற்றி கூறுவதற்கு முன் இன்று  நான் இத்திரைப்படத்தை காண சென்ற திரைஅரங்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வை கூர் வேண்டும் , வேலை முடிந்து 12 மணி காலை காட்சிக்கு என் பணியிடம் அருகில் உள்ள கோல்டன்  திரைஅரங்குக்கு  சென்றேன் (சிங்கப்பூரில் ரெக்ஸ் சினிமாஸ் & கோல்டன் டிஜிட்டல் இந்த இரண்டு மல்டி திரையரங்குகளில் மட்டுமே எப்பொழுதும் தமிழ் படம் வெளியிடு காணும், சில பல பெரிய படங்கள் நிறைய பெரிய திரையரங்கில் வெளியாகும் ).  மூடர் கூடம் வெளியாகி இருந்தது , தங்கமீன்கள் 15 நாட்களை தாண்டியும் ஓடி கொண்டு இருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக ஆனந்தமாக இருந்தது . டிக்கெட் தருமிடம் சென்று மூடர்கூடம் ஒரு டிக்கெட் இந்த ஷோ என்றேன் , அதற்க்கு அவர் தம்பி ஆளு இல்லப்பா ஷோ கிடையாது என்றார் , அட என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசுறிங்க என்று நக்கல் கலந்து கேட்டு  தாருங்கள் என்றேன் , அட நீங்க மட்டும் தான் ஒரு மூணு பேர் இருந்த கூட ஓட்டுவோம் வேணும்னா தங்கமீன்கள் , வ.வா.ச டிக்கெட் தருகிறேன்   என்றார் பாருங்கள் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை , என்னடா இது ஒருத்தன் கூட வரமாட்டான என்று சிறிது நேரம் பார்த்துவிட்டு ஷோ கான்செல் என்று சொல்லிவிட்டார் வேறு பின் சற்று அருகில் உள்ள ரெக்ஸ்சில் பார்த்தேன். இது போல் எனக்கு நடப்பது முதல் முறை.

தமிழ் சினிமாவில் என்னடா ஒரே மாறி படம் வந்துட்டு இருக்குனு நினைத்தால் , உடனே சென்று மூடர் கூடம் காணுங்கள் , சூதுகவ்வும் படம் போல தான் என்றாலும் இதில் இயக்குனர் பரிமாறிய விதம் முற்றிலும் புதுமை. படத்தில் ஒரு காட்சி கூட காமெடி என்று நினைத்து பேசுகிறேன் , கலாய்க்கிறேன் , பார்வையாளர்களை சிரிக்கவைக்கின்றேன் என்று சுத்தமாக இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டார்க் காமெடி டைப் படம் தமிழில்.

இயக்குநரி பல யுக்திகள் நம் சினிமாவுக்கு புதுசு ஒன்று மட்டும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது , அது படத்தில் உள்ள 5 பாடல்களிலும் 5 நபர்களின் முன் வாழ்கையை கூறிவிடுகிறார் அதாவுது பிளாஷ் பேக் என்று தனியாக காட்சி படுத்தாமல் படைகளில் கூற நாமும் வெளியில் செல்லாமல் பார்த்துவிடுவோம் , அதுவும் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய கடைசி பாடல் அது யாருடைய முன் வாழ்கை என்ற நான்  கூறிவிட்டால் உங்களுக்கு ஒரு எக்சைட்மெண்ட் போய்விடும் , நீங்களே காணுங்கள் அனுபவியுங்கள்.

அதே போல கதை என்று எல்லாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை , வாழ வழி இல்லாத நாலு பேர் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க சென்று ஒரு நாள் அந்த வீட்டில் நடப்பவையே படம் , இதை எவ்வளவு சுவாரசியமாக தர முடியுமோ அதில் 80 சதவீதம் இயக்குனர் தந்து உள்ளார் , மீது இருபது சதவீதம் குறை தான் கொஞ்சம் இழுக்கின்ற போன்று தோன்றியது முதல் பாதி மற்றும் சில வேண்டாத காட்சிகள் , என்று இருந்தாலும் இப்படம் நிச்சயம்  ஒரு பீல் குட் மூவி என்று நினைக்க தோன்றும்.

