Monday, 31 March 2014

நெடுஞ்சாலை - தமிழில் ஒரு டைப்பான ரோடு மூவிஉதயநிதி வெளியீடு என்று தெரிந்தவுடன் ஏற்கனவே இருந்த ஆவல் அதிகமானது. படம் சில்லுனு ஒரு காதல் இயக்குனர் என்று நினைத்தால், அவர் படத்தின் முன்னோட்டத்துலேயே. அப்படி ஒரு நினைப்பை நம்மிடம்  சுக்கு நூறாக தகர்த்து எறிந்து விட்டார்.

1980களின் நடுபகுதியில் கதை நடைபெறுவது போல இருக்கின்றது. நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளில் உயிர் பணயம் வைத்து கொள்ளை அடிப்பவன் நாயகன், அவனை சுற்றி 3 நபர்கள். அவர்களுடைய பின்னணியே கதை. நாயகனை திருத்த காதல் அதற்க்கு வேண்டும் கதாநாயகி. இவர்களுக்கு காதல் ஏற்பட தேவை மோதல் பின்னர் ஊடல் அதற்க்கு தேவை ஒரு வில்லன். என்று வழக்கமான தமிழ் சினிமா தான் என்றாலும். இயக்குனரின் திரை யுக்தி பல இடங்களில் அசர அடிக்கின்றது. தார் பாய் முருகனாக நாயகன் ஒவ்வொருமுறை கொள்ளை அடிக்கும் போது பின்னணி இசை நெஞ்சை பதற வைத்து , காட்சியின் உள்ளே எளிதாக நுழைய வைத்துவிடுகின்றது. படத்தில் மிக பிடித்தது அவர்கள் கொள்ளை அடிக்கும் காட்சிகள்.

இன்ஸ்பெக்டராக வருபவர் நடிப்பில் புது மொழியை காட்டி உள்ளார். காட்சிக்கு காட்சி பட்டய கிளப்பி உள்ளார். யார் இவர் ???? இனி நிறைய படங்களில் இவரை காணலாம். இவருக்காகவே படத்தை நிச்சயம் காணலாம்.

மற்றபடி படத்தின் திருப்புமுனைகளாக பல காட்சிகள் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும்.

மறந்துட்டேன் இந்தப்படத்தில் வரும் நண்டூருது நரி ஊருது இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு இதுலையே பாருங்க அந்த இன்ஸ் மேனரிசங்களை. பாட்ட தினமும் இப்போ நாலு அஞ்சு தடவ கேட்குறேன்(கேட்க மட்டும் தான் செய்யுறேன்) :)

குறிப்பு : நான் இரண்டுமுறை பார்த்துவிட்டேன் படத்தை. நேரமின்மை காரணமாக விரிவாக எழுத முடியவில்லை. நம்பி போகலாம் கொடுத்த காசு மோசம் போகாது :)

Saturday, 29 March 2014

இனம் - பிழையான படைப்பு

இனம் -

80 நபர்கள் மட்டுமே இருக்கைகள் கொண்ட திரை அரங்கில் இன்று மதிய காட்சிக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து தங்களுடைய இனப்பற்றை காட்டிக்கொண்டோம். உணர்வுபூர்வமான படம் என்று நினைத்த எனக்கு ஏன் வந்திருந்தவர்களும் அப்படி தான் இருந்தனர் முகத்தை விறைப்பாக வைத்து கொண்டு , ஆனால் என்னவோ  பல இடங்களில் நகைச்சுவை படம் போல குட்டி திரை அரங்கமே அதிர்ந்தது சிரிப்பொலியில். சந்தோஷ் சிவன் நம்மிடையே ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பி இருப்பார் போலும் ????


படம் தொடங்கியது முதல் இறுதிவரை எந்தவொரு இடத்திலும் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பதை மருந்துக்கும் கூட கூறவில்லை ஆனால் படம் நெடுக்க இனக்கலவரம் இனக்கலவரம் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக  காண்போரிடம் பதியவைத்து விட்டார். என்ன ***** இனக்கலவரம் , அங்கே மக்களுக்கும் மக்களுக்கும் இடையேவா பிரச்சனை??மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தானே ஒரு அரசாங்கமே (பல நாட்டு துணையுடன் ) தலைமை ஏற்று நடத்திய போரை மிக எளிதாக இனக்கலவரம் என்று எப்படி கூற முடியும். அவர் கூறியது போலவே நானும் கதை கூற வேண்டும் என்றால், ஒரு நாட்டில் இறுதி கட்ட கலவரத்தில் இருந்து தப்பித்து பக்கத்து நாட்டில் தஞ்சம் அடைவோரில் , ஒரு இளம் பெண் ??? அவளுடைய வாழ்வை அவள் பார்வையில் கூறுவதாக படம் இருக்கின்றது.

