Monday, 28 April 2014

நான் அஜித் ரசிகன்- 2

முந்தைய பகுதி

காட் பாதர் படம் படபிடிப்பில் இருந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னுமொரு பரபரப்பான செய்தி வெளிவர தொடங்கியது நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார் அதற்காக உடல் இளைத்து , முடி வளர்த்து கொண்டு இருக்கின்றார் என்று தினசரிகளில் பரபரத்தது. எங்களுக்கெல்லாம் இது போதும் பாலா படத்தில் நடித்தால் அது அஜித்தின் உச்சமாக இருக்கும் என்று நினைனைத்து கொண்டு ஆர்வமோடு விவாத்திப்போம்.


2005ல் கல்லூரி சேர்ந்தமையால் அங்கேயும் அஜித் என்ற நடிகருக்காக என் குரல் ஓங்கியே ஒலிக்கும் நண்பர்கள் மத்தியில். அப்போது தயாரிப்பாளர் பிரச்சனை என்றும் அஜித் பல நெருக்கடிகளுக்கு உள்ளான நேரம். அதுவரையில் அவரின் ஆதர்சன தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் பிரச்சனைகளுக்கு காரணம் என்று செய்தி வந்தது பல இடத்தில் இருந்து. இடையில் உடல் இளைத்த அஜித் வாசு இயக்கத்தில் நடித்த பரமசிவன் 2006 பொங்கல் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை அவ்வாறு கண்டதே நிறைவு என்ற ரீதியில் தான் படம் இருந்தது.

2006 ஏப்ரல் திருப்பதி , பேரரசு இயக்கத்தில் வெளிவந்தது திருப்பாச்சி , சிவகாசி என்று வெற்றி படம் கொடுத்து இருந்தமையால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் பி & சி கிளாசில் நல்ல வெற்றி படமாக அமைந்தது. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை இத்திரைப்படம். இடையில் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் , ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.


2006 தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம், நீண்ட சிக்கலுக்கு பிறகு வெளியீடு கண்டது காட் பாதர் இம்முறை வரி விளக்கிற்காக தமிழ் பெயரில் வரலாறு என்று. முதல் நாள் பள்ளி நண்பனுடன் தஞ்சை ஜுபிடெரில் முதல் காட்சி. படம் தொடங்கியதில் இருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது இடைவேளை காட்சியில் மொத்த திரைஅரங்கமும் அதிர்ந்தது. இடைவேளை முடிந்து அடுத்த 15 நிமிடங்களில் இரண்டு அஜித் மோதிக்கொள்ளும் காட்சி அது , தன்னுடைய இருக்கையில் இருந்து ஒரு அஜித் எழும்போது திரைஅரங்கில் உள்ள 650 நபர்களும் எழுந்து  நின்று ஆர்பரித்த போது முதல் முறை எனக்கு மயிர்  கூச்செறிந்தது,   திரைப்படத்தை காணும் நிமிடத்தில்.நான் மேற்கூறிய காட்சி, இந்த லிங்கில் காணுங்கள்.


பின்னர் கல்லூரி சென்று அந்த நண்பர்களுடன் திருச்சி மெகா ஸ்டாரில் நாலு முறைக்கு மேல் கண்ட திரைப்படம். அவ்வருடத்தின் பிலிம் பேர் சிறந்த நடிகருக்கான விருது வரலாறு படத்திற்காக அஜித்திற்கு கிடைத்தது. அவ்வருடமே தொடங்கப்பட்ட விஜய் அவார்ட்ஸ்சில் ஆதர்ச நாயகன் விருதும் இப்படத்திற்காக அஜித் அவர்களுக்கே கிடைத்தது. இன்று வரை அது போன்ற மாஸ் & கிளாஸ்  அஜித் -கே.எஸ் .ஆர் கூட்டணி எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர் என்னை போலவே பல ரசிகர்கள்.

2007 பொங்கல், வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது.அப்பொழுது உடன் வெளியான  போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


2007 ஜூலை 7 , கிரீடம் வெளியானது மீண்டும் புதுமுக இயக்குனர் என்ற பயம் வேறு அதிகமாக இருந்தது ஆனால் என்னை மட்டும் என்று அல்லாமல் பெரும்பாலான ரசிகர்கள் பிளஸ் குடும்பங்களை இப்படம் கவர்ந்தது. இன்றைக்கும் சன் மியூசிக் , இசை அருவி என்ற மியூசிக் சேனல்களில் இப்படத்தின் பாடல் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல்கள் ஹிட் அடித்தது. இப்படத்தில் இடைவேளை சண்டை  காட்சி & கிளைமாக்ஸ் அஜித் நடிப்பில் இன்னுமொரு பரிமாணமாக இருந்தது.


2007 டிசம்பர் பில்லா வெளியீடு கண்ட மாதம் ,திருச்சி  டிசம்பர் 14 அதிகாலை டீ கடையில் தெரிந்தது பில்லா படத்தின் எதிர்பார்ப்பு. அந்தளவுக்கு முதல் முறை அஜித் படத்திற்கு எல்லாவிதமானவர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். எங்கள் கல்லூரி நண்பர்களுடன் திருச்சி கலையரங்கில் 25நபர்கள் ஒரே வரிசையில் கண்டு ஆராவரம் செய்த திரைப்படம் பில்லா. இந்த ஒரே படத்தின் மூலம் அஜித் கிராப் எங்கோ சென்று யாரும் மறுக்க முடியா உண்மை. ஆனால் இப்படத்திற்கு பிறகு தான் நடராஜா சர்வீஸ் என்று கூட கூறபடுகிறார் என்பது பொறாமையின் மிச்சமே.

2008 தீபாவளி ஏகன் இன்று வரை நாங்கள் ஒருபடத்திற்காக அதிகபட்ச்ச விலை கொடுத்து திருச்சியில்  பார்த்தது , ரம்பா திரைஅரங்கில் 250ரூபாய் முதல் நாள் முதல் காட்சி. அதிலும் ஒருசில நண்பர்கள் பின்னர் 350வரை கூட கொடுத்த வந்தனர். எல்லாம் பில்லா செய்த மாயம். இப்படம் கூட அஜித்தின் புது வகையான கதை தேடலை காட்டியது. தன்னுடைய நிஜ உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் கதை தேடியது இப்படத்தில் தான் தொடங்கியது போல. ஆனால் இதுவும் ஒரு சராசரி படமாக தான் அமைந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிவந்த அசல் திரைப்படம் கூட தோல்வியில் தான் முடிந்தது. இப்படி அஜித் தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாமலேயே முன்னணி நடிகராக இருந்து கொண்டது பலரை வியப்புக்கு உள்ளாக்கியது.2011,31 ஆகஸ்ட் மங்காத்தா , அஜித்தின் திரைவாழ்வில் மிக பெரிய திருப்புமுனை கொண்ட நாள். இதே போன்று காத்து இருந்து பெற்ற வெற்றி படங்கள் வில்லன் , வரலாறு , பில்லா போன்றவைகள் அப்படத்திலேயே முடிந்து போனது போல் இல்லாமல் இன்றுவரை தாக்கம் உள்ள திரைப்படம். இந்த காலகட்டத்தில் தான் அஜித் என்ற மனிதருக்கு உள்ள  உண்மையான கூட்டத்தை திரை உலகம் கண்டது. மன்றங்களை களைத்த பின்னர் இப்படத்திற்கு இவருக்கு கூடிய கூட்டம் வியப்பின் உச்சமானது அப்போது. சைதை ராஜ் திரைஅரங்கில் தான் ரசிக வெள்ளத்தில் கண்டேன் ரகளையாக.

பின்னர் வெளியான பில்லா 2 (2012) கூட தோல்வி படம் என்று கூறினாலும் அதற்க்கு கிடைத்த ஒபெநிங் எந்தஒரு படத்திற்கும் கிடைத்தது இல்லை என்பதே நிதர்சனம், சிங்கப்பூரில் நான் கண்ட முதல் அஜித் திரைப்படம். இங்கு கூட பல திரை அரங்குகளில் வெளிகண்ட வகையில் அதை உறுதி செய்தது.

இதோ இப்பொழுது தான் ஆரம்பம் & வீரம் என்று தொடர்ச்சியாக வெற்றி தந்து ரசிகர்களை சந்தோசத்தில் திளைக்க வைத்து இருக்கின்றார். இனி அடுத்து வரப்போகும் கௌதம் மேனன் படம் என்னவொரு எதிர்பார்ப்பில் இருக்கின்றது என்பதை சொல்லவா வேண்டும்.நான் அஜித் ரசிகன் , என்னவொரு நிலையிலும் எப்பொழுதும் நான் அஜித் ரசிகன். 