இயக்குனர் நவீன் நவீனகவும் , குபேரன் , வெள்ளை , சென்ராயன் என்று அந்த நான்கு பேர் நன்றாக நடித்து இருந்தாலும் , என்னை மிக கவர்ந்தது சென்றாயன் பிச்சி புகுந்து விளையாடி இருக்கார், ஓவியாவிடம் வளியும் போதும் , ஆஊனா எல்லோரையும் தலை கீழாக நிக்க சொல்லுவது (அவர் தரும் தண்டனை :) ) பட்டய கிளப்பிருக்கர் , இயக்குனர் நவீனின் வசன உச்சரிப்பு மிக பிடித்து இருந்தது , பல காட்ச்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். வசனம் இல்லாத காமெடிகலும் அதிகம் இப்படத்தில் உடல்மொழி , அவர்களின் சூழ்நிலைகளை காண்போருக்கு இவ்வளவு நகைச்சுவையாக காட்டி இருப்பது முற்றிலும் புதுசு.

ஒளிப்பதிவு மிக நிறைவாக இருந்தது , இப்படத்திற்கு ஏற்றாது போலவே அதுவும் டார்க் டைப் என்று அனைத்தும் டார்க் தான் ஆனால் காணும் நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். எடிட்டிங் கச்சித்தமாக நறுக்கி இருக்கின்றனர். மியூசிக் புதியவர் உறுத்தல் தெரியவில்லை என்றாலும் இன்னும் நன்றாகவே இருந்து இருக்கலாம்.

வசனம் மிக முக்கியம் , இயக்குனர் பல விஷயங்களை வசனங்கள் வாயிலாக  இப்படத்தில் தொட்டு பேசி உள்ளார் , உலகமயமாக்குதல் , குழந்தை வளர்ப்பு முறை , ஏழை பணக்காரன் வித்தியாசம் , காதல் , மொழி பற்று என்று ,அதற்கு அவர் தரும் விளக்கங்கள் வசனங்கள் காட்ச்சிக்கு சில திணிப்பாக இருந்தாலும் , ரசிக்க முடிந்தது.

ஒரே ஒரு சாம்பிள் " ஒரு மரத்துல 100 பழம் இருந்துச்சுனா கீழ இருக்குற நூறு பேருக்கு என்பது இயற்கையோட நீதி , ஆனா அதா திறமை உள்ளவன் என்றும்  பணக்காரன் என்றும்   எல்லாத்தையும் பறிச்சி , அதை எடுத்து விதைச்சு மரமாக்கி காய்க்கிற பழத்த பறிக்க அவனையே பறிக்க சொல்லி அவனுக்கே ஒரு பழம் கூலியா தருறீங்க , அது தான் இப்போ  நடக்குது "

இதுபோல பல வசனங்கள் மிக கூர்மையாக இருந்தது.

மூடர் கூடம் குறைகள் இருந்தாலும் முற்றிலும் நமக்கு புதிய அனுபவமாக இருக்கும் ,நிச்சயம் நிறைவுடன் வருவோம் . திரைஅரங்கில் சென்று காணுங்கள். இயக்குனர் நவீன் உங்களின் அடுத்த படம் என்னை எதிர்பார்க்க வைத்துவிட்டது , உங்களின் இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.

மூடர் கூடம் - மூடை மாற்றும் நன்றாக 

Friday, 13 September 2013

அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம்


அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம் 

* கலை என்பது ரசனைகளின் பல  விதங்கள் என்று அறிப்பட்ட நமக்கு இன்றைய நாட்களில் காண்பது  நகைச்சுவை என்ற ஒன்றின் படியிலே நின்று கொண்டும் , அதை தாண்டி செல்ல நினைப்போருக்கும் பெரும் முட்டுகட்டையாய் இருக்கின்றார்கள் , வரவேற்க வேண்டியவர்களே.

*அரசியல் சூழலும் கலை துறையை கீழ் இறக்கம் செய்து கொண்டு இருக்கின்றது , கட்டுப்பாடு என்ற போர்வையில். 

* சென்சார்  என்ற  அமைப்பு பல இயக்குனர்களின் சிந்தனையை சுருக்கும் வேலையை மிக கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றது , அரசியல் தலையீடு உடன்.

