Friday 30 August 2013

தங்க மீன்கள் - அன்பின் மறுபக்கம்



நல்ல அற்புதமான  உணர்வுடன் இத்திரைப்படத்தின் தாக்கங்களுடன் இருந்து சுவாசித்து, நாளையே எழுதலாம் என்று தான் நினைத்தேன் , ஆனால் முடியவில்லை , இப்பொழுதே கொட்டிவிடு என்று நினைக்க நினைக்க , அதுவும் சரி தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலே இன்பம்  இன்னும் நூறு மடங்காகும் என்றே பதிவிடுகிறேன்.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக மற்றும் வியாபார நோக்கத்திற்காக என்று எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் , ஒரு உண்மையான எல்லோரின் வாழ்விலும் கடந்து மட்டும் செல்லாமல் என்றும் நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கும் தூய்மையான உண்மையான உயர்தரமான அன்பை திரையில் உணர்ச்சி குவியலாக அற்புதமாக தவமாக இருந்து இதை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தும் அதை நமக்காக வெளிக்கொண்டுவர இத்தனை நாட்கள் எத்தனை எத்தனை இடையூறுகளை கடந்து பொறுமை போற்றி காற்றுக்கொண்டு இருந்து , இன்று நம் எல்லோரையும் இத்திரைப்படத்தின் வழியாக உன்னத வாழ்வியலை காட்டிய இயக்குனர் ராம் அவர்களுக்கு தாழ்மையான நன்றிகள் .

தந்தை மகள் உறவு எவ்வளவு புனிதமானது என்பதை எல்லோரும் அறிந்து இருந்தாலும் , அதை இவ்வளவு நேர்த்தியாக திரையில் அற்ப்புதமாக காண்பது இதுவே முதல் முறை, கதை என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.

செல்லம்மா என்று மகளாக படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி பிடிக்கிறார் , என்ன ஒரு இயல்பான நடிப்பு பார்க்க பார்க்க பூரித்து போகிறது , இயக்குனர் ராமின் பொறுமை அதில் வந்தது தான் போல எவ்வளவு சிறப்பாக நடிப்பை கற்று கொடுத்து இயல்பாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறாரே , அதை காணும் எல்லோரும் இதை தான் கூறுவீர்கள் நிச்சயம்.

கல்யாணி என்று தந்தையாக ராம் அவர்கள் நடிப்பு இல்லை இல்லை வாழ்வு  வாழ்ந்து இருக்கிறார். தன்னுடைய இயலாமையை அவர் வெளிக்காட்டும்  பொழுதும் மகளுக்காக அவர் படும் பாடு நம்மை நிச்சயம் கலங்க வைத்து விடும் , இடைவேளைக்கு முன் வரும் காட்ச்சிகளில் கலங்கிவிட்டேன் ராம் அவர்களுக்கு நான் செய்த சிறப்பு அவரின் நடிப்பில் உணர்ந்து கலங்கினேன். நிச்சயம் இந்த தந்தையை எந்த ஒரு மனிதனும் விரும்புவான்.

வடிவு என்று ராமின் மனைவியாகவும் செல்லம்மாவின் அம்மாவாகவும் சிறப்பாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார், ஓவொரு முறையும் செல்லம்மாளை தன் மகளை கோபத்தில் அடித்து விட்டு பின் கணவனிடம் சொல்லி வருந்தும் காட்சிகள் என்று அன்னையாக மாறி இருப்பார்.

இப்படி எல்லோரும் எவரையும் தவிர்க்க முடியாமல் மிக சிறப்பாக தனது பங்கை அளித்திருப்பார் , ராமின் தந்தையாக வரும் ராமு தன் மகனை ஏளனம் அவனுக்கு தெரிந்தே பேசுவதும் அவனுக்கு தெரியாமல் வருந்துவதும் என்று நம்மை ஈர்த்துவிடுவார். ராமின் அம்மாவாக வரும் ரோகினி அவ்வாறே நேர்த்தியாக நடித்திருப்பார்.

பத்மப்ரியா , வீட்டா மிஸ்ஸாக அருமையான பாத்திரத்தில் மிக அற்புதமாக  சிறிது நேரமே வந்தாலும் , இப்படத்தின் இறுதியில் இவரை ஓட்டியே மிகை படுத்தியே என்றால் இவர் வாயிலாக  பெருமை படுத்தியே முற்றும். இன்னும்மொரு டீச்சர் ஸ்டெல்லா என்று இன்றைய கல்வி முறை மாணவர்களை சிதைக்கும் பாத்திரத்தில் அப்படியே நடித்திருப்பார். இப்படி எவரையும் விட்டு கொடுக்க முடியவில்லை. அனைவரும் மிக சிறப்பாக தங்கள் உழைப்பை கொடுத்து இருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா , ராஜாவே தான் இந்த படத்திற்கு பாடல்கள் மிக இனிமையாக மென்மையாக மனதை வருடியது என்றால் , பின்னணி இசை காட்ச்சிகளோடு கவிதை பேசியது , ஒரு சில இடங்களில் கற்றது தமிழ் இசை வந்தும் அதை என் மனம் விரும்பவே செய்தது, யுவன் நல்ல இயக்குனர்களிடம் நல்ல இசை என்றும் இருக்கும் என்பதை விட நல்ல இயக்குனர் நல்ல இசையை பெறுவார் என்றே இதன் வாயிலாக புரிகின்றது.

இன்னுமொரு மிக முக்கியமானது சிறப்பானது ஒளிப்பதிவு அர்பிந்து என்ற புதியவரா (தெரியவில்லை ), மலைகள் அப்படியே நாமும் உடுருவுவது போலவே இருந்தது , பசுமையாக மலைகளை திரையில் காணுவது போல் அல்லாமல் ஏதோ சுற்றுலா சென்று நேரில் காண்பது போலவே இருந்தது சிறப்பு , அதுவும் அந்த ஆனந்த யாழினை பாடலில் அட்டகாசம்.

இயக்குனர் ராம் அவர்கள் மீண்டும் தன்னிடம் வசனங்கள் எப்பொழுதும் இப்படி தான் , என்று திடமாக உறுதி செய்து உள்ளார் ,
சாம்பிள் கற்றது தமிழ் போலவே
 " இது இவுங்க வாங்கணும் அது அவுங்க வாங்கணும் அப்படினா விளம்பரம் போடுறானுங்க "
"பணம் பிரச்சனை இல்லைங்க பணம் இருக்குற எடத்துல நாம பணம் இல்லாம இருக்கிறது தான் பிரச்சனைங்க "

இறுதியாக முடிவில் மிக அத்தியாவசியமான , யோசிக்க கூடிய அனைவரும் நினைக்க கூடிய ஒரு கருத்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை ஆனால் இந்த காட்சியை கண்டு முடிந்தவுடன் என்னை அறியாமல்  எழுந்து  கை தட்டி என் வணக்கங்களை ஆதரவுகளை தெரிவித்துவிட்டேன்.

இயக்குனர் ராமின் மேல் மிக பெரிய நம்பிக்கை இன்னும் உறுதியாக மனதில் பதிந்துவிட்டது. தங்க மீன்கள் தமிழ் சினிமாவின் தரமான படைப்பின் சிகரம். இத்திரைப்படம் இப்போதைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ததில் மிக பெரிய சந்தோசம். எல்லோரும் குடும்பத்தோடு திரையரங்கு சென்று ஒரு உன்னத வாழ்வியலை கண்டு உணருங்கள்.

தங்கமீன்கள் - உன்னத வாழ்வியல் 

0 comments:

Post a Comment