Friday, 24 January 2014

கோலி சோடா - யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் படம்


விஜய்மில்டன் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களில் பணி புரிந்து இருந்தாலும் இயக்குனராக அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வியாபார ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது ஆனாலும் நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது இயக்கிய படமே கோலி  சோடா அதுவும் அவரின் தயாரிப்பிலேயே துணிவுடன் பசங்க படத்தில் நடித்த பசங்களை கொண்டு எடுத்து உள்ளார்.

படத்தின் முன்னோட்டங்களில் கூட படத்தை பற்றிய சின்ன டீடேயிளிங்  கூறாமல் விட்டது தானோ என்னவோ படம் பார்க்கும் போது அதுத்த காட்சி என்னவாக இருக்கும் எந்தஒரு யூகமும் இல்லாமல் காண முடிந்தது. யதார்த்தமான பாத்திர அமைப்பில் நல்ல ஒரு கமெர்சியல் படைப்பாக வந்துள்ளது.

கதை என்று கூறி உங்களையும் ஒரு யூகத்துக்குள் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. கோயம்பேடு மார்கெட்டில் அவர்களுக்கு  அடையாளம் என்று ஏதும் இல்லாத  மூட்டை தூக்கும் நான்கு இளம் பையன்கள் அவர்களுக்கான அடையாளங்களை தேடி எளிதாக பெற்று பின் எதிர்பாராமல் அதை பெரும் வலியுடன் இழந்து மீண்டும் பெறுவது தான் கதை. புரியாதவங்களுக்கு படம் பார்க்கும் போது நிச்சயம் புரிந்துவிடும்.


பசங்க படத்தில் நடித்த அந்த முக்கியமான நான்கு சிறுவர்கள் தற்பொழுது இந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வளர்ச்சியை பெற்று இருந்த காரணத்தினாலோ அவர்களையே நடிக்க வைத்துவிட்டனர். அந்த பையன்கள் மிக சிறப்பான நடிப்பை தந்து உள்ளனர் அதுவும் அவர்களுக்கென்று நிறைய மாஸ் சீன்கள் கூட இருக்கின்றது. கதைக்கு ஏற்றவாறு அவைகளும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது. அதுவும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கின்றது பசங்களிடம். உணர்வுள்ள காட்சிகளில் அவர்கள் கலங்கும் போது நிச்சயம் நாமும் கலங்கி தான் போகின்றோம்.

ஆச்சியாக பருத்திவீரன் சுஜாதா நடித்துள்ளார் மிக யதார்த்தமான அளவான நடிப்பு , தன் பெண்ணையும் உடன் வேலை  செய்யும்  அந்த நன்கு பசங்களையும் வாஞ்சையுடன் நேசிக்கும் போது நல்ல பாத்திரமாய் நெஞ்சில் பதிந்து போவது சிறப்பு.

இமான் அண்ணாச்சி பசங்கள் உடன் தங்கி வேலை செய்து கொண்டு அவர்களுக்கு அவ்வப்போது உதவி கொண்டும், முதல் பாதியில் கானா பாலா பாடிய பாடல்கள் இவர் பாடுவது போல வந்து குதுகலிக்க வைத்தது அதுவும் பாடல்கள் கானா பாலாவின் குரலில் மிக அருமையாக இருந்தது. அண்ணாச்சி அனைத்து காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்தாலும் , சில நொடியே பாடலில் வரும் ஒரு காட்சியில் அவரின் சோகத்தை காட்டி உருக்கி விட்டனர்.

நாயுடுவாக வருபவர் தான் பசங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தருபவர் , மார்கெட்டின் சங்க தலைவராக செல்வாக்குள்ள மனிதராக கச்சிதமாக கதையில் பொருந்தி போகி காட்சிகளுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து உள்ளார் அவரின் மச்சானாக வரும் மயில் கூட லோக்கல் ரவுடி எப்படி இருப்பானோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நாயுடுவின் மனைவிகளாக ஆம் அவருக்கு இரண்டு மனைவிகள் வருபவர்களும் கணவனின் கம்பீரத்தை தாங்களும் ஏற்று அவாறே நடந்து கொண்டனர், அதிலும் மீனாள் சில காட்சிகளில் தூள் சொர்னாக்காவை மிஞ்ச பார்த்துள்ளார்.

ஆச்சியின் மகளாக வருபவர் அழகு, பசங்களுக்காக உருகுவதும் அந்த வயதுக்கு ஏற்ற காதலில் விழும் போது நம்மையும் விழுங்கிவிட்டார் மென்மையாக. பசங்களின் முதல் தோழியாக வருபவர் அழகில்லை என்று படத்தில் அவளே கூறினாலும் காணும் நமக்கு நிச்சயம் அந்த வலி தெரியும் அதுவும் அதற்காக அந்த பெண் கூறும் பதில் "என்னால தப்பு நடந்து இருந்தா நான் கவலை படனும் , யார் செஞ்ச தப்போ " என்று சர்ச்சில் கூறும் பொழுது செவுட்டடியாய் இருந்தது. பசங்களுக்காக அந்த தோழி முயற்சி எடுக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவளையும் மதிக்க  தொடங்கிவிடுவோம்.