*திரைப்படங்களின் தரங்கள் இவைகளால் ஒரே பார்வை கொண்ட கோணத்திலேயே சென்று கொண்டு இருக்கின்றது , அதையும் வெற்றி வேறு பெற செய்து கொண்டே அவர்களையும் சிந்திக்கவிடாமல் தடுத்து கொண்டு இருக்கின்றனர்.

* மாற்று முயற்சியை ஊக்கபடுத்தாமல் அதை விமர்சனம் என்று மிகவும் கீழ் தரமாக ஒதுக்குவது பின் அப்படத்தை பிற வெளி படங்களோடு ஒப்பிட்டால் எந்த வகையில் நியாயம் , அங்கு உள்ள சூழ்நிலையா இங்கு உள்ளது துணிந்து எடுப்பதற்கு. எத்தனை எத்தனை இடர்பாடுகளை தண்டி ஒரு புது முயற்சியை எடுக்க வேண்டியுள்ளது என்பது அது போல முயற்சி செய்யும் இயக்குனருக்கே  தெரியும்.

*2011ல் வெளிவந்த புதிய முயற்சி கொண்ட படங்கள் 
ஆடுகளம் ,பயணம் , அழகர் சாமியின் குதிரை , ஆரண்ய காண்டம் , வாகை சூட வா , மௌனகுரு (2011).

2012ல் வெளிவந்த புதிய முயற்சி கொண்ட படங்கள் 
மெரினா ,டோனி,அரவான்,வழக்கு எண்,தடையற தாக்க ,நான் ஈ,மதுபானகடை,அட்டகத்தி ,சாட்டை,பீஸ்ஸா,ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , நீர் பறவை.

2013ல் இதுவரை வந்த புதிய முயற்சி கொண்ட படங்கள்
பரதேசி(எனக்கு பிடிக்காத படம் ) ,சூது கவ்வும் , நேரம் , 555 , ஆதலால் காதல் செய்வீர் , தங்கமீன்கள்.

*இந்த  மூன்று வருடங்களில் பாருங்கள் 19 திரைப்படங்கள் மட்டுமே புதிய கோணத்தில் வந்துள்ளது ஆனால் வெளிவந்தது 400க்கும் மேற்பட்ட படங்கள் , இந்த 19 படங்களில் வெற்றி சதவீதம் மிகவும் குறைந்தது பின் எப்படி நாம் படைப்பாளிகளை குறை சொல்ல முடியும்.

*2012ல் நகைச்சுவை களம் கொண்ட புதிய முயற்சிகள் வெற்றி கொண்டதால் அதை தொடர்ந்து இன்றுவரை மீள முடியவில்லை. காமெடி என்ற ஒன்றையே தயவு செய்து நம்ப வேண்டாம். சகித்து கொள்ள முடியவில்லை. சூது கவ்வும் , அட்டகத்தி , ந.கொ.ப.கா இவைகளில் காட்சி அமைப்புகள் புதிய முயற்ச்சியில் இருந்தது, அதை விடுத்து அந்த காமெடி என்று அதை மட்டும் கண்டால். தோல்வி தான் மிஞ்சும்.

இவைகளை  ஏன் கூறுகிறேன் அடுத்து அடுத்து வர விருக்கின்ற மாற்று திசை கொண்ட திரைப்படங்களை வரவேற்க வேண்டும் 

மூடர் கூடம் - இன்று வெளியீடு 13செப் (காமெடி படம் ஆனா காட்சி அமைப்புகள் வேறு )6(மெழுகுவர்த்திகள் )- செப் 20 வெளியீடு 

சுட்டகதை - செப் 20 வெளியீடுஇரண்டாம் உலகம் - தீபாவளி வெளியீடு 

இவைகளை நாம் எல்லோரும் திரைப்பட ஆர்வமிக்கோர் அனைவரும் வரவேற்க வேண்டும் , நல்ல படமாக இருக்கும்பட்ச்சத்தில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

நம் தமிழ் திரை உலகமும் எல்லோரையும் கவனிக்க செய்யும். இவ்வாறு நாம் செய்தால். இல்லையென்றால் அழிவை நோக்கியே செல்லும் பயணமாக இருக்கும் இறுதிவரை.

