Wednesday, 9 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது -1

2009ல் என்னுடைய கல்லூரி பயணம் முடிவுற்றது, ஆனால் அந்த நாட்களின் ஏக்கம் இன்றுவரை என்னுள் அடங்காமல் அவ்வபோது என்று அல்லாமல் பெரும்பான்மையான என் நினைவுகள் அதை பற்றியே தான் நினைத்து கொண்டு இருக்கின்றது. மனதை நெருடும் நேரத்தில் சற்று தனிமையாக என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த இன்பகரமான நிகழ்வுகளை நினைத்தால் போதும், மனம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று விடும்.

எப்பொழுதும் நண்பர்கள் படை சூழ இருந்துவிட்டு முதல் முறை 2010 ஜனவரி 18 கோவை மாநகர் நோக்கி சென்றேன் என்னுடைய முதல் பணிக்கு, அங்கு கற்றது தான் இன்றுவரை எனக்கு உதவி புரிந்து கொண்டு உள்ளது. கட்டிட பொறியாளராக இருப்பதில் கர்வமும் அங்கே தான் என்னுள் தோன்றியது. எவ்வளவு கடினம் என்றாலும் தொழில் நுட்பங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருந்ததால், எந்தஒரு நிகழ்வும் என்னை பாதிக்கவில்லை. அப்பொழுது நான் நினைத்து கொள்வது இந்த ஆர்வம் ஏன் கல்லூரியில் இல்லாமல் போனது அப்படி இருந்து இருந்தால் இன்று நீ எப்படி இருந்து இருக்கலாம் என்று என்னையே கேட்டு கொண்ட நேரம் அது. ஆனால் அது தேவையற்றது என்று பின்னர் என்னை நானே தேற்றியும் கொள்வேன். காலத்திற்கு ஏற்ற ஞானம் வந்தால் போதும் என்ற கோட்பாட்டில்.

என்னுடைய முதல் மாதம் ஊதியம் 2250(14நாட்களுக்கு) வாங்கிய மணி நேரம் அதிகாலை 2.45, அன்றைய நாள் பணி காலை 8.30 தொடங்கி மறுநாள் அந்நேரத்தில் தான் நிறைவுற்றது. எனக்கு பெரும்பாலும் அங்கே நள்ளிரவு ,அதிகாலை தான் ஒவ்வொரு நாளின் பணி நிறைவு பெரும்,பெரும்பாலான கட்டிட பொறியாளர்கள் , தொழிலாளர்கள் வாழ்க்கை இவ்வாறு தான்.அதுவும் நான் ஊதியம் வாங்கிய அந்நாள் மகாசிவராத்திரி வேறு பின்னர் தான் அறிந்து கொண்டேன். அன்று முழுநாளும் கண் விழித்து இருந்தமையால் அதில் இருந்து இவ்வருட மகாசிவராத்திரி கூட கண் விழித்து இருப்பேன். அதில் ஓர் நிறைவு.




கல்லூரியில் இருந்தவரை அபிமான நாயகர்களின் படங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம். 2010 பிப்ரவரி தல நடித்த அசல் வெளியீடு கண்டது நண்பர்களுடன் காண வேண்டும் என்று ஒருநாள் விடுப்பு எடுத்து சம்பளம் வேறு வந்துவிட்டது அதுவரை அப்பாவின் பணம் முதல்முறை என்னுடைய பணத்தில் எனக்கு நான் அன்பவித்து கொள்ள போகிறேன் அதுவே மிக பெரிய போதையை தந்தது. திருச்சியில் அசல் படம் கண்டேன் நண்பர்களோடு. அதுவே இறுதி ஆனாது இப்படி திரைபடத்திற்காக மெனக்கெட்டு ஓர் இடத்திற்கு செல்வது எங்கே இருக்கின்றேனோ அங்கேயே காண தொடங்கினேன். பெரும்பாலும் தனியாக அல்லது உடன் பணிபுரிவோர்களுடன்.

பணிபுரியும் இடத்தில் நற்பெயர் பெருகி கொண்டு இருந்தது , சில நேரத்தில் அதுவே தலை கனமாக மாற தொடங்கியது. ஆனால் எப்பொழுதும் எனக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை அந்த தலை கனத்தை துவம்சம் செய்துவிட்டது.