Sunday, 27 April 2014

நான் அஜித் ரசிகன்-1

என்னுடைய பால்ய காலத்தில் வீட்டில் ஒளியும் ஒலியும் என்றால் எல்லோரும் ஆஜர் ஆகிவிடுவோம். அப்பொழுது தொடர்ந்து நான்கு வாரங்களாக அந்த பாட்டை போட்டு கொண்டே இருந்தனர்.முதல் முறை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தபொழுது பாட்டைவிட அதில் வந்த நாயகனை மிக பிடித்துவிட்டது . அந்த பாட்டு "உன்னை பார்த்த பின்பு நான்" என்றால் பாடல் காதல் மன்னன் திரைப்படத்தில் இருந்து. அதற்குமுன் எல்லாம் எல்லோரையும் போல விஜயகாந்த் சண்டைக்காக பிடித்ததும் பின்னர் எல்லோரையும் போல ரஜினிகாந்தை பிடித்தது மாறிப்போனது என்றல்லாமல் ரஜினிக்கு பிறகு ஆசை நாயகன் அஜித் என்று ஆனது.பின்னர்  தூர்தர்சனில் பவித்ரா (அமராவதி போட்டது போல நினைவே இல்லை) படம் கூட  சலிக்காமல் எத்தனை தடவை போட்டாலும் பார்த்த நினைவு எல்லாம் வருகின்றது கொஞ்சம் நினைவோட்டத்தை ஓட்டி பார்த்தால்.இவைகள் ஐந்தாவது படித்த போது என்று நினைக்கின்றேன், 1998 . பின்னர் அமர்க்களம்(1999) திரைப்படத்தை தஞ்சை சாந்தி  திரைஅரங்கில் கண்ட பொழுது தான் மிக பிடித்து போனது, மூச்சு விடாம பாடுன  பாட்டு அதுக்கு அஜித் பயங்கரமா நடிச்சு இருக்காரு. சண்டைலாம் சூப்பர போட்டுருக்காரு. ரகுவரன் கூட பேசுவாரு பாரு  ஆவ்வூனு நண்பர்களிடம் பேசிய ஞாபகம் இப்பொழுது கடந்து போனது தெரிகிறது. இதற்க்கு முன் வந்த வாலி திரைப்படம் கூட தஞ்சை லோக்கல் கேபிள் டிவி ஜென் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.


அல்டிமேட் ஸ்டார் தல ஆன போது தான் உச்சமானது , தீனா (2001) எட்டாவுது படித்தபொழுது படத்தின் ஸ்டில் வந்த பிறகு  சில நண்பர்கள் தேள் செயின் போட்டுவருவது அதை பார்க்கும் பொழுது எனக்கு போட்டு கொள்ள ஆசையாக இருக்கும் ஆனால் அது இறுதி வரை நான் போட்டு கொள்ளவில்லை. படம் பார்க்காமலையே தீனா படத்தை பற்றியே பேசிய காலங்கள். படம் பார்த்த நண்பனை அருகில் அமர்த்தி முழுபடத்தையும் சொல்ல சொல்லி கேட்டு கொண்டே மனதில் பார்த்து கொண்டு இருந்த நேரம். அப்பொழுது தான் இன்னொரு கூட்டம் ப்ரெண்ட்ஸ் படத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது. முதல் முறை போடா அஜித் தான் சூப்பரு என்றும் அவர்கள் ஹ்ம்ம்க்கும் இளைய தளபதி படத்தை பாருங்கடா என்று எங்களை பிரைன் வாஷ் அப்பொழுதே சண்டை ஆரம்பிக்கும் முன்னேயே கூற தொடங்கி இருந்தனர்.பின்னர் வந்த சிட்டிசன்(2001) படம் எல்லாம் அவரின் பலவிதமான கெட் அப் எங்களின் விவாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அப்படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை ஆனால் நான் பெரிதாக வியக்கும் எங்களின் சீனியர்கள் , பஸ் ஸ்டாண்டில் கெத்தாக திரிபவர்கள் , ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் அஜித் விரும்பிகளாக தீனா ஸ்டில் அவர்களின் நோட் அட்டைகளிலும் , ஆட்டோ முன்  கிளாஸிலுமாக இருந்தது பெருமிதம் கொள்ளவைக்கும்.தினகரன் , தினத்தந்தி பேப்பர் சினிமா பக்கம்  என்னிடம் நீண்ட நேரம் அல்லோலப்படும்.இதன் பிறகு வந்த ரெட்(2002) படத்திற்கு  தஞ்சையில் அதுவரை வைத்திராத அளவுக்கு கட்டவுட்கள் வைத்து நகரையே பிரமிக்க வைத்து இருந்தனர் என்ற பேச்சு தான் அதிகமாக இருந்தது. அப்படத்தின் தோல்வி பயங்கரமாக  ஓட்டபட்டோம் அதுவும் நடனம் என்று ஓட்டும் போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிட்டத்தட்ட ஓடி போய்விட தோன்றும்.தொடர்ந்து வந்த ராஜா(2002) பட தோல்வி அதற்க்கு மேல் ஓடவைத்தது எங்களை அதிலும் சிலர் எங்க தளபதிய வச்சு இவர் தாண்டா துள்ளாத மனமும் துள்ளும் படத்த எடுத்தாரு இப்போ உங்க ஆள வச்சு எடுத்தாரு ஊத்திகிச்சு என்று கூற , நாங்களோ அடேய் இந்த படத்துல உங்க தளபதி நடிச்சு இருந்தாலும் ப்ளாப் தான் என்று எவ்வளவோ மல்லுகட்டி கூறினாலும் இறுதிவரை அந்த நண்பன் ஒற்றுகொள்ளவே இல்லை.


எல்லோருக்கும் நாங்களும் வில்லன் ஆகிவிட்டோம் வில்லன்(2002)  வருவதற்கு முன்னே. ஆனால் வில்லன் எங்களை ஹீரோ ஆக்கிவிட்டது வருகைக்கு பிறகு. அப்பொழுது உடன் வந்த பகவதி நாங்கள் ஓட்டுவதற்கு வசதியாகவும் வில்லன் படத்தின் இரட்டை வேட நடிப்பு பெருமிதம் கொள்ள வைக்கவும் நன்றாக இருந்தது. ஓரளவுக்கு நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் போது டெக்னிகலாக திரைகதை யுக்திகளை எடுத்து கூறி பேச துவங்கிய காலங்கள். அதுக்கு ஏற்றது போல வில்லன் படம் எங்களுக்கு அமைந்தது. அது போலவே தினகரன் சிறந்த நடிகர் அவார்டும் , பிலிம் பேர் அவார்டும் அவ்வருடத்தில் அவருக்கே கிடைத்தது அப்படத்திற்காக. தப்பு தண்டா பாடல் பற்றி இங்க பேச வேணாம் அதுவும் ஒரு விவாதம் ஆனது அப்படத்தில்.

பின்னர் ஒருவருட இடைவெளிக்கு பிறகு 2003 தீபாவளி வெளியீடாக வந்த ஆஞ்சநேயா படத்தின் கதி ஊரே அறியும். ஆனால் அதற்க்கு முன் நாங்கள் தந்த அலப்பரைகள் வல்லரசு டைரக்டர் படம் செம்மையா இருக்க போகுது என்றெல்லாம் ஹைப் கொடுத்துட்டு இருந்தோம். படம் வெளியானா அடுத்த நாள் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்கள் படை சூழ தஞ்சாவூர் படம் பார்க்க செல்லும் போதே திருமலை என்று சிலர் , நாங்க தல படம் தான் என்று கூற , மூன்றாவுது அணி பிதாமகன் என்றது. அங்கு போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றோம். தஞ்சை சாந்தியில் தல படம் கமலாவில் பிதாமகன் சற்று அருகே இருந்த ஜுபிடெரில் திருமலை. தல ரசிகர் போல தெரிந்த ஒருவரிடம் பாஸ் படம் எப்படி என்று கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்.பின்னர் வம்படியாக கேட்க, நேத்து பாக்குறப்போ நல்லா இருந்துச்சு ஆனா இன்னைக்கு திரும்ப வந்து பார்த்தேன் என்று இழுக்க நாங்கள் பாஸ் இன்னு ஷோ முடியலை பாஸ் என்று பதறினோம் அவரோ ஆமாங்க உள்ள விஜய் ரசிக நண்பர்களை அழைத்து வந்தேன் ஒட்டுறானுங்க அதான் வெளிய வந்துட்டேன் என்று கூறி எங்களை இறக்க வைத்து விட்டார்.அதை கேட்ட மற்ற குரூப் நண்பர்களோ சிரித்து கொண்டே எங்களை பார்த்தனர் ஆனால் விடவில்லையே கடைசி வரை போராடி திருமலை அல்லாமல் பிதாமகன் சென்று.அடுத்தநாள் வந்து ஆஞ்சனேயே தனியாக பார்த்தோம் பயத்தில். முதல் முறை நாங்கள் சொல்லி கொண்டும் விட்றா தல அடுத்த படத்துல பட்டய கிளப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு ஒரு கட் அவுட்டை பார்த்தோம் அதில் இருந்த வாசகம் எங்களை கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விட்டது வெளிய சொல்லலையே அதை. அந்த வாசகம்,
"திருமலையை தூக்க வரார்டா எங்க ஆஞ்சநேயா "

இந்த காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் நான் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக கூறினார் அஜித். அதனாலையே எல்லோரின் கோபங்களுக்கு உள்ளானார் ஆனால் ரசிகர்கள் அவருக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜி பட படபிடிப்பு எங்கள் திருவையாறில் நடந்தது வெறும் நான்கு மணிநேரம் எங்கள் ஸ்ரீனிவாச ராவ் மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள காவேரி ஆற்றில். அப்பொழுது தான் அஜித்தை நேரடியாக முதலும் இறுதியுமாக நான் கண்டது. ஆற்றில் அங்கங்கே ஓடி கொண்டு இருந்த நீரை முகத்தில் அவ்வப்போது அள்ளி தெளித்து கொண்டு நடன காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அந்த படபிடிப்பை கண்டு களித்து கொண்டு இருந்தோம்.

கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை சுவைத்து கொண்டு இருந்தநேரம் , அஜித் பிறந்தநாள் மே 1  அன்று வெளிவந்த ஜனா படுதோல்வியை சந்தித்தது. கோடைவிடுமுறை என்பதாலும் +2 ஸ்பெஷல் கிளாஸ் வேறு இருந்த நெருக்கடியில் அப்படத்தை காண வாய்ப்பில்லாமல் போனது ஆனால் கில்லி படத்தை அந்நாட்களில் திரை அரங்கில் கண்டோம் படம் பிடிக்க கூடாது என்ற நினைப்பிலேயே கண்டேன் என்பதை இப்பொழுது நினைத்தால் கூட  சிரிப்பாக இருக்கின்றது. பின்னர் பள்ளி தொடங்கிய போது ஜனா படத்தை வம்படியாக எங்களிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினர் நண்பர்கள். 


2004 தீபாவளி அட்டகாசம் வெளியீடு சரண் இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது எப்போதும் இரட்டை வேடம் என்றால் அஜித் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று உறுதியை நம்ப வைத்த திரைப்படம் அட்டகாசம். 2002க்கு பிறகு அஜித்தின் வெற்றி படவரிசையில் இணைந்த அட்டகாசம் ரசிகர்கள் மதித்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் ஸ்டில் தான் இன்றைக்கும் கூட மிக பிரபலம். இப்படத்திற்கு பிறகு வெளியான அஜித் அவர்களின் எந்த திரைப்படத்திற்கும் திரைஅரங்கில் வைக்கப்படும் கட் அவுட்களில் அட்டகாசம் ஸ்டில் இல்லாமல் இருக்கவே இருக்காது. தல என்று அஜித்தை எல்லோரும் அழைக்க தொடங்கிய காலமும் அதுவே அதற்க்கு ஏதுவாக அமைந்த பாடல் ''தல போல வருமா ''. தஞ்சை யாகப்பா திரைஅரங்கில் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் சென்று மதியகாட்சிக்கு 12மணி முதல் டிக்கெட் கவுண்டரில் நின்று 2அடிக்கு குறைவான அகலம் கொண்ட கவுண்டரில் நீண்ட வரிசையில் மூச்சு விடகூட திணறி கொண்டு 2 மணிநேரங்கள் தவித்து சென்று , பரவசமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடிய படம் . ரசிகர்களுக்காகவே அஜித் நடித்த அட்டகாசம்.


அஜித் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது , அஜித் மூன்று வேடங்களில் நடிக்கபோகிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசை , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு .படத்தின் பெயர்  காட் பாதர் என்று தினசரிகளில் பரப்பாக செய்தி வெளி வரத்தொடங்கியது. அதே போல அந்நேரத்தில் வதந்திகளும் வந்தது அஜித் நடிக்கும் மூன்று வேடங்களில் ஒன்று  அரவாணி என்று கூட. அந்த பரபரப்பில் 2005 பிப்ரவரி ஜி திரைப்படம் வெளிவந்தது. அதே தஞ்சை யாகப்பாவில் முதல்நாள் அஜித் அவர்களின் திரைப்படத்தை முதல்முறையாக  திரைஅரங்கில் காண்கிறேன்(அன்று முதல் இன்றுவரை முதல் நாள் தான் பிறகு வெளிவந்த திரைப்படங்களுக்கு). ராஜா ,ஆஞ்சநேயா , ரெட் , ஜனா போன்ற படங்களை போலல்லாமல் இன்றைய அரசியல் யதார்த்தத்தை கூறியவகையில் எனக்கு பிடித்த படமே ஜி.  ஆனால் இதுவும் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. எனக்கு இன்றைக்கும் இப்படத்தின் இயக்குனர் மேல் கோபம் தான் அவர் லிங்குசாமி. தன்னுடைய படங்கள் என்று அவர் ஜி தவிர ஒதுக்கி தான் பத்திரிகையில் பேசுவார் அவரின் தோல்வி படமான பீமாவை கூட பெருமையாக குறிப்பிடுவார் ஆனால் ஜி படத்தை பற்றி வாய் திறக்க மாட்டார். இப்பொழுது சிவா கார்த்திகேயேன் எப்படி மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து ஒருவர் நடித்து இருப்பதை போன்று நடந்து கொள்வதை போல்.
                                                                                                                          தொடரும் ....

அடுத்த பகுதி

Tuesday, 22 April 2014

உப்பு நாய்கள்-நாவலின் என் வாசிப்பு அனுபவம்

 (லக்ஷ்மி சரவணகுமாரின்)


புதுப்பேட்டை , ஆரண்யகாண்டம் போன்ற படங்களை பார்க்கும் போது அக்கதையின் கதாபாத்திரங்களை நாம் உள்வாங்கினால் தான் அப்படங்களை ரசிக்க முடியும். அதைவிட்டு தர்க்க நியாயம் பேசினால் அதுவும் ஒரு சராசரி படங்களை போலவே மிஞ்சும். அப்படி தான் இந்நாவலை வாசிக்கும் போது கூட ஆரம்ப அத்தியாயங்களே யாருடைய வாழ்க்கையை நாம் படித்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நமக்கு விளங்க வைத்துவிடுகிறது. அதை புரிந்து நாம் மேற்கொண்டு படித்தோம் என்றால் ஒரு ராவான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்வோரின் பக்கங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எந்தவொரு நாவலை வாசிக்கும் போதும் நான் அதற்க்கு பிற எழுத்தாளுமைகள் (பிரபலங்கள்) எழுதிய மதிப்புரைகளை வாசிக்காமல், முழுநாவலையும் வாசித்துவிட்டு பின்னரே அவர்களின் கருத்துகளை வாசிப்பேன். அது இவ்வாசிப்பிலும் தொடர்ந்தது. ஒவ்வொரு சராசரி மனிதர்களுக்குள்ளும் குறிப்பிட்ட குற்றங்களுக்கான எல்லை இருக்கும், அதை அவர்களின் செயல்களில் தாண்டாமலும் பின்னர் மற்றோர் செய்வதில் கூட அவர்களுக்கு என்று கூட நாமே ஒரு எல்லை வைத்து கொள்ளுவோம்.அப்படி தான் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலை நம்பி இருக்கின்றனர்.

பிக்பாக்கெட் , விபச்சாரம் , குழந்தை கடத்தல் , போதை வஸ்த்து விற்பனை என்று போகின்றது. கொஞ்சமும் சமரசமின்றி தன்னுடைய எண்ணங்களை எழுத்தால் கொண்டு வந்து இருக்கின்றார் நாவலின் ஆசிரியர்.

சம்பத் செய்யும் செயல்கள் ஒருசிலருக்கு வாசிக்கும் போது அன்னியமாக வெறுப்பாக தோன்றும், இன்னும் சிலருக்கு மணியின் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும், இதை போல முத்துசெல்வி , செல்வி , தவுடு , கோபால் , ராஜீ, ஷிவானி , சேட்டு, சுந்தர் , சம்பத்தின் அம்மா , சோபி, இளவாஞ்சளின் என்று அவரவர்களின் மனதில் நாம் வகுத்து வைத்து உள்ள பிரிவின் படி அவர்களின் குற்றசெயல்கள் நமக்கு அருவெறுப்பாக ஏற்று கொள்ள முடியாமல் இருக்கும். எனக்கு அப்படி மிகவும் வக்கிரமாக மனதில் தோன்றியது ராஜீயின் செயல்கள் தான் எனக்கு அந்த பாத்திர படைப்பின் மேல் உச்சபட்ச்ச வெறுப்பை கொடுத்தது.இதை நாம் ஏற்று கொள்ளுவதை விட எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தான் நாவல் ஆசிரியரிடம் இருக்கின்றது என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.

நாவலிலேயே என்னை மிகவும் உருகவைத்தது ஆதம்மா என்று சிறுமியும் , ஆர்த்தி என்ற பெண் பாத்திரமும் தான். முதலில் பாகம் ஒன்றில் விறுவிறுப்பாக வாசித்து முடித்தவுடன் பாகம் இரண்டில் தொடங்குகிறது இந்த சிறுமியின் கதை, அவளின் கதை சில அத்தியாயங்களில் தொய்வாக செல்வது போல தோன்றியது பின்னர் சம்பத் குழந்தை கடத்தல் தொழிலுக்கு மாறும் பொழுது நெஞ்சில் ஒருவித படபடப்பு வந்துவிடுகிறது எங்கே இறுதியில் இந்த சிறுமியை கடத்துவது போல வந்துவிடுமோ என்று சினிமா போல நினைக்க தோன்றிவிட்டது ஆனால் அது போல் அல்லாமல் நாவலாசிரியரையே இறுதி வரை பின்தொடர்வது போல இருந்தது சிறப்பு .