Saturday, 7 September 2013

6 (மெழுகுவர்த்திகள்) - திருப்புமுனை ஆகா வேண்டும்

 
தற்பொழுதைய தமிழ் திரைஉலகில் எந்தவொரு வித்தியாசமான படைப்பையும் எளிதாக எடுக்கவும் முடியவில்லை , அப்படியே வெளியே வந்தாலும் , ஆதரவும் விமர்சனமும் ஒன்றாகவே இருந்தும் அந்த படத்தை முற்றிலும் ஒழிக்கவே படு படுகின்றனர் . இவைகளை தாண்டியும் பெரும்பான்மை மக்கள் வெற்றியும் பெற வைக்கின்றனர் அதற்க்கு சாட்சி ஆதலால் காதல் செய்வீர் & தங்கமீன்கள்.ஒரு படைப்பாளி தன்னுடைய முயற்சியை  சிறிதும் குறைத்துக்கொள்ளாமல் சொல்ல விரும்பியதை சொல்லி அவர்களுக்கு என்று பெரிய ரசிகர்களை உருவாக்கிவிட்டனர் ராம் மற்றும் சுசீந்திரன் .

இவர்களை போலவே இயக்குனர் துரை நீண்டகாலமாக தன்னுடைய முயற்சியை ஆணித்தரமாக பதிக்க விரும்புகிறார் , இவருடைய முதல் படம் முகவரி தொடர்ந்து நேபாளி வரை , இவருடைய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தது (காதல் சடுகுடு தவிர ).

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையில் கவர வைத்தவர். முதல் முயற்சி என்று அவ்வளவு எளிதாக எவரும் தோற்று போகும் வாழ்கையை பதிவு செய்ய விரும்ப மாட்டார்கள் , ஆனால்  அதையே துணிந்து செய்தவர் இயக்குனர்  துரை .

முகவரி , தொட்டிஜெயா & நேபாளி இந்த மூன்று திரைப்படமும் முக்கியமான திரைப்படமே. அது மேக்கிங் , கதை , திரைக்கதை என்று மூன்று படத்திலும் ஒவ்வொன்று சிறப்பு. அதே போல வேறு வேறு தளங்களில் பயணிக்க அவர் விரும்புவதையும் காட்டுகிறது.

6 திரைப்படத்தின் முன்னோட்டம் கீழே உள்ள லிங்கை காணுங்கள்

https://www.youtube.com/watch?v=T29LjEw8g84
https://www.youtube.com/watch?v=QngNcKvrGSQ

இப்பொழுது நான்கு வருடங்களாக கடினமாக உழைத்து , வெளியிட்டுக்கு கொண்டு வந்துவிட்டார் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தை. இந்தபடத்தின் முன்னோட்டம் பார்க்கையில் நம்மகி பலவிதமான செய்திகளை நினைவில் கொண்டு வருகிறது , ஏதோ பழிவாங்கல் கதை என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆனால் துரை மீது உள்ள நம்பிக்கை முகவரி கதையும்  தொட்டிஜெயா திரைக்கதையும் நேபாளி மேகிங்கும். இப்பொழுது சேர்ந்து இந்த படத்தில் இருக்கும். நம்மை சுவாரசியமாக கொண்டு செல்லும் என்றே நம்புகிறேன்.

இயக்குனராக தனக்கு வாழ்வா சாவா என்றே இந்த படம் அவருக்கு இருந்து இருக்கும் , ஆகையினால் இந்த படம் அவரை என்னை போல நம்பி கொண்டு இருப்போருக்கும் மிக ஆர்வத்தை கூட்டியுள்ளது.

ஜெயமோகன் வசனம் மிகபெரிய ஆர்வத்தை இன்னும் அதிக படுத்தி உள்ளது (எனக்கு அவரின் வசனங்கள் நான் கடவுள், அங்காடிதெரு , நீர்பறவை , கடல் படங்களில்  பிடிக்கும் ). அவைகள் கதைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.


ஷாம் தோல்வியை மட்டுமே இதுவரையில் கண்டு வந்த நாயகன் , அதை இப்படம் மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இப்படத்திருக்கு முகவரியே ஷாம்மின் உழைப்பை காட்டிய அந்த புகைப்படங்கள் தான் மிரள வைத்தது. இப்படியும் ஒரு கலைஞன் தன்னை வருத்திக்கொண்டு இருப்பனா என்று  ஆச்சிரிய படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயம் அவருக்கு இது திருப்புமுனையாக அமைய வேண்டும்.