கோவையில் நான் பணி புரிந்தது வெறும் நான்கு மாதங்களில் முழுமையாக பொறியியல் கல்லூரி கட்டி முடித்தோம் (2லட்சம் சதுரடிகள் 2 தளம் கொண்டவை). அங்கே எனக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுத்த என் முதல் ஆசான் கங்காதரன் சார் அவருடைய அனுபவங்களை அப்படியே எனக்கும் பதியவைத்தார். இன்றுவரையில் என்னுடைய தொழில் நிமித்தான சந்தேகங்களுக்கு அவரே ஆசான். ப்ராஜெக்ட் மேனேஜர் முத்து கிருஷ்ணன் , வேலையாட்கள் செய்த தவறுக்கு ( முந்தினநாள் கட்டியவைகளுக்கு மறுநாள் தண்ணீர் விட வேண்டும்) நான் பழியேற்று கொண்டேன், மிக காட்டமாக என்னை திட்டிவிட்டார் எம் .டி, அதை உடன் இருந்து கண்ட என்னுடைய பி.எம். சைட் ஆபீஸ் சென்றவுடன் கையில் வைத்து இருந்தவற்றை வீசி எறிந்துவிட்டு எனக்காக அவரிடம் வாதாடி உள்ளார்.அதை உடன் இருந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்த பொழுது அவர் மீது அளவில்லா மதிப்பு ஏற்பட்டது. மே 18 2010 பணியில் இருந்து விடை பெற்று வந்தேன்.வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகருக்கு

சட்டிஸ்கரில் புதிய பவர் பிளான்ட் சைட் ஆரம்பம் ஆக போகின்றது என்று வேறு கம்பெனியில் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னையில் கலந்தாய்வு கூட்டம் எல்லாம் நடத்தி, நாளை அங்கு செல்ல வேண்டிய குழுவோடு ரயில் பயணம் என்று கூறிவிட்டனர். பெரும் ஆவலோடு எல்லோரும் காத்திருந்தோம் இதில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவர் என்னோடு இனைந்து இருந்தனர். மறுநாள் பேரிடியாக வந்தது ஒரு செய்தி எனக்கு.......?


ஒரே நாளில் அங்கு தற்பொழுது நிலவரம் சரி இல்லை (மாவோயிஸ்ட் தாக்குதல் நடை பெற்று இருந்தது) என்று காத்திருக்க வைத்துவிட்டனர். எங்கள் குழுவில் பெரும்பாலானோர் அதே கம்பெனியில் பணிபுரிகின்றவர்கள் , என் இரு நண்பர்களோ அதுவரையில் வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள்,நான் தான் இருந்த வேலையை விட்டுவிட்டு வந்தது பெரிய தவறு என்று முதல் முறை உணர்ந்தேன் மீண்டும் சேரலாம் அங்கேயே. ஆனால் வேறு இடத்தில் முயற்சி செய்துவிட்டு பின்னர் பார்த்துகொள்ளலாம் என்று சென்னையில் முயற்சி செய்ய தொடங்கினேன். ஒரு மாதம் கழித்து ஜூன் 21, 2010 உறவினர் கொடுத்த சிபாரிசில் (நேர்காணல் நடத்தினார்கள் இதுவரையில் நான் கலந்து கொண்ட நேர்காணலில் என்னை அதிகம் வாட்டியது அங்கே தான்) புது கம்பெனியில் சேர்ந்தேன்.

சென்னை என்று பெரிய நினைப்பு இல்லாமல் சென்னை என்ற சிறிய நினைப்புடனே தான் இங்கே வந்தேன் , அதே போல நேர்காணல் நடைபெற்ற அலுவலகம் தி.நகர், ஜி .என் செட்டி ரோடு. அலுவலகம் விஸ்தாரமாக சொகுசாக இருந்தது. நேர்காணலின் போதே என்னுடைய ஆவலை தெரிவித்து விட்டேன் ப்லான்னிங் எஞ்சினியர் தான் என்னுடைய விருப்பம் , அதற்க்கு உண்டான அட்வான்ஸ் கோர்ஸ் முடித்துள்ளேன் என்றெல்லாம் கூறினேன் ஆனால் அவர்கள் வழக்கம் போல அதற்க்கெல்லாம் அனுபவம் தேவை , முதலில் சைட்டில் கற்று கொண்டு பின்னர் நானே உங்களை ப்லான்னிங் டிவிஸியன்க்கு எடுத்து கொள்ளுகிறேன் என்று நேர்காணல் நடத்திய கம்பெனியின் சி.இ.ஒ கூறினார். சைட் ரெட் ஹில்ஸ் என்று கூறினார் அது எங்கயோ இங்க அருகில் தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்றேன்.