அதே போல காட்சிகள் நெடுக்க குறியீடு குறியீடு என்று என்னன்னவோ போட்டு பார்வையாளனை (குறியீடு புலிகள் யாரேனும் விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்)  குழப்பி அடித்து உள்ளார், படம் ஆரம்பம் டைட்டில் கார்டில் நான் எதை பார்க்க வேண்டும் என்று குழம்பிவிட்டேன் படத்தில் யார் யார் பங்காற்றி உள்ளனர் என்பதை காண தொடங்கி இவர் அதனூடே போட்ட கார்டூன் குறியீடுகளில் அதைவிட்டு இதை தொடர வேண்டி (ஒரு வேளை படத்திற்கு உதவியவர்கள் என்று யுனிபார்ம் போட்டவர்களுக்கு நன்றி செலுத்தி இருப்பாரோ ???) , இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் போனது தான் மிச்சம்.

சிறுமிகளை (கதை சொல்லும் சிறுமி கூட ) வன்கலவி யுனிபார்ம் போட்டவர்களால் அரங்கேற்ற படுகிறது , அதை மற்றொருவர்  வீடியோ எடுக்கிறார், அப்படியே அருகில் இருக்கும் கேப்டன் பிரசன்னாவிடம் "இதை பற்றி எதாவுது கூறுங்கள் என்று கேட்க , அவரோ என்ன சொல்லுவது இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் தான் ஆனால் போர் இவர்களை மிருகமாக்கி விட்டது "என்று கூறுகிறார். இங்கு இயக்குனர் யாரை நியாயபடுத்துகிறார். கருணாஸ் கதாபாத்திரம் அகிம்சை வழியா ?? போராளிகள் எதிர்ப்பாளரா?? சுயநலவாதியா ?? எது என்பது சந்தோஷ் சிவனுக்கே வெளிச்சம்.

சுனாமி அக்காவாக சரிதா நீண்ட நாள் கழித்து அவரை திரையில் காணவே நிறைவாக தான் இருந்தது அவரின் பாத்திரப்படைப்பும் தெளிவு இல்லாமல் கொன்று விட்டார். சிறுவர்களின் நடிப்பு மிக எதார்த்தமாக அளவாக இருந்தாலும் இயக்குனர் அவர்களுக்கு யதார்த்தம் மீறும் வகையில் திருமணம் செய்து வைத்து முதலிரவு காட்சிகள் கூட வைத்து இருக்கின்றார். இரண்டாம் பாதியில் இவ்வாறான காட்சிகளை காணும் பொழுது இவர் நம் மக்கள் மேல் உள்ள அனுதாபத்தை மறக்கடிக்கவே இப்படத்தை எடுத்து உள்ளார் போல என்றே நினைக்க தோன்றியது. அனுதாபத்தை கூட வெளிக்கொணர முடியாமல் தவிக்கும் என்னை போன்ற சிலரையும் மிக சினம் கொள்ள தோன்றியது.ஒளிப்பதிவு , இசை , நடிப்பு என்று எதை பற்றியும் கூரவிடாமல் தடுத்து விட்டது இயக்குனரின் நேர்மையற்ற எண்ணங்கள் , அதுவும் அவருடைய சாட்சியாக இப்படம் இருக்க வேண்டும் என்று கூட நினைத்து இருப்பார் போல.

நந்தன் என்ற கதாபாத்திரம் தான் படத்தில் என்னை மிக மிக கவர்ந்தது , அவரை அவ்வளவு மெருதுவாக நடிக்க வைத்து உணர்ச்சி காட்டிய இயக்குனருக்கு ஏனோ உணர்ச்சி இல்லாமல் போனது என்று தெரியவில்லை.

