Friday, 30 January 2015

இசை - S.J.SURYA MAGICAL STORYவாலி , குஷி , நியூ , அன்பே ஆருயிரே,கொமொரங் புலி (தெலுங்கு படம் பெயர் இப்படி தான் வரும்) என்று எஸ்.ஜே.சூர்யாவின் அனைத்து படங்களும் வெற்றிகளுக்கு அப்பாற்பட்டு சர்ச்சைகளுக்கும் தனித்துவத்துக்கும் பெயர் பெற்றவைகள். இயக்குனராக அவரின் அனைத்து படங்களும் பெரும்பாலோனரை கவர்ந்தவையே.அந்த வகையில் எனக்கும் அவர் எப்போது மீண்டும்  படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது கடந்த இரண்டரை வருடங்களாக எடுத்து இன்று வெளியாகி இருக்கும் படமே இசை. மிகுந்த எதிர்பார்ப்போடு காண சென்றேன். சிங்கபூரிலும் வேலை நாளில் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்தது.எஸ்.ஜே விடம் எனக்கு பிடித்ததே முதல் காட்சியிலயே படத்தின் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிடுவார், அதே இதிலும் டைட்டில் ஓடும் போது கதையை சொல்கிறார் . ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் முன் பெற்ற வெற்றியை இன்னொருவர் வென்று கொண்டே வருவார்கள் அது காலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. அப்படி இசை துறையில் 30 வருடங்களாக வெற்றிசெல்வன் கட்டிய சாம்ராஜ்யத்தை இரண்டே வருடத்தில் அதை தட்டி பறித்த ஏ.கே.சிவாவை வஞ்சம் கொண்டு தகாத வழியில் பழி தீர்க்க நினைக்கிறார் வெற்றி செல்வன். அதனால் வரும் சம்பவங்களே கதை என்று கூறிவிடுகிறார். (இவர் கூறும் போது டைட்டில் ஸ்லைடில் எம்.ஜி.ஆர் , கருணாநிதி , ஜெயலலிதா, கபில் தேவ் , கவாஸ்கர் , சச்சின் , ராஜேஷ் கண்ணா , அமிதாப் , கே.பி மகாதேவன் , எம் .எஸ்.வி , இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் ,பாலசந்தர் , பாரதிராஜா , மணிரத்னம் , வெற்றிசெல்வன் (சத்யராஜ் ) இவர்களின் புகைப்படங்கள் வருகிறது ) அதை தொடர்ந்து நாயகன் அறிமுக பாடலில் அவர் பெற்று இருக்கும் புகழை சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியில் அந்த பாடல் காட்சியை ம்யூட் மோடில் பார்த்து சிவா மீது எந்த அளவுக்கு வெற்றிசெல்வன்  வெறுப்பு கொண்டுள்ளார் என்பதையும் காட்டிவிடுகிறார். அடுத்து இயற்கையான இசையில் ஆல்பம் ஒன்று உருவாக்க காட்டுக்கு செல்கிறார் சிவா. அங்க இசைய பிடிச்சாரோ இல்லையோ அக்மார்க் எஸ் .ஜே சீன்ஸ் நல்லா பிடிச்சு நமக்கு காட்டி இருக்கார் உடன் இசையை அப்பப்போ பிடிக்குறார் ஆமா நாயகியை கண்டு காதலில் விழுகிறார். அதில் இருந்து நாயகியுடன் அங்கு நடைபெறும் காட்சி இங்கே வெற்றிசெல்வன் சிவாவை  நினைத்து நினைத்து வெறுப்பின் உச்சம் செல்லும் காட்சி என்று இடைவேளைக்கு 15 நிமிடங்கள் வரை மாறி மாறி வந்து கொண்டு இருக்கின்றது, நிறையவே பொறுமையை சோதித்தது. ஆனால் காட்டை விட்டு நாயகியை திருமணம் செய்து கொண்டு சென்னை திரும்பியவுடன் திடீர் திடீர் திருப்பங்களுடன் இடைவேளை.