வாசிக்கும் போதே எனக்கு உறுத்தியது ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வாசகனுக்கு கூறுவது போல இருந்தது(சம்பத்தின் தொழில் திறன் , ஆதம்மா விருப்ப விளையாட்டு இன்னும் சில ) , சில வார்த்தைகளை ஒரே பத்தியில் நான்கு , ஐந்து முறைகளுக்கு மேல் எடுத்து கூறியது போன்றவைகள் தான் உறுத்தலாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமும் இலக்கிய நடையில் முடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இறுதி பத்தியை எழுதியது போலவும் தோன்றியது.மணியின் கதை என்ன ஆனது சுந்தரிடம் மீண்டும் சம்பத் வந்தவுடன் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ??? , அளவுக்கு மீறிய காமம் என்பது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை அவர்களின் வாழ்வில் அவ்வாறு இருப்பது போலவே நினைத்து வாசித்தமையால் இருக்கும் போல எனக்கு.

லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு பாம்புகள் மீது அளவில்லா ப்ரியம் இருக்கும் போல முன்னர் அவரின் யாக்கை சிறுகதை தொகுப்பில் கூட ஒரு சிறுகதையில் முழுக்க ஸர்பங்களை மையபடுத்தியே இருந்தது, இந்நாவலில் கூட அந்த ஈர்ப்பு தெரிகின்றது. காமத்தில் திளைக்கும் போது கூட ஸர்பங்களை எடுத்து காட்டி கூறுகிறார்.

எனக்கு நாவலை வாசித்து முடித்தவுடன் தோன்றியது, வாசிக்கும் போதே இவ்வளவு சுவாரசியமாக இவர்களின் முகங்களை தேட தூண்டுகிறதே. இதை ஏன் ஒரு ராவான திரைப்படமாக எடுக்க கூடாது நல்ல கதாபாத்திர தேர்வுடன் சமரசமின்றி லக்ஷ்மி அவர்களே எடுத்தால் என்னவோ என்று தான் நினைத்தேன். யாருக்கு தெரியும் அவர் கூட நினைத்து இருப்பார்??? இயக்குனர் ஆக தானே முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார். வாழ்த்துக்கள் நண்பா 

Thursday, 10 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது - 2


ஓமன் போகலாமா வேண்டாமா என்ற இருவேறு சிந்தனையில் என்னை நானே வாட்டி வதைத்து கொண்டு இருந்தேன், போனால் ஒருவேளை நம்மால் சிறப்பிக்க முடியாமல் திரும்பி வருவதற்கு போகாமல் இருந்துவிடலாம் என்று நினைத்தால், இங்கே நான் தலைகனத்தில் பிதற்றிய பிதற்றலுக்கு பதில் சொல்லியே தாவு கிளிந்துவிடுமே ,வீட்டில் கூட மதிக்க மாட்டார்களே, உறவினர் மூலம் கிடைத்த வேலையை விட்டதற்காக எல்லோரிடத்திலும் தலை குனிந்து நிற்க வேண்டுமே. இதற்கு போய்விட்டால் தான் என்னவோ என்று கிட்டத்தட்ட பித்தநிலையில் தான் இருந்தேன்.

அந்நேரத்தில் தஞ்சையில் உடன் பயின்ற நண்பனின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், அவரை காண தஞ்சை சென்று அவனிடம் புலம்பிவிட்டு. மறுநாளும் அவனை காண சென்று அன்று வேறு நந்தலாலா வெளியீடு அவனும் கொஞ்சம் ரிலக்ஸ் ஆகும் பொருட்டு இருவரும் படத்திற்கு சென்றோம், தஞ்சை பிக் சினிமாஸில் நான் கண்ட முதல் திரைப்படம் நந்தலாலா தான். படத்தின் இரண்டாம் பாதியின் போது இருமுறை சென்னை லேன்ட் லைனில் இருந்து கால் வந்தது படத்தின் ஆர்வத்தால் ஒருமுறை சைலேன்ட்டில் போட்டுவிட்டு மறுமுறை வந்தபோது கட் செய்துவிட்டேன்.


படத்தின் இறுதிகட்ட பாடலின் போது மீண்டும் வந்த அழைப்பை ஏற்று பேசிய போது, ஹலோ கருணா நீங்க இன்னும் மெடிக்கல் சேர்டிபிகட் தரலை, ரொம்ப பிரஷர் பண்ணறாங்க எனி ப்ரொப்லெம் என்று கேட்டனர். சாரி சார் எனக்கு விருப்பமில்லை ஓமன் செல்ல என்று மட்டும் கூறிவிட்டு கட் செய்து விட்டேன். அவர்களும் என்னை மீண்டும் அழைக்கவில்லை. நானோ படம் முடிந்து வீடு செல்லும் வரை மிகுந்த வேதனையில் துன்புற்றேன். எத்தனையோ நபர்கள் தூரதேசம் போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கையில் கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடித்து விட்டுமே. யாரையும் பழி சொல்ல வாய்ப்பில்லை ,என்னுடைய வாய்ப்பை என்னுடைய இன்பங்களுக்காக நானே கெடுத்து கொண்டே என்பது மட்டுமே உண்மை.

மீண்டும் சென்னை டிசம்பர் 20 ,2010ல் பயணம் , வேலை தேடுதல் மீண்டும் தொடக்கம், மீண்டும் ஒருமுறை செய்தவேலையை விட்டதுக்கு மனதார உண்மையாக வருத்தப்பட்டேன் (இந்த தவறை இதன் பிறகு இன்று வரை செய்யவில்லை).தஞ்சையில் கண்ட நண்பனும் சென்னைக்கு ஒரு நேர்காணலிற்கு வந்து செலக்ட் ஆகிவிட்டான். பின்னர் என்னை சந்திக்க வந்த போது அவன் தேர்ந்து எடுக்கப்பட்ட நிறுவனத்தின் இணையத்தை காண்பித்தான், அப்பொழுதே நான் அவனிடம் சொன்னேன் இந்த நிறுவனத்திற்கும் என்னுடைய விண்ணப்பத்தை அனுப்ப போகிறேன் என்று, அவனும் ஒற்றுகொண்டான். அந்நிமிடமே அனுப்பிவிட்டேன். அன்று மாலையே நாளை நேர்காணலிற்கு அலுவலகம் வந்துவிடுமாறு கூறிவிட்டனர். மனநிறைவுடன் மறுநாள் டிசம்பர் 24 , 2010 அன்று மயிலாப்பூர் , டாக்டர்.ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள அந்த அலுவலகத்துக்கு சென்றேன்.

என்னை நேர்காணல் கண்ட ராஜ்குமார் முதலிலேயே கூறிவிட்டார் எங்களுக்கு அளவு மதிப்பீட்டாளர் தான் தேவை என்று எனக்கு முழுக்க முழுக்க சைட் அனுபவம் தான் ஆனால் இதுவோ நான் முன்னர் கூறியது போல பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. ஏதோ ஒரு தைரியத்தில் அனுபவம் உண்டு என்று கூறியவுடன் , அவரோ சிறிய அறையின் இன்டீரியர் வேலைபாடுகளுடன் உள்ள வரைபடத்தை கொடுத்து அளவுகள் எடுக்க சொல்லிவிட்டார். நானும் சைடில் பில்லிங்கு அளவுகள் எடுப்பது போன்று எடுத்து கொடுத்துவிட்டேன். அவரும் அதில் நிறைவு கொண்டவராக ,சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்னர் நாளை கூப்பிடுகிறோம் என்று என்னை அனுப்பிவிட்டார்.

ஆனால் நாளையோ எனக்கு நாளை நாளை நாளை நாளை நாளை நாளை என்று 30 நாளை ஆனது.இந்நாட்களில் வேலை இல்லாமல் நல்ல வேலைய்யை விட்டதற்கு கிடைத்த தண்டனை என்று மனதில் பச்சையாய் பதிந்து போனது. மீண்டும் அந்த மயிலாப்பூர் நிறுவனத்துக்கு நானே தொலைபேசியில் அழைத்து என் விவரங்களை கூறி நேர்காணலின் முடிவு என்னிடம் தெரிவிக்கவில்லை என்ன ஆனது என்று கேட்டேன் சிறிது நேரம் லைனில் இருக்க சொல்லி பின்னர் நாளை வருமாறு கூறினர்.

ஜனவரி 23 , 2011 மீண்டும் சென்றேன் இம்முறை நேரடியாக எம்.டியை தான் காண போகிறேன் என்று அங்கு தெரிந்துகொண்டேன். இது தெரியாமால் சாதாரணமாக வந்தது நினைத்து உள்ளுக்குள் நெருடபட்டேன். அழைத்தார்கள் மேல் அறைக்கு சென்றேன் நல்ல விஸ்தாரமாக இன்டீரியர் வேலைபாடுகளுடன் அதுவரை அதுபோன்ற இடம் திரைப்படங்களில் தான் பார்த்து உள்ளேன் (சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இருப்பது போல ). பார்த்தால் அழகிய ஆண்டி பெண் தான் எம்.டி , அதுவே மனதை சஞ்சலபடுத்தியது. கண்டிப்பாகா தேறுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டேன். அதற்க்கு ஏற்றது போல அவர்களின் கேள்வி அமைந்தது என்ன கருணாநிதி ? ஸ்டாலின் ? என்று பெயர் நான் என்ன அரசியாலா பண்ணுறேன் என்று சிரித்து கொண்டே கேட்டார்கள். நானோ என் சொந்த ஊர் தஞ்சாவூரில் இருக்கும் வரை இந்தபெயரின் பெருமையை கேட்டே வளர்ந்துவிட்டேன் இங்கே வந்த பிறகு தான் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர் என்று சிரித்தும் சிரிக்காமலும் கூறிவிட்டேன் அவர்கள் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். பின்னர் கடவுள் நம்பிக்கை இருக்கா என்று கேட்டார்,( உள்ளுக்குள் இந்த பெயர் வைத்தததால் என்ன கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது என்று நினைத்து கொண்டே நல்ல வேலை எங்க தாத்தா ராமசாமி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்துகொண்டு). இருக்கின்றது என்றேன். எப்பபோ சாமி கும்பிடுவ என்று திரும்ப அதே கேள்வி? என்னடா இது சோதனை என்று சில நொடி தடுமாற்றத்திற்கு பின் வாரம் இருமுறை கோவிலுக்கு போவேன் என்று பொய் சொன்னேன். ஓஹோ இஸ் குட் என்று பைலை நான் தரும் போது வலது கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை பார்த்து உறுதி செய்து கொண்டார். பின்னர் வேலை சம்மந்த கேள்வி பதில்கள், பொய் மட்டும் சொல்லவே கூடாது என்ற அறிவுரை.இறுதியில் நான் தேர்ந்து எடுக்கபட்டுவிட்டேன். இம்முறை இந்த நிறுவனம் இன்டீரியர் வேலைபாடுகளை தான் முதன்மையாக கொண்டது. இது என்னுடைய அடுத்த புது அனுபவம்.

