Thursday, 10 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது - 2


ஓமன் போகலாமா வேண்டாமா என்ற இருவேறு சிந்தனையில் என்னை நானே வாட்டி வதைத்து கொண்டு இருந்தேன், போனால் ஒருவேளை நம்மால் சிறப்பிக்க முடியாமல் திரும்பி வருவதற்கு போகாமல் இருந்துவிடலாம் என்று நினைத்தால், இங்கே நான் தலைகனத்தில் பிதற்றிய பிதற்றலுக்கு பதில் சொல்லியே தாவு கிளிந்துவிடுமே ,வீட்டில் கூட மதிக்க மாட்டார்களே, உறவினர் மூலம் கிடைத்த வேலையை விட்டதற்காக எல்லோரிடத்திலும் தலை குனிந்து நிற்க வேண்டுமே. இதற்கு போய்விட்டால் தான் என்னவோ என்று கிட்டத்தட்ட பித்தநிலையில் தான் இருந்தேன்.

அந்நேரத்தில் தஞ்சையில் உடன் பயின்ற நண்பனின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், அவரை காண தஞ்சை சென்று அவனிடம் புலம்பிவிட்டு. மறுநாளும் அவனை காண சென்று அன்று வேறு நந்தலாலா வெளியீடு அவனும் கொஞ்சம் ரிலக்ஸ் ஆகும் பொருட்டு இருவரும் படத்திற்கு சென்றோம், தஞ்சை பிக் சினிமாஸில் நான் கண்ட முதல் திரைப்படம் நந்தலாலா தான். படத்தின் இரண்டாம் பாதியின் போது இருமுறை சென்னை லேன்ட் லைனில் இருந்து கால் வந்தது படத்தின் ஆர்வத்தால் ஒருமுறை சைலேன்ட்டில் போட்டுவிட்டு மறுமுறை வந்தபோது கட் செய்துவிட்டேன்.


படத்தின் இறுதிகட்ட பாடலின் போது மீண்டும் வந்த அழைப்பை ஏற்று பேசிய போது, ஹலோ கருணா நீங்க இன்னும் மெடிக்கல் சேர்டிபிகட் தரலை, ரொம்ப பிரஷர் பண்ணறாங்க எனி ப்ரொப்லெம் என்று கேட்டனர். சாரி சார் எனக்கு விருப்பமில்லை ஓமன் செல்ல என்று மட்டும் கூறிவிட்டு கட் செய்து விட்டேன். அவர்களும் என்னை மீண்டும் அழைக்கவில்லை. நானோ படம் முடிந்து வீடு செல்லும் வரை மிகுந்த வேதனையில் துன்புற்றேன். எத்தனையோ நபர்கள் தூரதேசம் போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கையில் கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடித்து விட்டுமே. யாரையும் பழி சொல்ல வாய்ப்பில்லை ,என்னுடைய வாய்ப்பை என்னுடைய இன்பங்களுக்காக நானே கெடுத்து கொண்டே என்பது மட்டுமே உண்மை.

மீண்டும் சென்னை டிசம்பர் 20 ,2010ல் பயணம் , வேலை தேடுதல் மீண்டும் தொடக்கம், மீண்டும் ஒருமுறை செய்தவேலையை விட்டதுக்கு மனதார உண்மையாக வருத்தப்பட்டேன் (இந்த தவறை இதன் பிறகு இன்று வரை செய்யவில்லை).தஞ்சையில் கண்ட நண்பனும் சென்னைக்கு ஒரு நேர்காணலிற்கு வந்து செலக்ட் ஆகிவிட்டான். பின்னர் என்னை சந்திக்க வந்த போது அவன் தேர்ந்து எடுக்கப்பட்ட நிறுவனத்தின் இணையத்தை காண்பித்தான், அப்பொழுதே நான் அவனிடம் சொன்னேன் இந்த நிறுவனத்திற்கும் என்னுடைய விண்ணப்பத்தை அனுப்ப போகிறேன் என்று, அவனும் ஒற்றுகொண்டான். அந்நிமிடமே அனுப்பிவிட்டேன். அன்று மாலையே நாளை நேர்காணலிற்கு அலுவலகம் வந்துவிடுமாறு கூறிவிட்டனர். மனநிறைவுடன் மறுநாள் டிசம்பர் 24 , 2010 அன்று மயிலாப்பூர் , டாக்டர்.ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள அந்த அலுவலகத்துக்கு சென்றேன்.