ரெட் ஹில்ஸ், நான் சென்னை என்று எங்க ஊருக்கு வேணும்னா சொல்லிக்கலாம் என்பது போலவே அது இருந்தது கோயம்பேடில் பேருந்து ஏறினாள் ஒன்றரை மணிநேரம் சென்றது. பின்னர் ரெட் ஹில்ஸ் அடுத்து ஷேர் ஆட்டோ பயணம் சோழவரம் ரேஸ் ரோடு அருகில் தான் சைட். இவ்வளவையும் என்னுடைய லக்கேஜ் தூக்கி கொண்டு பயணித்தேன் ஷேர் ஆட்டோவில் இறங்கி சாலையில் இருந்து உள்ளே சைட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் அதிகாமாக நடை வேறு. மீண்டும் தனித்து விடப்பட்ட நினைப்பு புது இடம் புது சூழல். ஆனால் கல்லூரியில் பயின்ற என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சென்னையில் தான் இருந்தனர் ,கிண்டியில் அறை எடுத்து அவர்களின் நண்பர்களுடன். அது ஒன்று போதும் என்று நினைத்து கொண்டு பணியாற்றினேன். தொடக்கத்தில் தினமும் பணியிடத்திற்கும் கிண்டிக்கும் சென்று வந்து கொண்டு இருந்தேன் பயண நேரம் தினமும் நான்கு மணி நேரம் விழுங்கியது. பின்னர் சைட் அருகிலேயே (வன்னாஞ்சத்திரம்) பணிபுரிவோர்களுக்கு தங்க இடவசதி செய்து கொடுத்தனர்.

கட்டிட கலையில் பல பிரிவுகள் உண்டு சிலர் ஒன்றை மட்டும் பிடித்து அதில் அனுபவத்தை வளர்த்து கொள்வார்கள், இன்னும் பலர் எல்லாவற்றிலும் பங்கெடுத்து எதிலும் அனுபவமற்று இருப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர். நான் என்னுடைய ஐந்து வருட அனுபவ முடிவில் ஏதோ ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளலாம், அதுவரையில் பெரும்பாலானவற்றை தொற்று விட வேண்டும்  வேண்டும் என்று பின்னர் முடிவு செய்தேன், ஏன் என்றால் கோவையில் வேலை கற்றதுக்கும் இங்கு சேர்ந்த இடத்தில் வெறும் 30 சதவிகிதம் தான் ஒற்றுமை மற்றவைகள் எனக்கு மீண்டும் புதியவைகளா இருந்தது (ஸ்டீல் ஸ்ட்ரக்சர்).

வேலை, நான் கோவையில் பணி புரிந்ததைவிட இலகுவாக இருந்தாலும் இங்கேயும் பல நாட்கள் நள்ளிரவு வரை இருக்க வேண்டும். முதல் முறை மொழிவாரியாக பிரிக்க பட்டேன் உள்நாட்டிலேயே, ஆம் நான் பணிபுரிந்த கம்பெனி ஆந்திர முதலாளி இந்தியா முழுக்க பல்வேறு தொழில்துறைகள் நடத்துபவர். என்னுடைய சைட் அருகே மிகபெரிய இடத்தை ரிலைன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அங்கே ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை , என்றாலும் நாங்கள் சிலர் ஒன்றாக இருந்தோம் அதில் குறிப்பாக அங்கேயே 4 வருடங்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் அங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப என்னை வழி நடத்தினார். பின்னர் கார்த்திகேயன் , சதீஷ் என்று என்னை தொடர்ந்து சேர்ந்தவர்கள் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டோம்.

இங்கே தான் முதல் முறையாக என்னுடைய ஊதியத்தில் சரி பாதியை வீட்டிற்கு கொடுக்க துவங்கினேன்.கோவையில் பணிபுரிந்த வரையில் வீட்டிற்கு கொடுத்ததே இல்லை, ஆக இதுவும் மறக்க இயலாத தருணம் எனக்கு.

அங்கு எனக்கு மேலதிகாரியாக பணி புரிந்த Ram Subramaniyan ராம சுப்பிரமணியன் , என்னுடைய பி.எம் ராஜசேகர் இவர்கள் எல்லாம் பக்க துணையாக உதவி புரிந்தனர் என்னுடைய வளர்ச்சிக்கு. மாதம் ஒருமுறை கூர்கான் தலைமை அலுவலகத்தில் இருந்து சி.இ.ஒ விசிட் வருவார் அப்பொழுதெல்லாம் நற்பெயர் வாங்கிக்கொண்டு. நன்றாக சென்று கொண்டு இருந்தது. கிண்டியில் நண்பர்கள் இருந்ததால் அடிக்கடி அவர்களுடன் நேரம் செலவிட்டு தேவை அற்ற விடுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஆனாலும் என்னுடைய பணியின் கருத்தின் காரணமாக எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பல உள்ளடிவேலைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்று கொண்டது இங்கே தான் , தெலுகு பேசும் நபர்களை எவ்வாறு கவர்வது என்று நினைத்து நான் எடுத்த ஆயுதம் தெலுகு சினிமா.அவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து இருப்பதை எடுத்து காட்டி கூறி,அவர்களை பற்றியும் தெரியும் என்பது போல காட்டி கொண்டு அவர்களையும் அரவணைத்து கோஷ்டி பூசல் இல்லாமல் பணி புரிந்தோம். அவ்வப்போது கம்பெனி பார்ட்டி என்று சைட்டிலேயே கொண்டாடுவர் அப்பொழுது எல்லாம் கிண்டிக்கு எஸ்கேப் ஆகிவிடுவேன்.