ஜனவரி 31 , 2011 முதல் அங்கு பணியை தொடங்கினேன்.

இந்த நிறுவனத்தில் தான் இதுவரையில் என்னுடைய அனுபவத்தில் அதிக நாட்கள் வேலை பார்த்தது (ஒன்னேகால் வருடம்  ), என்னை நான் தொழில் ரீதியாக முழுமை(ஓரளவுக்கு) படுத்தி கொண்டதும் இங்கே தான். என்னுடைய பணிக்காக அதிகபட்ச அங்கீகாரம் பெற்றது இங்கே தான்.ஓமன் சென்று இருந்தால் கூட இங்கு பெற்ற வளர்ச்சியை பெற்று இருப்பேனா என்பது கேள்விகுறி தான்.இங்கு நான் செயல்படுத்த பட்ட தொழில்முறை தான் இன்றும் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கின்றது.

முதலாளியாகவும் & தலைமை அதிகாரியாகவும் ஒரே பெண்  இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது மிகவும் கடினாமான சூழலை உருவாக்கும் என்பதை புதிதாக அப்பொழுது பணியாற்றிய  மயிலாப்பூர் நிறுவனத்தில்  உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். அளவு மதிப்பீட்டாளர் என்று எடுத்தமையால் முழுக்க அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது, முதல் இரண்டு நாட்கள் நான்கு பண்டில் வரைபடங்களை கொடுத்து ஸ்டடி பண்ணுங்க என்று கூறினார் என்னை நேர்காணல் எடுத்த ராஜ்குமார் அவர்கள், அவர்களுடைய ப்ராஜெக்ட்டில் தான் இருக்க போகிறேன் என்றும் தெரிந்து கொண்டேன்.

முழுக்க முழுக்க சைடில் பணிபுரிந்து விட்டு இப்படி ஒரே அறையில் இருப்பது மூன்றாம் நாளிலேயே கடுப்படித்து விட்டது, அதுவும் அந்த நிறுவனத்தின் கட்டுபாடுகள் , எலிமெண்டரி ஸ்க்கூளை விஞ்சிவிடுவது போல இருந்தது. மதிய சாப்பாடு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், அலுவலகத்தில் ஸ்மோகிங் ஏரியா கிடையாது, காலை 9.00 மணிக்கு வந்தால் மாலை 6.00 மணிக்கு தான் வெளியேற வேண்டும்.இடையில் எந்தஒரு காரணத்திற்கும் வெளியே போக அனுமதி இல்லை ப்ராஜெக்ட் அன்றி. நான் வெஜ் சாப்பிடகூடாது. இப்படியாக அடுக்கி கொண்டே போகலாம் கட்டுபாடுகளை. ஒரே வாரத்தில் முடிவு செய்தேன் நம் அலுவலகத்தில் இருந்தால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன்,எனக்கு ஒற்று வரும் சைட் வேலை தான் சிறந்தது நான் நினைத்து கொண்டு இருந்தது போலவே. கவர் டுட்டிக்காக சைட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டேன், அபிராமிபுரத்தில் ஒரு செல்வந்தரி பாட்டி  வீட்டின் இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு. அப்பாட்டியோ எங்கள் அலுவலகத்தில் போட்ட கட்டுபாடுகளை தூக்கி சாப்பிட்டு விட்டது போல இருந்தது அவர்களின் கட்டுபாடுகள்.கட்டிட  வேலையின் போது வேலையாட்கள் பீடி குடிபதற்கு தடை போட சொன்னால் பார்த்துகொள்ளுங்கள். எவன் அங்க வேலை பார்க்க வருவான். அப்படி தான் இருந்தது அங்கே பணிபுரியும் பொழுது.

ஒரு மாதங்களாக வேலை அங்கு போய்கொண்டு இருந்தது அலுவலக பக்கம் போகாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டு இருந்தது, அத்தியாவசியாமாக வரைபடம் உடனடியாக தேவைபட அலுவலகம் சென்றேன் அன்று அப்பொழுது அங்கு வந்த எம்.டி , என்னை பார்த்து யாருப்பா நீ புது பையன் என்று கேட்க சொல்லுவது அறியாமல் முழித்தேன் அருகில் இருப்போர் கூறினார் இவர் தான் அவர் என்று இம்முறையும் சிரிப்பு தான், என் பெயருக்காக. நானும் கேன சிரிப்பை சிரித்துவிட்டு வந்து விட்டேன். மாதம் ஒருமுறை மீட்டிங் என்று அனைத்து சைட்டிலும் இருந்து அழைக்கபடுவர். எல்லோரும் ஏதோ நேற்றே இறந்தது போல முகத்தை வைத்து கொண்டு  வந்திருந்தனர். எனக்கு அது தான் முதல் முறை என்பதால் சாதரணமாக சென்றேன். அப்பொழுது சைட்டில் இருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு விதித்தனர் அதாவுது தினமும் காலை இன்று என்ன வேலைகள் நடக்க போகிறது  என்றும் , மதியம் மேற்கூறிய வேலைகளின் நிலவரம் பின் மாலை அன்றைய நாளின் முடிவுகள். இப்படி தினமும் மூன்று முறை எம்.டிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லோரும் மீண்டும் ஒருமுறை உச் கொட்டினர் அவர்களுக்குள்ளே தான் கேட்டு கொண்டது. நான் இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல் தொடர்ந்தேன் சில நாட்கள் ஆனால் என்னுடைய மேலதிகாரி மூலம் அனுப்ப வேண்டும் என்று செயல்படுத்தபட்டேன். 

அன்று முதல் தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன் அனுப்பிவிடுவேன், முதல்நாள் மட்டும் பதில் ஓகே என்று இரவு வந்தது பின்னர் மூன்று மாதங்கள் பதிலே வரவில்லை என்றாலும் நான் அனுப்புவதை விடவில்லை. எதேச்சையாக சந்திக்கும் போது ஒருநாள்  எம்.டி, உன்னோட அப்டேட்ஸ் டெய்லி பாக்குறேன் குட் கீப் இட் அப் , ஜஸ்ட் கண்டினியு யுவர்ஸ் வே என்றார். அப்பாடி முதல் வாழ்த்து கிடைத்துவிட்டது இதை தொடர வேண்டும் என்று நினைத்து  கொண்டு இருக்கும் போது, அடுத்த நாளே அலுவலகத்திற்கு மிக மிக அருகில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டேன். நான்கு தளங்கள் கொண்டவையாக வரை படங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. கோபி என்ற அந்த நிறுவனத்தில் 3 வருடங்களாக  பணிபுரிந்தவர் , எனக்கு மேல் அதிகாரியாக நியமிக்கபட்டார். முழுக்க முழுக்க சைட் கண்ட்ரோல் என்னுடையாதாக வழங்கப்பட்டது. உதவி தேவை என்றால் கோபி அவர்களிடம் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். நிறுவனத்திலும் மற்ற சைட்களை விட இதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவை எல்லாம் நான் சேர்ந்து மூன்றுக்கு குறைவான  மாதங்களில் அங்கே நியமிக்கப்பட்டேன் ஏப்ரல் 17, 2011 அன்று.

தொடங்கியது முதல் ஏற்கனவே நான் பழகிய வேலை என்பதால் எளிதாக கையாளமுடிந்தது , ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் சென்றது.கடுமையான இட நெருக்கடிக்குள் வேலை செய்வது ஒன்று தான் புதிதாக இருந்தது.நகரின் மையமான பகுதி என்பதால் கான்க்ரீட் இரவு 10 மணிக்கு மேல் தான் போட அனுமதி கிடைக்கும். பத்து மணிக்கு ஆர்டர் செய்தால் அதன் பிறகு இரண்டு மணிநேரம் கழித்து 12 மணிக்கு மேல் தான் வரும் ரெடி மிக்ஸ் கான்க்ரீட். பின்னர் தொடங்கி வேலை முற்றிலும் முடிய அதிகாலை 5ல் இருந்து 6 மணி ஆகிவிடும். அப்பொழுதும் அந்நேரத்தில்  மெசேஜ்  செய்துவிடுவேன் விவரமாக எப்பொழுது தொடங்கியது ? எவ்வளவு அளவு ? எப்பொழுது முடிந்தது ? என்று அதற்க்கு மட்டும் அந்நேரத்தில் கூட ரிப்ளை வரும் முதலில் அதிர்ந்தேவிட்டேன். என்னடா இந்நேரம் கூட பதில் வருது என்று.