என்னை நேர்காணல் கண்ட ராஜ்குமார் முதலிலேயே கூறிவிட்டார் எங்களுக்கு அளவு மதிப்பீட்டாளர் தான் தேவை என்று எனக்கு முழுக்க முழுக்க சைட் அனுபவம் தான் ஆனால் இதுவோ நான் முன்னர் கூறியது போல பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. ஏதோ ஒரு தைரியத்தில் அனுபவம் உண்டு என்று கூறியவுடன் , அவரோ சிறிய அறையின் இன்டீரியர் வேலைபாடுகளுடன் உள்ள வரைபடத்தை கொடுத்து அளவுகள் எடுக்க சொல்லிவிட்டார். நானும் சைடில் பில்லிங்கு அளவுகள் எடுப்பது போன்று எடுத்து கொடுத்துவிட்டேன். அவரும் அதில் நிறைவு கொண்டவராக ,சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்னர் நாளை கூப்பிடுகிறோம் என்று என்னை அனுப்பிவிட்டார்.

ஆனால் நாளையோ எனக்கு நாளை நாளை நாளை நாளை நாளை நாளை என்று 30 நாளை ஆனது.இந்நாட்களில் வேலை இல்லாமல் நல்ல வேலைய்யை விட்டதற்கு கிடைத்த தண்டனை என்று மனதில் பச்சையாய் பதிந்து போனது. மீண்டும் அந்த மயிலாப்பூர் நிறுவனத்துக்கு நானே தொலைபேசியில் அழைத்து என் விவரங்களை கூறி நேர்காணலின் முடிவு என்னிடம் தெரிவிக்கவில்லை என்ன ஆனது என்று கேட்டேன் சிறிது நேரம் லைனில் இருக்க சொல்லி பின்னர் நாளை வருமாறு கூறினர்.

ஜனவரி 23 , 2011 மீண்டும் சென்றேன் இம்முறை நேரடியாக எம்.டியை தான் காண போகிறேன் என்று அங்கு தெரிந்துகொண்டேன். இது தெரியாமால் சாதாரணமாக வந்தது நினைத்து உள்ளுக்குள் நெருடபட்டேன். அழைத்தார்கள் மேல் அறைக்கு சென்றேன் நல்ல விஸ்தாரமாக இன்டீரியர் வேலைபாடுகளுடன் அதுவரை அதுபோன்ற இடம் திரைப்படங்களில் தான் பார்த்து உள்ளேன் (சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இருப்பது போல ). பார்த்தால் அழகிய ஆண்டி பெண் தான் எம்.டி , அதுவே மனதை சஞ்சலபடுத்தியது. கண்டிப்பாகா தேறுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டேன். அதற்க்கு ஏற்றது போல அவர்களின் கேள்வி அமைந்தது என்ன கருணாநிதி ? ஸ்டாலின் ? என்று பெயர் நான் என்ன அரசியாலா பண்ணுறேன் என்று சிரித்து கொண்டே கேட்டார்கள். நானோ என் சொந்த ஊர் தஞ்சாவூரில் இருக்கும் வரை இந்தபெயரின் பெருமையை கேட்டே வளர்ந்துவிட்டேன் இங்கே வந்த பிறகு தான் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர் என்று சிரித்தும் சிரிக்காமலும் கூறிவிட்டேன் அவர்கள் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். பின்னர் கடவுள் நம்பிக்கை இருக்கா என்று கேட்டார்,( உள்ளுக்குள் இந்த பெயர் வைத்தததால் என்ன கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது என்று நினைத்து கொண்டே நல்ல வேலை எங்க தாத்தா ராமசாமி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்துகொண்டு). இருக்கின்றது என்றேன். எப்பபோ சாமி கும்பிடுவ என்று திரும்ப அதே கேள்வி? என்னடா இது சோதனை என்று சில நொடி தடுமாற்றத்திற்கு பின் வாரம் இருமுறை கோவிலுக்கு போவேன் என்று பொய் சொன்னேன். ஓஹோ இஸ் குட் என்று பைலை நான் தரும் போது வலது கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை பார்த்து உறுதி செய்து கொண்டார். பின்னர் வேலை சம்மந்த கேள்வி பதில்கள், பொய் மட்டும் சொல்லவே கூடாது என்ற அறிவுரை.இறுதியில் நான் தேர்ந்து எடுக்கபட்டுவிட்டேன். இம்முறை இந்த நிறுவனம் இன்டீரியர் வேலைபாடுகளை தான் முதன்மையாக கொண்டது. இது என்னுடைய அடுத்த புது அனுபவம்.

ஜனவரி 31 , 2011 முதல் அங்கு பணியை தொடங்கினேன்.