இடைவேளைக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது பேரும் புகழுடன் இருக்கும் ஏ.கே சிவாவை மனநோயாளி ஆக்க அவருடன் இருக்கும் வேலை ஆட்களை வைத்தே வெற்றிசெல்வன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். எல்லா இயக்குனர்களும் மீண்டும் வெற்றிசெல்வனை நோக்கி படையெடுக்க சிவா மனநல காப்பகத்தில் சேர்க்கபடுகிறார். அதில் இருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் அவரை முற்றிலும் செயல் இழக்க வைக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றிசெல்வன் அதை எல்லாம் தாண்டி  மீண்டாரா இல்லை என்னவானார் என்பதை  வெள்ளித்திரையில் காண்க.

இதுவரை நான் எழுதிய விமர்சனத்திலேயே இவ்வளவு விரிவாக கதையை சொன்னது இல்லை. இப்படத்திற்கு சொன்னாலும் ஒன்றும் ஆகபோவதில்லை பார்க்கும் போது இயக்குனரின் மொழி கட்டிபோட்டுவிடும். என்ன வேண்டும் என்றாலும் காட்சியாக்கலாம் ஆனால் அதை இறுதியில் நியாயபடுத்துவதில் தான் இயக்குனரின் நேர்மை பளிச்சிடும். அதில் அட்டகாச வெற்றி பெறுகிறார் எஸ்.ஜே. ஏன்டா இந்த சீன்ஸ் என்று யோசித்த போது அனைத்துக்கும் இறுதியில் விடை கூறுகிறார். நடிப்பிலும் மனுஷன் பிச்சு உதறி இருக்கார் சில ஓவர் டோஸ்கள் சத்யராஜை முந்த வேண்டும் என்பதால் வந்திருக்குது. வெற்றிசெல்வனாக பின்னி பிடல் எடுத்து விட்டார் சத்யராஜ் அசால்டான டயலாக் டெலிவெரி , அனாசியமான உடல் மொழி என்று அம்மாவாசயை நெருங்கி உள்ளார்.

இசையின் இசை அவரை இசை அமைப்பாளராக ஆக்கியது தவறேதும் இல்லை, நிச்சயம் நிறைய இயக்குனர்கள் அவரிடம்  இசை கேட்டு 
செல்லுவாங்க. பிஜிஎம் கூட நல்லாவே போட்டு இருக்கார்.காட்சிபடுத்திய விதத்தில் கூட பாடல்கள் அனைத்தும்  நன்றாகவே உள்ளது . ரம்மியமான ஒளிப்பதிவு. வசனம் மிக பெரிய பலம் அதுவும் சத்யராஜ் பேசுவது எல்லாம் கைதட்டல்கள் அள்ளியது.

இயக்குனராக எஸ்.ஜே வின் உண்மையான மிக பெரிய வெற்றி இப்படம். அதே போல இப்படத்திற்கு இந்தவகையான க்ளைமாக்ஸ் இல்லை என்றால் படம் நிச்சய தோல்வி தான். அந்த முடிவும் கூட விமர்சகர்களால் சொல்லப்பட்டு அதை தெரிந்து படம் பார்த்தால் படம் பார்ப்பதே வேஸ்ட். இப்படி சிக்கலான முடிவை வைத்து அதில் வெற்றி பெறுவோமா இல்லையா என்று தெரியாமல் திரை ரசிகர்களை நம்பி வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிக பெரிய வணக்கங்கள்.

இசை - அதிர்வு நிச்சயம்

பின் குறிப்பு :

1. நான் பார்த்த காட்சி எல்லோரும் ஆராவரமாக கண்டனர் குடும்பம் சகிதமாக , படமுடிவு கூட பலருக்கும் பிடித்தே இருந்தது காதுபட கேட்டது.

2.மூன்று மணி பத்து நிமிடங்கள் என்பது தெரியவே இல்லை  இரண்டாம் பாதி ஜெட் வேகம்.

3.எஸ்.ஜே மேஜிக் நியூ எட்டு வயசு பையன் பெரிய பையன் , அ ஆ காதலை ஆன்மாக்கள் சேர்த்து வைப்பது போல இதிலும் உண்டு அது தான் ஹாட் டாபிக்.

1 comment:

  1. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'செம டிவிஸ்ட்' என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து 'முதல் தேதி' என்ற சிவாஜி படத்தை பாருங்கள்.

    http://sivigai.blogspot.com/2015/02/2015.html

    ReplyDelete