குறிப்பிட்ட நாட்களுக்குள் மிக வேகமாக வேலை நடந்து கொண்டு இருந்தது, ஆகஸ்ட் 9ஆம் தேதி மூன்று தளம் கூரை கான்க்ரீட் முடிந்து விட்டது , இதர வேலைகள் கூட தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தநேரம், என்னுடைய சக ஊழியர் அம்பேத்கர், இவரும் ஒருவகையில் தொழில் ஆசான் தான் என்னை வேலையில் மிக பயங்கரமாக ஊக்கபடுத்துவார். அவரின் மூலம் வேறு நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு இருக்கின்றது (நான் தான் அந்த வாய்ப்பை கேட்டேன் ஆனால் ஏன் என்று விவரமாக கூறினால் இது போல இன்னும் நாற்பது பதிவுகள் ஆகும் விவரமாக பின்னர் காண்போம்) என்று கூறினார். நானும் அங்கே சென்று நேர்காணலில் நன்கு பேசி எப்பொழுது சேருகிறேன் என்று வரை முடிவு செய்துவிட்டு வந்தேன். அரசால் புரசலாக அலுவலகத்தில் தெரிய தொடங்கி எம்.டி அழைத்து விட்டார். இது நான் அவரை காண்பது மூன்றாவது முறை. ஏன் வேலை விட்டு போக போகிறாய் ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நன்றாக போய்கொண்டு இருக்கும் உன் சைட் நீ போய்விட்டால் அதை டேக் ஓவர் செய்வது வீண் நேர செலவு என்று என்னை சமாதானபடுத்தி, சம்பள உயர்வு அங்கேயே முடிவு செய்து , மாதம் 3000 ரூபாய் இன்சென்டிவ் என்றும் அதை ப்ராஜெக்ட் முடியும் போது மொத்தமாக பெற்று கொள் என்று என்னை சம்மதிக்க வைத்தார்கள் சாமர்த்தியமாக. முதல் முறை தொழில் நிமித்தமாக என்னை நான் புரிந்துகொண்டேன்.

அதே வேகத்தில் வேலையும் சென்றது செப்டம்பர் மாதம் நான்கு தல ரூப் முடிந்துவிட்டது. இனி உள்வேலைகள் தான் அதுவும் தொடர்ந்து  கொண்டே வந்தது. பின்னர் நிறுவனத்தில் கட்டுபாடுகளுக்கு தான் பஞ்சம் இல்லையே அதில் இன்னொன்று எவருடைய வேலை அம்மாதத்தில் சரிவர இல்லையோ அவரின் குறிப்பிட்ட அளவு ஊதியம் பிடித்து கொள்ளப்படும் அவை பின்னர் தான் வழங்குவார்கள். எவ்வளவு வேதனையான  ஒன்று இது. எனக்கு அது  போல ஒருமுறையும் நடந்தது இல்லை அப்படி நடந்து இருந்தால் அன்றே வேலையை விட்டு இருப்பேன்.


அக்டோபர் 22,2011 நிறுவனத்தில் தீபாவளி போனஸ் தருவதாக கூறப்பட்டு, எல்லோரும் அலுவலகம் அழைக்கப்பட்டு இருந்தனர். அதுவரையில் நான் பெற்றிடாத பணம் அன்று என் கையில் புரண்டது. என் நண்பர்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு சந்தோசமடைந்தேன். ஆனால் என் வீட்டில் சொல்லவில்லை. பின்னர் வேலை சுணக்கம் கண்டது உரிமையாளர்களின் நேர  வீணடிப்பு தான் காரணம் என்பதால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. அதே போல இன்னுமொரு கட்டுப்பாடு என்னை அழைத்து என்னுடைய சைட்டிற்காக மட்டும் போடப்பட்டது. வேலையாட்கள் அசைவம் சைட்டில் சமைத்து சாப்பிடகூடாது அருகாமையில் உள்ளவர்கள் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள்  என்று. அடங்கோ அப்போ மாமிங்க தான் சித்தால வரணும் , அய்யர்வாள் தான் மேஸ்திரியா இருக்கணும் என்று காட்டமாக கூறிவிட்டேன். 
முக்கியமான அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்து கொண்டே இருந்தது, சில நேரத்தில் பல வாக்கு வாதங்கள் திட்டினாலும் பின்னர்  சமாதானமும் செய்து கொண்டே வந்தார் எம்.டி. என்னுடைய மேல் அதிகாரி இடைப்பட்ட நாட்களில் விலகி அவருடைய சைட்டை முழுகவனம் செலுத்த தொடங்கியமையால்.முழுக்கவே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில் பணியாற்றினேன்.

அந்நேரத்தில் தான் கோபி அவர்களிடம் முன்னமே கூறி இருந்தேன் , சிங்கப்பூரில் வேலை இருந்தால் சொல்லுங்கள் போகிறேன் என்று.அதை நீண்ட நாட்களுக்கு பிறகு என்னிடம் கூறினார் நண்பரின் நிறுவனத்தில் வேலை என்று நானும் சரி அப்பளை பண்ணுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டேன்.

ஒரே வாரத்தில் பிப்ரவரி 17 2012 ,விசா வந்துவிட்டது. மீண்டும் ப்த்துபிடித்த நிலை ஆனால் இம்முறை பரிபூரண அனுமதி பெற்று நிறைவாக வெளியேற வேண்டும் ஆனால் அதற்குள் சிங்கப்பூரில் போருக்க வேண்டுமே மார்ச் 22 அங்கே வந்துவிட வேண்டும் என்று வேற அழுத்தம் கொடுத்தனர். இங்கே வேலை முடியவே இன்னும் 3மாதங்கள் (சிவில் எஞ்சினியரிங்கில் இறுதி கட்ட வேலை தான் போட்டு தாக்கி நிம்மதியை கெடுத்து விடும்) ஆகுமே விசா வேல்யு வேறு மூன்று மாதங்கள் தான் , அய்யயோ என்று புலம்பவிட்டுவிட்டனர். அதை எல்லாம் தாண்டி மார்ச் 6 என்னுடைய  ராஜினாமாவை அனுப்பிவிட்டேன் 22ஆம் தேதி என்னை விடுவித்து விடுமாறு. இரவு அனுப்பினேன் இ-மெயிலில் காலை முதல் அழைப்பு எம்.டியிடம் இருந்து. அலுவலகத்தில் வந்து காணுமாறு கூறிவிட்டார்.

சிறிதுநேரம் என்னை சமாதானபடுத்த பார்த்தார், பின்னர் வெளிநாடு என்று நினைத்து கூட என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் ஆனால் ஒரு வேண்டுகோளுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துவிட்டு , ஏப்ரல் 5 வரை இருக்குமாறு கேட்டுகொண்டார். நானும் அதை ஏற்று கொண்டேன் நிறைவுடன். ஆனால் சிங்கப்பூரில் என்ன சொல்லி சமாளிப்பது என்று வேறு பயம் தொற்றி கொண்டது. கோபி அவர்களிடமே சொல்லி அதையும் அவர் நண்பரிடம் சம்மதம் வாங்கிவிட்டேன். 

இந்த நிறுவனத்தையும் அந்த நிறுவனத்தையும் பார்த்தேனே ஒழிய , என் வீட்டை நினைக்க மறந்துவிட்டேன். என் மேல் எண்ணிலடங்கா கோபத்தில் இருந்தனர். எங்கயோ போகபோற வீட்டுல வந்து ஒரு மாதம் இருக்க வேண்டாமா என்று தொடங்கி 20 நாள் இருக்க வேணாம் என்றும் 10நாள் இருக்க வேணாமா என்றும் இறுதியில் 3நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். ஆம் ஏப்ரல் 5ல் சந்தோசமாக நிறைவாக  நிறுவனத்தில் இருந்து  நிறைய வாழ்த்துக்களுடன் அனுப்பிவைக்கப்பட்டேன்.   

வெறும் மூன்று நாட்கள் மட்டும் இருந்தவிட்டு ஏப்ரல் 9, 2012. சிங்கபூர் வந்தடைந்தேன். நேற்றோடு இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை என்னை இவ்வாறு எழுத தூண்டிவிட்டது. இங்கு வந்தது முதல் நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக மிக அதிகம் இங்கே நான் கண்ட , கண்டுகொண்டு இருக்கின்ற , காண போகின்ற ஒவ்வொருத்தரும் ஓராயிரம் கதைகள் கொண்டவராக இருக்கின்றனர். அவைகளை நான் கூற தொடங்கினால் எங்கெங்கோ போக வேண்டி இருக்கும்.என்னை என்னுடைய விருப்பங்களை என்னுள் இருந்தவற்றை என்னுடைய ஆசைகளை என்னுடைய ஏக்கங்களை என்னுடைய ஆர்வங்களை எனக்கு நன்றாக விளங்க வைத்த பெருமை. சிங்கபூருக்கு முழுக்க முழுக்க உண்டு.