நான் பணி புரிந்த சைட்டை விரைவாக முடித்தமையாலும் , அருகே இதைவிட அதிக இட கொள்ளளவு கொண்ட வேலை இருந்த காரணத்தினால் மாற்றப்பட்டேன் அருகிலேயே. அங்கேயும் வழக்கம் போலவே நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஸ்டீல் ஸ்ட்ரக்சர் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். உடன் பயின்ற நண்பர்களிடம் பெருமை பீற்றி கொண்டு இருந்தது வழக்கமே. 2010 தீபாவளிக்கு முதல் முறை போனஸ் (சேர்ந்து நான்கு மாதத்தில்) வாங்கி வீட்டில் எல்லோருக்கு ஆடைகள் வாங்கி தந்தது (அம்மாவிற்கு தரவில்லை வாங்க தெரியவில்லை) மறக்க முடியாதது.

தீபாவளிக்கு சென்று திரும்பிய பிறகு ஓமன் நாட்டில் வேலை என்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டேன் சென்னையில், அதில் நானும் இன்னொருவரும் தேர்ச்சி பெற்று விட்டோம். வீட்டிற்கு எல்லாம் சந்தோசமாக சொல்லி விட்டேன். வேலை பார்க்கும் இடத்திலும் நண்பர்களிடம் சொல்லி விட்டேன். அந்த கணத்தில் தலையில் 20 கிலோ கனம் பிடித்தது போன்று இருந்தது. தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு செல்லாமால் இருந்துவிட்டு , சொன்னால் நிச்சயம் விட மாட்டார்கள் என்னுடைய உறவினரிடம் சொல்லி தடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டே. வேலையை விட்டு வந்து விட்டேன். ஆனால் அங்கு என்னோடு பணி புரிந்த அனைவரும் இன்றும் என்னோடு தொடர்பில் உள்ளனர் என்னுடைய பி.எம் உள்பட (இவரிடம் பேசி கொஞ்ச நாள் ஆகிவிட்டது). இதுவெல்லாம் நடந்தது நவம்பர் 16,2010. இங்கயும் நான்கு மாதங்கள் தான். அப்பொழுதே உள்ளுக்குள் உறுத்தியது.

ஓமன் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தங்களுடைய சான்றிதழ்களில் பல அதிகாரபூர்வ கையப்பங்கள் பெற வேண்டும் என்று கூறி அதற்க்கு உண்டான வேலைகளை தொடங்கினேன். நம் தலைமை செயலகம் சென்று கையப்பம் பெற்று , பின்னர் புரோக்கர் மூலம் டெல்லிக்கு அனுப்பி கையெப்பம் பெற்று வந்தது. இதற்க்கு எல்லாம் 20 நாட்களுக்கு மேல் ஆனது. இதற்கிடையே பெரும்பாலானோர் என்னை ஓமன் செல்லுவதை தடுக்கவே நினைத்தனர், உனக்கு முற்றிலும் ஒற்று வராது நீ நிச்சயம் திரும்பி விடுவாய் விட்டு விடு என்று பலவாறாக கூறினார்கள். அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன். அடுத்து மருத்துவ பரிசோதனை எடுத்து கொடுத்து விட்டால் ஒரு சில நாட்களில் பயணம் என்று வந்துவிட்டது.

-தொடரும்

(இந்த நேரத்தில் நான் என்ன முடிவு எடுத்து இருப்பேன் அல்லது என்ன முடிவு  எடுத்து  இருக்க வேண்டும் என்று கூறுங்கள்)


அடுத்த பகுதி


3 comments:

  1. அழகாக கூறியிருக்கிறீர்கள்... :-)

    ReplyDelete
  2. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்... நீங்களே சொல்லிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா அடுத்து முழுமையாக முடித்துவிட்டேன் அதையும் படித்து கூறுங்கள் :)

      Delete