இத்திரைப்படத்தின் மேல் மிக பெரிய நம்பிக்கையை இயக்குனர் மற்றும் ஷாம் இவர்களை போலவே நாமும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.மக்களின் வரவேற்ப்பை பெற்று மிக பெரிய வெற்றி பெற வேண்டும் 6 மெழுகுவர்த்திகள்.

Monday, 2 September 2013

யதார்த்தம் மீறியவையா இவைகள் ???


இப்பொழுது சமீபமாக பலராலும் யதார்த்த சினிமாக்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகிறது சென்ற வாரம் வெளியான தங்க மீன்கள் மற்றும் அதற்க்கு முன் வெளியான ஆதலால் காதல் செய்வீர் , இந்த திரைப்படங்களை முன்னிலைப்படுத்தியே கூறப்படுகின்றன.

ஆதலால் காதல் செய்வீர் - இன்றைய இளையோரின் காதல் இறுதி வரை நீடிக்கின்றதா இல்லைஎன்றால் அதனால் ஏற்படும் விளைவுகள். இந்த கதை களத்தில் இயக்குனர் கூறிய உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் , அவரவர் கூறும் எதிர்  கருத்துக்கள் ,

"யாருப்பா இப்போலாம் இப்படி பண்றா அவனவன் காண்டம் போட்டுட்டு பக்காவா செய்யுரானுங்க"

"அட காண்டம் போட சொல்லுரார்பா "

"கருவ கலைக்குரதுலாம் ரொம்ப சுலபம் இதை போய் என்னமோ பெரிய விஷயமா சொல்லிருக்கார் "

இப்படி பலதரப்பட்ட எதிர் விமர்சனம் கூறுகிறார்கள் , உண்மையில் இன்று பயிலும் கல்லூரி மாணவர்களிடம் சென்று கேட்டு பாருங்கள் , உண்மை முகத்தில் அறைவது போல இருக்கும்.அசிங்கமான உண்மைகள் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் , இதை நிச்சயம் ஒற்று கொண்டு தான் ஆக வேண்டும். கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் உடன் பயிலும் தோழியை காதல் கொண்டால் அது அடுத்த கட்ட உறவுக்கு செல்லும் போது காண்டம் எல்லாம் எவனும் போடுவது இல்லை,(காண்டம் உபயோகிப்பது எய்ட்ஸ் தவிர்க்க என்றே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் , கரு உண்டாகாமல் தடுக்க என்பது தெரிந்தும் அதை எவனும் கண்டு கொள்ளவது இல்லை அவனுக்கு பார்ட்னர் மீது நம்பிக்கை இருக்கும் பட்ச்சத்தில் போடுவதில்லை , வேசிகளிடம் மட்டுமே உபயோகிப்பார்கள் ) அதை முடித்து விட்டு பெருமையாக கதியாடிப்பதே வாடிக்கை பின் கரு கலைப்பது வேடிக்கை  ,இன்னும் ஒரு சிலர் இதில் பெண் அடிக்ட் ஆனவர்கள் அவர்களின் பிரியட் டேட்ஸ் தெரிந்து இந்த நாட்களில் கொண்டால் கரு உண்டாகாது என்பது வரை யோசித்து அதற்கு தகுந்தது போல ஏற்பாடு செய்பவனும் உண்டு , இதை சொல்லுவதற்கு கூட எனக்கு அசிங்கமாக உள்ளது. ஆனால் இதை இப்படி எதிர்கருத்து கூறுவோரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை, இத்தனைக்கும் இயக்குனர் சுசீந்தரன் கூட பல தரப்பட்ட மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் என்று இந்த படத்திற்காக கலந்துரையடிவிட்டே எடுத்து இருக்கிறார்.
அவ்வாறு செய்பவர்கள் இந்த படத்தை பார்த்தாவது காண்டம் போட்டு துலைந்தால் அது கூட வெற்றி தான். கருவை கலைத்து படத்தை முடித்திருந்தால் அப்பொழுது அந்த கருத்து இன்னும் கேவலமாக பேச பட்டு இருக்கும். அந்த இவர்களையும் சேர்த்து வைத்து இருந்தால் இந்த திரைப்படத்தை பற்றி இங்கு நாம் பேசவே வேண்டியது இல்லை அதுவும் ஒரு படம் என்று கடந்து போகிருக்கும், ஆக நடந்த நடக்கின்ற ஒன்றையே இயக்குனர் இதில் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்று கொள்ளுவதும் அல்லாததும் அவரவர் விருப்பம்.ஆனால் இப்படி எல்லாம் நடப்பது இல்லை இது யதார்த்தம் மீறி வழி வகுப்பது என்று கூறுவோருக்கே இவை.தங்கமீன்கள் -