படத்தில் வரும் யுனிபார்ம் போட்டவர்கள் எல்லாம் திடமான ஆண்மகனாக காட்டி விட்டு அவர்களை எதிர்த்து போராடுவோர் அனைவரும் அரும்பு மீசை கூட முளைத்து இருக்காதவர்கள், ஏன் ஒருவேளை ஜூனியர் ஆர்டிஸ்ட் பிரச்சனை இருந்து இருக்கும் போல இயக்குனருக்கு. சந்தோஷ் சிவனிற்கு என்ன பாசமோ தெரியவில்லை நம் தமிழ் மக்கள் மேல் அவரும் விடாமல் நமக்காக எடுத்து கொண்டு தான் இருக்கின்றார், ஆனால் பிழையாக அவருக்கு யாரேனும் இதுவரையில் வந்த சேனல் 4 வீடியோக்களை காட்டி தெளியவையுங்களேன்.

இனம் போன்ற  தவறான பதிவுகள் சாட்சியாகி விட கூடாது, இப்படத்தை கண்டு எல்லோரும் அவரவர்களுக்கான எண்ணங்களை புரிந்து எதிர்ப்பை காட்ட வேண்டும். பின் வரும் தலைமுறையினர் இப்படத்தை கண்டு பிழையானவற்றை தெரிந்து கொள்ளாமல் தவிர்க்க தற்பொழுதைய எதிர்ப்புகளே தெளிவு பெற வைக்க வேண்டும் .

Friday, 21 March 2014

குக்கூ - காவியக் காதல்

சென்னையில் பணிபுரிந்து பொழுது சில மாதங்கள் வேளச்சேரி-மைலாபூர் மின்சார ரயிலில் தான் பயணம் , அப்பொழுது அங்கே ரயிலில்  காணும் மாற்றுதிறனாளிகள் பலரும் தங்களுடைய குறைகள் பற்றி எந்தவொரு கவலையும் இன்றி மிக கலகலாப்பாக தங்கள் பணியை செய்து கொண்டு இருப்பார்கள்.அதை காணும் பொழுதெல்லாம் ஏன் இவர்களுடைய இந்த இன்பமான பக்கங்களை எவரும் பதிவு செய்வதை மறுத்து இருளான பக்கங்களாக காட்டுகின்றனர் என்று தோன்றும்.அதை நிவர்த்தி செய்யும் வகையில் குக்கூ திரைப்படம் அற்புதமாக  பதிவு செய்து உள்ளது.

 வழக்கம் போல கதை சொல்லி உங்களின் சுவாரசியத்தை குறைக்க விருப்பமில்லை. காதல் கதை இருவர் சேர்ந்தார்களா இல்லையா அவ்வளவே. தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் 95% படங்களின் கதை தான் என்றாலும் அதை இயக்குனர் சொன்ன விதத்திலும் , கதாபாத்திரங்களின் நடிப்பிலும்  நமக்கு கிடைத்த அருமையான பதிவு இப்படம். இப்படத்தின் ஆக சிறந்த சிறப்பு ஒரு காட்சியில் கூட நமக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்று திணிக்கப்படவில்லை. கதையை அவர்களின் பார்வையில் யதார்த்தமாக காட்சிபடுத்தி உள்ளனர்.


அட்டக்கத்தி தினேஷ் , பிரமிக்க வைத்து உள்ளார் தன்னுடைய பங்கை மிக சிறப்பாக வெளிகாட்டி உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தமிழ் கதாபாத்திரமாக மனதை உருக்கிவிட்டார். சுந்திரகொடியை முதல்முறை சந்திக்கும் இடத்தில் நக்கல் அடிப்பதும் , பின் அவளின் கைகள் தன்னை தொட்டவுடன் அதில் காதல் உணர்வில் திளைக்கும் காட்சி, அவளோடு வாழ்ந்து விட போராடும் காட்சிகள் என்று தினேஷ் நடிப்பில் இப்படம் என்றும் அவருக்கு ஓர் பொக்கிஷம் தான். பல விருதுகள் நிச்சயம் காத்துக்கொண்டு இருக்கின்றது இந்த படத்திற்காக. நான் உங்களை ஒரு தடவ பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கட்டிபிடித்து உடலை தொடும் காட்சியில் நெகிழ வைத்துவிடுவார். தன்னுடைய இயலாமையை ஒரு காட்சியில் கூட வெளிகாட்டிகொள்ளாமல் பார்வை அற்றவனின் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளார். மொத்தத்தில் இவரின் நடிப்பு கிளாஸ்.