என் சிந்தனை சிறகை சிறகடிக்க வைத்த சிங்கபூருக்கு சல்யுட் _​/\_

பின்குறிப்பு : என்னடா சுயதம்பட்டம் என்று நினைக்காமல் தொடர்ந்து படித்து வருவோருக்கு நன்றி.இதை நான் என்று கூறாமல் அவன் என்று கூறி சிறுகதை போல எழுதவே நினைத்தேன் ஆனால் அது எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டு தவிர்த்தேன்.அதையும் நேற்று ஒரு நண்பரிடம் கேட்டேன் அவரும் கேள்விக்குறியாகவே பதில் சொல்ல நல்லது இப்படி எழுதியது என்று நினைத்து கொண்டேன்.

Wednesday, 9 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது -1

2009ல் என்னுடைய கல்லூரி பயணம் முடிவுற்றது, ஆனால் அந்த நாட்களின் ஏக்கம் இன்றுவரை என்னுள் அடங்காமல் அவ்வபோது என்று அல்லாமல் பெரும்பான்மையான என் நினைவுகள் அதை பற்றியே தான் நினைத்து கொண்டு இருக்கின்றது. மனதை நெருடும் நேரத்தில் சற்று தனிமையாக என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த இன்பகரமான நிகழ்வுகளை நினைத்தால் போதும், மனம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று விடும்.

எப்பொழுதும் நண்பர்கள் படை சூழ இருந்துவிட்டு முதல் முறை 2010 ஜனவரி 18 கோவை மாநகர் நோக்கி சென்றேன் என்னுடைய முதல் பணிக்கு, அங்கு கற்றது தான் இன்றுவரை எனக்கு உதவி புரிந்து கொண்டு உள்ளது. கட்டிட பொறியாளராக இருப்பதில் கர்வமும் அங்கே தான் என்னுள் தோன்றியது. எவ்வளவு கடினம் என்றாலும் தொழில் நுட்பங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருந்ததால், எந்தஒரு நிகழ்வும் என்னை பாதிக்கவில்லை. அப்பொழுது நான் நினைத்து கொள்வது இந்த ஆர்வம் ஏன் கல்லூரியில் இல்லாமல் போனது அப்படி இருந்து இருந்தால் இன்று நீ எப்படி இருந்து இருக்கலாம் என்று என்னையே கேட்டு கொண்ட நேரம் அது. ஆனால் அது தேவையற்றது என்று பின்னர் என்னை நானே தேற்றியும் கொள்வேன். காலத்திற்கு ஏற்ற ஞானம் வந்தால் போதும் என்ற கோட்பாட்டில்.

என்னுடைய முதல் மாதம் ஊதியம் 2250(14நாட்களுக்கு) வாங்கிய மணி நேரம் அதிகாலை 2.45, அன்றைய நாள் பணி காலை 8.30 தொடங்கி மறுநாள் அந்நேரத்தில் தான் நிறைவுற்றது. எனக்கு பெரும்பாலும் அங்கே நள்ளிரவு ,அதிகாலை தான் ஒவ்வொரு நாளின் பணி நிறைவு பெரும்,பெரும்பாலான கட்டிட பொறியாளர்கள் , தொழிலாளர்கள் வாழ்க்கை இவ்வாறு தான்.அதுவும் நான் ஊதியம் வாங்கிய அந்நாள் மகாசிவராத்திரி வேறு பின்னர் தான் அறிந்து கொண்டேன். அன்று முழுநாளும் கண் விழித்து இருந்தமையால் அதில் இருந்து இவ்வருட மகாசிவராத்திரி கூட கண் விழித்து இருப்பேன். அதில் ஓர் நிறைவு.
கல்லூரியில் இருந்தவரை அபிமான நாயகர்களின் படங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம். 2010 பிப்ரவரி தல நடித்த அசல் வெளியீடு கண்டது நண்பர்களுடன் காண வேண்டும் என்று ஒருநாள் விடுப்பு எடுத்து சம்பளம் வேறு வந்துவிட்டது அதுவரை அப்பாவின் பணம் முதல்முறை என்னுடைய பணத்தில் எனக்கு நான் அன்பவித்து கொள்ள போகிறேன் அதுவே மிக பெரிய போதையை தந்தது. திருச்சியில் அசல் படம் கண்டேன் நண்பர்களோடு. அதுவே இறுதி ஆனாது இப்படி திரைபடத்திற்காக மெனக்கெட்டு ஓர் இடத்திற்கு செல்வது எங்கே இருக்கின்றேனோ அங்கேயே காண தொடங்கினேன். பெரும்பாலும் தனியாக அல்லது உடன் பணிபுரிவோர்களுடன்.

பணிபுரியும் இடத்தில் நற்பெயர் பெருகி கொண்டு இருந்தது , சில நேரத்தில் அதுவே தலை கனமாக மாற தொடங்கியது. ஆனால் எப்பொழுதும் எனக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை அந்த தலை கனத்தை துவம்சம் செய்துவிட்டது.

கோவையில் நான் பணி புரிந்தது வெறும் நான்கு மாதங்களில் முழுமையாக பொறியியல் கல்லூரி கட்டி முடித்தோம் (2லட்சம் சதுரடிகள் 2 தளம் கொண்டவை). அங்கே எனக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுத்த என் முதல் ஆசான் கங்காதரன் சார் அவருடைய அனுபவங்களை அப்படியே எனக்கும் பதியவைத்தார். இன்றுவரையில் என்னுடைய தொழில் நிமித்தான சந்தேகங்களுக்கு அவரே ஆசான். ப்ராஜெக்ட் மேனேஜர் முத்து கிருஷ்ணன் , வேலையாட்கள் செய்த தவறுக்கு ( முந்தினநாள் கட்டியவைகளுக்கு மறுநாள் தண்ணீர் விட வேண்டும்) நான் பழியேற்று கொண்டேன், மிக காட்டமாக என்னை திட்டிவிட்டார் எம் .டி, அதை உடன் இருந்து கண்ட என்னுடைய பி.எம். சைட் ஆபீஸ் சென்றவுடன் கையில் வைத்து இருந்தவற்றை வீசி எறிந்துவிட்டு எனக்காக அவரிடம் வாதாடி உள்ளார்.அதை உடன் இருந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்த பொழுது அவர் மீது அளவில்லா மதிப்பு ஏற்பட்டது. மே 18 2010 பணியில் இருந்து விடை பெற்று வந்தேன்.வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகருக்கு

சட்டிஸ்கரில் புதிய பவர் பிளான்ட் சைட் ஆரம்பம் ஆக போகின்றது என்று வேறு கம்பெனியில் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னையில் கலந்தாய்வு கூட்டம் எல்லாம் நடத்தி, நாளை அங்கு செல்ல வேண்டிய குழுவோடு ரயில் பயணம் என்று கூறிவிட்டனர். பெரும் ஆவலோடு எல்லோரும் காத்திருந்தோம் இதில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவர் என்னோடு இனைந்து இருந்தனர். மறுநாள் பேரிடியாக வந்தது ஒரு செய்தி எனக்கு.......?


ஒரே நாளில் அங்கு தற்பொழுது நிலவரம் சரி இல்லை (மாவோயிஸ்ட் தாக்குதல் நடை பெற்று இருந்தது) என்று காத்திருக்க வைத்துவிட்டனர். எங்கள் குழுவில் பெரும்பாலானோர் அதே கம்பெனியில் பணிபுரிகின்றவர்கள் , என் இரு நண்பர்களோ அதுவரையில் வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள்,நான் தான் இருந்த வேலையை விட்டுவிட்டு வந்தது பெரிய தவறு என்று முதல் முறை உணர்ந்தேன் மீண்டும் சேரலாம் அங்கேயே. ஆனால் வேறு இடத்தில் முயற்சி செய்துவிட்டு பின்னர் பார்த்துகொள்ளலாம் என்று சென்னையில் முயற்சி செய்ய தொடங்கினேன். ஒரு மாதம் கழித்து ஜூன் 21, 2010 உறவினர் கொடுத்த சிபாரிசில் (நேர்காணல் நடத்தினார்கள் இதுவரையில் நான் கலந்து கொண்ட நேர்காணலில் என்னை அதிகம் வாட்டியது அங்கே தான்) புது கம்பெனியில் சேர்ந்தேன்.

சென்னை என்று பெரிய நினைப்பு இல்லாமல் சென்னை என்ற சிறிய நினைப்புடனே தான் இங்கே வந்தேன் , அதே போல நேர்காணல் நடைபெற்ற அலுவலகம் தி.நகர், ஜி .என் செட்டி ரோடு. அலுவலகம் விஸ்தாரமாக சொகுசாக இருந்தது. நேர்காணலின் போதே என்னுடைய ஆவலை தெரிவித்து விட்டேன் ப்லான்னிங் எஞ்சினியர் தான் என்னுடைய விருப்பம் , அதற்க்கு உண்டான அட்வான்ஸ் கோர்ஸ் முடித்துள்ளேன் என்றெல்லாம் கூறினேன் ஆனால் அவர்கள் வழக்கம் போல அதற்க்கெல்லாம் அனுபவம் தேவை , முதலில் சைட்டில் கற்று கொண்டு பின்னர் நானே உங்களை ப்லான்னிங் டிவிஸியன்க்கு எடுத்து கொள்ளுகிறேன் என்று நேர்காணல் நடத்திய கம்பெனியின் சி.இ.ஒ கூறினார். சைட் ரெட் ஹில்ஸ் என்று கூறினார் அது எங்கயோ இங்க அருகில் தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்றேன்.