கிராமத்தில் வாழும் தந்தை-மகள் அன்பு , மகளுக்கு இக்கால கல்வியால் ஏற்படும் சிரமங்கள் , மகளின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் பண வசதியற்ற  தந்தை.இப்படி பின்னப்பட்டுள்ள கதையில் இதை எதிர்த்து கருத்து கூறுவோர்கள் ,அவரவர்க்கு இது நடைமுறைக்கு மீறியது , இப்பொழுது இப்படிலாம் பணம் பெறுவது பெரிய விஷயமில்லை , தவறு செய்யும் குழந்தையை கண்டித்தால் தவறா. என்று பலவாறு கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

6வயது மகளிடம் செல்லம் கொஞ்சும் தந்தை இயற்கையே , அவள் கேட்ப்பவைகளை வங்கி தர வேண்டும் என்று நினைப்பது இயற்கையே , எல்லோரையும் புறம் தள்ளி மகள் மீது மட்டும் பாசம் கொள்ளுவது இயற்கையே.மகளை விட்டு பிரியாமல் அவள் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கையே. கிராமத்தில் இருப்பவனுக்கு 6மாதம் சம்பளம் பாக்கி உள்ளவனுக்கு  2000 ஸ்கூல் கட்டணம் கட்டுவது கடினம், அவனுக்கு அந்த பணமும் பெரிது தான்.அதை அடைய அவன் வழி தெரியாமல்(+2 படிக்கையில் திருமணம்) தான் நண்பனின் உதவியை எதிர்பார்க்கிறான். அவனிடம் எப்படி நம் நகரத்தின் தொழில் யுக்திகளை எதிர்பார்க்க முடியும். அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணுனான் புள்ள பெத்துகிட்டான் அப்படின்னு எடக்கு மடக்கா கேட்காதீங்க , திரையில் காட்டியதை அதை இயல்பு வாழ்க்கையோடு சேர்த்தே கூறுகிறேன். இன்றைய கல்வி முறை மாணவர்களின் சிந்தனையை சிதைக்கின்றது என்பதை மிக அருமையாக காட்டியுள்ளார். எத்தனை குழந்தைகள் தமக்கு பிடித்தவைகளை செய்ய முடியாமல் , யோசிக்க முடியாமல் தவிக்கிறார்கள் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இந்த திரைப்படத்தில் இயல்பு மீறினது இறுதியில் அந்த இசை கருவியை தேடி மலைகள் தாண்டி காடு தாண்டி போகுவது மட்டுமே. அது தவிர அனைத்தும் அழகான கவிதைகள் போலவே இருக்கும்.

.இதுவும்  தங்கமீன்கள் கருத்து பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் உரிமை ஆனால் இது யதார்த்தம் மீறியவை இயல்பியல் சுத்தமாக இல்லை அபத்தம் என்று கூறுவோருக்கு மட்டுமே.

யதார்த்தம் என்ற சினிமாவகைகள் ஒரு வட்டத்தினுள் சுருங்குவது இல்லை ஒரு வட்டத்தினுள்(உண்மைகளில்) இருப்பதை தான் காட்டுகிறது. நெஞ்சில் பெரும் தாக்கம் தரும் உண்மைகளை ஏற்று கொள்ள முடியவில்லை அதை விடுத்து யதார்த்த சினிமாக்கல் அனைத்தும்  அபத்தம் என்று கூற வேண்டாம் நண்பா , மீண்டும் நாம் பின்னோக்கியே சென்று விடுவோம்.


 இன்னும் நிறைய கூற வேண்டும் என்றே நினைக்கின்றேன் ஆனால் பதிவின் நீளம் கண்டும் இதை படிப்பவரின் நிலைக்கு வருந்தியும் முடித்துக் கொள்ளுகிறேன்.

பின் குறிப்பு :
1.உங்களுடைய கருத்துகளில் வேறுபட்டால் மன்னித்துவிடுங்கள் , உங்களின் மனம் வருத்தம் கொண்டதற்கு.