Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு :

இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.

இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும்   மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல  என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல்  நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.


படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை  பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று  காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.

ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.

அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின்  கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம்  குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.


பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.

இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை  தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.

சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது  போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்பின்குறிப்பு :

1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை  மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள்  என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.

3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.

Monday, 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம்.


இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக  கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய  முயற்சியை  தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது  அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு  எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும்  முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.

 அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )இப்படி கூறியதால்  செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம்  படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,

 FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"


 என்று கிரெடிட் தந்து,  ஏன் படத்தில் கூட  நிச்சயம் வரும் போல,  என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.

எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு  வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும்  , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ  தொடரவோ  முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்


ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா  தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.

இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட  கொஞ்சம்  மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.

செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.

நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"