ரெட் ஹில்ஸ், நான் சென்னை என்று எங்க ஊருக்கு வேணும்னா சொல்லிக்கலாம் என்பது போலவே அது இருந்தது கோயம்பேடில் பேருந்து ஏறினாள் ஒன்றரை மணிநேரம் சென்றது. பின்னர் ரெட் ஹில்ஸ் அடுத்து ஷேர் ஆட்டோ பயணம் சோழவரம் ரேஸ் ரோடு அருகில் தான் சைட். இவ்வளவையும் என்னுடைய லக்கேஜ் தூக்கி கொண்டு பயணித்தேன் ஷேர் ஆட்டோவில் இறங்கி சாலையில் இருந்து உள்ளே சைட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் அதிகாமாக நடை வேறு. மீண்டும் தனித்து விடப்பட்ட நினைப்பு புது இடம் புது சூழல். ஆனால் கல்லூரியில் பயின்ற என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சென்னையில் தான் இருந்தனர் ,கிண்டியில் அறை எடுத்து அவர்களின் நண்பர்களுடன். அது ஒன்று போதும் என்று நினைத்து கொண்டு பணியாற்றினேன். தொடக்கத்தில் தினமும் பணியிடத்திற்கும் கிண்டிக்கும் சென்று வந்து கொண்டு இருந்தேன் பயண நேரம் தினமும் நான்கு மணி நேரம் விழுங்கியது. பின்னர் சைட் அருகிலேயே (வன்னாஞ்சத்திரம்) பணிபுரிவோர்களுக்கு தங்க இடவசதி செய்து கொடுத்தனர்.

கட்டிட கலையில் பல பிரிவுகள் உண்டு சிலர் ஒன்றை மட்டும் பிடித்து அதில் அனுபவத்தை வளர்த்து கொள்வார்கள், இன்னும் பலர் எல்லாவற்றிலும் பங்கெடுத்து எதிலும் அனுபவமற்று இருப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர். நான் என்னுடைய ஐந்து வருட அனுபவ முடிவில் ஏதோ ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளலாம், அதுவரையில் பெரும்பாலானவற்றை தொற்று விட வேண்டும்  வேண்டும் என்று பின்னர் முடிவு செய்தேன், ஏன் என்றால் கோவையில் வேலை கற்றதுக்கும் இங்கு சேர்ந்த இடத்தில் வெறும் 30 சதவிகிதம் தான் ஒற்றுமை மற்றவைகள் எனக்கு மீண்டும் புதியவைகளா இருந்தது (ஸ்டீல் ஸ்ட்ரக்சர்).

வேலை, நான் கோவையில் பணி புரிந்ததைவிட இலகுவாக இருந்தாலும் இங்கேயும் பல நாட்கள் நள்ளிரவு வரை இருக்க வேண்டும். முதல் முறை மொழிவாரியாக பிரிக்க பட்டேன் உள்நாட்டிலேயே, ஆம் நான் பணிபுரிந்த கம்பெனி ஆந்திர முதலாளி இந்தியா முழுக்க பல்வேறு தொழில்துறைகள் நடத்துபவர். என்னுடைய சைட் அருகே மிகபெரிய இடத்தை ரிலைன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அங்கே ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை , என்றாலும் நாங்கள் சிலர் ஒன்றாக இருந்தோம் அதில் குறிப்பாக அங்கேயே 4 வருடங்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் அங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப என்னை வழி நடத்தினார். பின்னர் கார்த்திகேயன் , சதீஷ் என்று என்னை தொடர்ந்து சேர்ந்தவர்கள் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டோம்.

இங்கே தான் முதல் முறையாக என்னுடைய ஊதியத்தில் சரி பாதியை வீட்டிற்கு கொடுக்க துவங்கினேன்.கோவையில் பணிபுரிந்த வரையில் வீட்டிற்கு கொடுத்ததே இல்லை, ஆக இதுவும் மறக்க இயலாத தருணம் எனக்கு.

அங்கு எனக்கு மேலதிகாரியாக பணி புரிந்த Ram Subramaniyan ராம சுப்பிரமணியன் , என்னுடைய பி.எம் ராஜசேகர் இவர்கள் எல்லாம் பக்க துணையாக உதவி புரிந்தனர் என்னுடைய வளர்ச்சிக்கு. மாதம் ஒருமுறை கூர்கான் தலைமை அலுவலகத்தில் இருந்து சி.இ.ஒ விசிட் வருவார் அப்பொழுதெல்லாம் நற்பெயர் வாங்கிக்கொண்டு. நன்றாக சென்று கொண்டு இருந்தது. கிண்டியில் நண்பர்கள் இருந்ததால் அடிக்கடி அவர்களுடன் நேரம் செலவிட்டு தேவை அற்ற விடுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஆனாலும் என்னுடைய பணியின் கருத்தின் காரணமாக எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பல உள்ளடிவேலைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்று கொண்டது இங்கே தான் , தெலுகு பேசும் நபர்களை எவ்வாறு கவர்வது என்று நினைத்து நான் எடுத்த ஆயுதம் தெலுகு சினிமா.அவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து இருப்பதை எடுத்து காட்டி கூறி,அவர்களை பற்றியும் தெரியும் என்பது போல காட்டி கொண்டு அவர்களையும் அரவணைத்து கோஷ்டி பூசல் இல்லாமல் பணி புரிந்தோம். அவ்வப்போது கம்பெனி பார்ட்டி என்று சைட்டிலேயே கொண்டாடுவர் அப்பொழுது எல்லாம் கிண்டிக்கு எஸ்கேப் ஆகிவிடுவேன்.

நான் பணி புரிந்த சைட்டை விரைவாக முடித்தமையாலும் , அருகே இதைவிட அதிக இட கொள்ளளவு கொண்ட வேலை இருந்த காரணத்தினால் மாற்றப்பட்டேன் அருகிலேயே. அங்கேயும் வழக்கம் போலவே நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஸ்டீல் ஸ்ட்ரக்சர் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். உடன் பயின்ற நண்பர்களிடம் பெருமை பீற்றி கொண்டு இருந்தது வழக்கமே. 2010 தீபாவளிக்கு முதல் முறை போனஸ் (சேர்ந்து நான்கு மாதத்தில்) வாங்கி வீட்டில் எல்லோருக்கு ஆடைகள் வாங்கி தந்தது (அம்மாவிற்கு தரவில்லை வாங்க தெரியவில்லை) மறக்க முடியாதது.

தீபாவளிக்கு சென்று திரும்பிய பிறகு ஓமன் நாட்டில் வேலை என்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டேன் சென்னையில், அதில் நானும் இன்னொருவரும் தேர்ச்சி பெற்று விட்டோம். வீட்டிற்கு எல்லாம் சந்தோசமாக சொல்லி விட்டேன். வேலை பார்க்கும் இடத்திலும் நண்பர்களிடம் சொல்லி விட்டேன். அந்த கணத்தில் தலையில் 20 கிலோ கனம் பிடித்தது போன்று இருந்தது. தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு செல்லாமால் இருந்துவிட்டு , சொன்னால் நிச்சயம் விட மாட்டார்கள் என்னுடைய உறவினரிடம் சொல்லி தடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டே. வேலையை விட்டு வந்து விட்டேன். ஆனால் அங்கு என்னோடு பணி புரிந்த அனைவரும் இன்றும் என்னோடு தொடர்பில் உள்ளனர் என்னுடைய பி.எம் உள்பட (இவரிடம் பேசி கொஞ்ச நாள் ஆகிவிட்டது). இதுவெல்லாம் நடந்தது நவம்பர் 16,2010. இங்கயும் நான்கு மாதங்கள் தான். அப்பொழுதே உள்ளுக்குள் உறுத்தியது.

ஓமன் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தங்களுடைய சான்றிதழ்களில் பல அதிகாரபூர்வ கையப்பங்கள் பெற வேண்டும் என்று கூறி அதற்க்கு உண்டான வேலைகளை தொடங்கினேன். நம் தலைமை செயலகம் சென்று கையப்பம் பெற்று , பின்னர் புரோக்கர் மூலம் டெல்லிக்கு அனுப்பி கையெப்பம் பெற்று வந்தது. இதற்க்கு எல்லாம் 20 நாட்களுக்கு மேல் ஆனது. இதற்கிடையே பெரும்பாலானோர் என்னை ஓமன் செல்லுவதை தடுக்கவே நினைத்தனர், உனக்கு முற்றிலும் ஒற்று வராது நீ நிச்சயம் திரும்பி விடுவாய் விட்டு விடு என்று பலவாறாக கூறினார்கள். அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன். அடுத்து மருத்துவ பரிசோதனை எடுத்து கொடுத்து விட்டால் ஒரு சில நாட்களில் பயணம் என்று வந்துவிட்டது.

-தொடரும்

(இந்த நேரத்தில் நான் என்ன முடிவு எடுத்து இருப்பேன் அல்லது என்ன முடிவு  எடுத்து  இருக்க வேண்டும் என்று கூறுங்கள்)


அடுத்த பகுதி