படத்திலேயே மிக சிறந்த காட்சிகள் என்றால் அவர்கள் பெற்ற அடையாளத்தை எப்படி இழக்கின்றனர் என்று இடைவேளைக்கு முன் வரும் போது , அங்கே தான் படம் கமெர்சியல் என்பதையும் மீறி எல்லோர் ஊர்களிலும் எளியோர்கள் வளியோர்களால் படும் வேதனைகளை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து தனி இடம் பிடிக்கிறது. அதன் பின் அவர்கள் அதை திரும்ப பெற கமெர்சியல் சினிமா என்ற மாயயைக்குள் சிக்கினாலும் நம்மை பரிசோதிக்காமல் இனிதே சென்றவகையில் நல்ல படமாகிவிட்டது.

வசனம் மிக பெரிய பலம் படத்திற்கு பாண்டியராஜ் பட்டைய கிளப்பிவிட்டார், ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வையும் அபத்தங்களையும் சோகங்களையும் பிரதிபலித்தது. அதுவும் ஆச்சியிடம் பசங்கள் தாங்கள் ஏன் இப்படி இருக்கின்றோம் என்று கூறும் இடம் மிக அருமையாக இருந்தது. டாஸ்மாக் சில்மிஷங்கள் என்று பல அபத்தங்களை வசனம் மூலம் போகிற போக்கில் தெளித்துவிட்டு போகிறார். பசங்களுக்கு என்று வரும் மாஸ் காட்சிகளில் அவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாக கையாண்டு நம்மையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடும் இடத்தில் வெற்றி பெற்று விட்டார் பாண்டியராஜ்  வசனகர்த்தாவாக.

ஒளிப்பதிவு ஷூட்டிங் சென்று படம் பிடித்தது போல் அல்லாமல் கதை களங்களில் கேமரா பதுக்கி வைத்துவிட்டு எடுத்தது போல இருந்த இடத்திலும் இந்த படம்  கமெர்சியல் படமா என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது. பாடல்கள் என்று தனியாக காட்சியை விட்டு இல்லாமல் கதையோடு உணர்ந்து  காட்சிகளோடு இனைந்து உறுத்தாமல் இருந்தது. மீண்டும் கூறுகிறேன் கானா பாலா பாடல் அருமை. பவர் ஸ்டார் ஒரு பாடலில் பவராகவே &  நடன இயக்குனராக சாம் அன்டேர்சன் உடன்  வந்து சிரிக்கவைக்கிறார்.

படம் முடிந்து கோயம்பேடு மார்கெட்டை  பார்க்க  வேண்டும் என்ற ஆவல் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு நிறைவுடன் வந்தேன் . நிச்சயம் இது தவிர்க்க வேண்டிய சினிமா இல்லை ஒரு தடவை ஆச்சும் எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா கோலி சோடா , யதார்த்த பாத்திர படைப்பில் கமெர்சியல் கலவை.

பின் குறிப்பு :
1. மொத்தம் இரண்டு பேர் மட்டும் தான் இன்று பார்த்தோம் அதுவும் நான் சென்று டிக்கெட் எடுக்கும் போது இன்னொருவர் வந்தால் தான் என்று வழக்கம் போல கூறிவிட காத்திருந்து ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்வமுடன் அண்ணே என்ன படம் என்று பதட்டத்தில் கேட்டு (ஜில்லா வீரம் வேற ஓடிட்டு இருந்தது ) கோலி சோடா என்று கூறியவுடன் திருப்தியுடன் சென்றோம். அவருக்கு இது போல 600 நபர்கள் கொள்ளளவு கொண்ட திரை அரங்கில் வெறும் இரண்டு நபர்கள் மட்டும் காண்பது முதல் முறை போல . நமக்கு மூடர் கூடம் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , என்றென்றும் புன்னகை என்று பழகிடுச்சு. 

5 comments:

 1. இந்தப்படம் வருதுனு.. இப்டி ஒரு படம் இருக்குனே இந்தப்பதிவு பாத்துதான் தெரியுது.. மார்க்கெட்டிங்கே இல்ல போலருக்கே... அதுசரி நல்ல படத்துக்கு எதுக்கு மார்க்கெட்டிங்..

  ReplyDelete
 2. பாண்டிராஜ் - வசனத்துக்கு தேசியவிருது வாங்குன ஆளுள்ளா.. பின்னே ??

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல , படம் மிகவும் என்னக்கு பிடித்து இருந்தது நல்ல வெற்றி அடையும் நீங்களும் பார்த்துட்டு எழுதுங்க.

   Delete
 3. நாளை காலை பார்க்கப் போகிறேன்.... எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான பதிவு... நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா , நல்ல படம் பார்த்திருப்பீர்கள் போல எப்படி இருந்ததது என்றும் கருத்து தெரிவியுங்கள் நன்றி :)

   Delete