மாளவிகா சுதந்திரகொடியாக தன்னுடைய குறை மறந்து வாழ்க்கையில்  ஆசிரியராக ஜெய்க்க வேண்டும் என்று வாழ்ந்து வருபவர். காதல் தோல்வியின் போது அந்த வலியை நமக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு சிறப்பு தான் ஆனாலும் தினேஷ் நடிப்போடு போட்டி போட முடியவில்லை. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க இவருக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும். பிங்க் கலர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , ஆனா அது எப்படி இருக்கும் என்று கேட்டு கொண்டே அது இளையராஜா பாடல் போல இருக்கும் என்று கூறும் பொழுது கண்கள் கலங்கிவிடுகிறது.


சந்திரபாபு , எம்,ஜி.ஆர் , அஜித், விஜய் என்று இவர்களும் தங்களுடைய நடிப்பை வாரி வழங்கி உள்ளனர் அதிலும் விஜய் -அஜித் வரும் காட்சிகள் அட்டகாசம். சந்திரபாபு தான் அவர்களின் காட்பாதராக இருக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரே காட்சியில் இறுதியில் தான் யார் என்பதை மீண்டும் நிருபித்து இருப்பார் (படத்தை பார்த்து இங்கே நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்). அதுவும் தினேஷின் நண்பராக உடன் வருபவர் அட்டகாசமான நடிப்பு. அவரை எங்கோ பார்த்தது போலவே தோன்றுகிறது வேறு எந்த படத்திலாவுது நடித்து உள்ளாரா???. பின்னர் ஆடுகளம் முருகேஷ் தண்ணி பாரதியாக இசை பிரியராக தினேஷை புகழ்ந்து அவருக்கு உதவும் காட்சிகள் என்று தன்னுடைய இருப்பை சரி செய்து உள்ளார்.

இதுபோன்ற களம் உள்ள படங்கள் பெரும்பாலும் அவர்களை பெரும் வாதைக்கு உள்ளாக்கி நம்மை அழவைத்து விட வேண்டும் என்றே இருந்து இருக்கும். அதை முற்றிலும் உடைத்து புதுமையாக படத்தில் வரும் பெரும்பாலோனரும் நல்லவர்களாக , இரக்கம் உள்ளவர்களாக விபத்து என்றால் உதவி செய்வோர் ,யார் என்று தெரியாத  பார்வையற்ற பெண் என்றாலும் அவருக்கு உதவி செய்வோர்கள் .... இப்படி ஆச்சிரியபடுத்தும் காட்சிகள் அதிகம் உண்டு.இரண்டாம் பாதியின் நீளம் சற்று அதிகம் தான்.

இசை அவ்வளவு அழகாக கதையோடு இழையோடுகிறது , சந்தோஷ் நாராயணன் அவர் மீது   எதிர்பார்ப்பை கூடி உள்ளது என்றால் மிகை இல்லை. பின்னணி இசை உறுத்தவே இல்லை இது போன்ற படங்களில் வயலினை போட்டு தீட்டி எடுத்துவிடுவார்கள் ஆனால் இவர் அழகாக ரசிக்க வைத்து உள்ளார் .அதே போல ஒளிப்பதிவும் ரம்மியமாக கவர்கின்றது , பார்வையற்ற அவர்களின் கரு விழிகளில் கூட கமெரா விளையாடி உள்ளது. அற்புதமான பாடல்களை இவரின் ஒளிப்பதிவில் இன்னும் மெருகேத்தி உள்ளார்.எடிட்டிங் தான் கொஞ்சம் இன்னும் கட் செய்து இருக்கலாம் ஆனாலும் அது குறையாக தெரியவில்லை.


இயக்குனர் ராஜு முருகன் தன்னுடைய முதல் படைப்பை காலத்திற்கும் அழியாத படைப்பாக தந்த வகையில் அழுத்தமான வருகையாக பதிவுசெய்து உள்ளார். படம் ஆரம்பித்தது முதல் பல கதாபாத்திரங்கள் வர தொடங்கியதும் அவர்களுக்கு என்று எந்த முன்னுரையும் காட்டாமல் காட்சிகளின் வழியாக நமக்கு புரியவைத்த இடங்கள் மிக சிறப்பு. இதையும் நீங்கள் காணும் போது உணருவீர்கள். படத்தில் ராஜு முருகன் அவராகவே நடிக்கவும் செய்து உள்ளார் நல்லா தான் இருக்கார். சார் ப்ளீஸ் நீங்களும் அமீர் , சசி குமார் , சேரன் போல வர வேண்டாம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்க வைத்துவிட்டது உங்களின் முதல் படைப்பே.

குக்கூ- காவியக் காதல் , அனைவரும் நிச்சயம் திரை அரங்கில் சென்று காண வேண்டிய திரைப்படம்.