இந்த நிறுவனத்தில் தான் இதுவரையில் என்னுடைய அனுபவத்தில் அதிக நாட்கள் வேலை பார்த்தது (ஒன்னேகால் வருடம்  ), என்னை நான் தொழில் ரீதியாக முழுமை(ஓரளவுக்கு) படுத்தி கொண்டதும் இங்கே தான். என்னுடைய பணிக்காக அதிகபட்ச அங்கீகாரம் பெற்றது இங்கே தான்.ஓமன் சென்று இருந்தால் கூட இங்கு பெற்ற வளர்ச்சியை பெற்று இருப்பேனா என்பது கேள்விகுறி தான்.இங்கு நான் செயல்படுத்த பட்ட தொழில்முறை தான் இன்றும் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கின்றது.

முதலாளியாகவும் & தலைமை அதிகாரியாகவும் ஒரே பெண்  இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது மிகவும் கடினாமான சூழலை உருவாக்கும் என்பதை புதிதாக அப்பொழுது பணியாற்றிய  மயிலாப்பூர் நிறுவனத்தில்  உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். அளவு மதிப்பீட்டாளர் என்று எடுத்தமையால் முழுக்க அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது, முதல் இரண்டு நாட்கள் நான்கு பண்டில் வரைபடங்களை கொடுத்து ஸ்டடி பண்ணுங்க என்று கூறினார் என்னை நேர்காணல் எடுத்த ராஜ்குமார் அவர்கள், அவர்களுடைய ப்ராஜெக்ட்டில் தான் இருக்க போகிறேன் என்றும் தெரிந்து கொண்டேன்.

முழுக்க முழுக்க சைடில் பணிபுரிந்து விட்டு இப்படி ஒரே அறையில் இருப்பது மூன்றாம் நாளிலேயே கடுப்படித்து விட்டது, அதுவும் அந்த நிறுவனத்தின் கட்டுபாடுகள் , எலிமெண்டரி ஸ்க்கூளை விஞ்சிவிடுவது போல இருந்தது. மதிய சாப்பாடு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், அலுவலகத்தில் ஸ்மோகிங் ஏரியா கிடையாது, காலை 9.00 மணிக்கு வந்தால் மாலை 6.00 மணிக்கு தான் வெளியேற வேண்டும்.இடையில் எந்தஒரு காரணத்திற்கும் வெளியே போக அனுமதி இல்லை ப்ராஜெக்ட் அன்றி. நான் வெஜ் சாப்பிடகூடாது. இப்படியாக அடுக்கி கொண்டே போகலாம் கட்டுபாடுகளை. ஒரே வாரத்தில் முடிவு செய்தேன் நம் அலுவலகத்தில் இருந்தால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன்,எனக்கு ஒற்று வரும் சைட் வேலை தான் சிறந்தது நான் நினைத்து கொண்டு இருந்தது போலவே. கவர் டுட்டிக்காக சைட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டேன், அபிராமிபுரத்தில் ஒரு செல்வந்தரி பாட்டி  வீட்டின் இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு. அப்பாட்டியோ எங்கள் அலுவலகத்தில் போட்ட கட்டுபாடுகளை தூக்கி சாப்பிட்டு விட்டது போல இருந்தது அவர்களின் கட்டுபாடுகள்.கட்டிட  வேலையின் போது வேலையாட்கள் பீடி குடிபதற்கு தடை போட சொன்னால் பார்த்துகொள்ளுங்கள். எவன் அங்க வேலை பார்க்க வருவான். அப்படி தான் இருந்தது அங்கே பணிபுரியும் பொழுது.

ஒரு மாதங்களாக வேலை அங்கு போய்கொண்டு இருந்தது அலுவலக பக்கம் போகாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டு இருந்தது, அத்தியாவசியாமாக வரைபடம் உடனடியாக தேவைபட அலுவலகம் சென்றேன் அன்று அப்பொழுது அங்கு வந்த எம்.டி , என்னை பார்த்து யாருப்பா நீ புது பையன் என்று கேட்க சொல்லுவது அறியாமல் முழித்தேன் அருகில் இருப்போர் கூறினார் இவர் தான் அவர் என்று இம்முறையும் சிரிப்பு தான், என் பெயருக்காக. நானும் கேன சிரிப்பை சிரித்துவிட்டு வந்து விட்டேன். மாதம் ஒருமுறை மீட்டிங் என்று அனைத்து சைட்டிலும் இருந்து அழைக்கபடுவர். எல்லோரும் ஏதோ நேற்றே இறந்தது போல முகத்தை வைத்து கொண்டு  வந்திருந்தனர். எனக்கு அது தான் முதல் முறை என்பதால் சாதரணமாக சென்றேன். அப்பொழுது சைட்டில் இருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு விதித்தனர் அதாவுது தினமும் காலை இன்று என்ன வேலைகள் நடக்க போகிறது  என்றும் , மதியம் மேற்கூறிய வேலைகளின் நிலவரம் பின் மாலை அன்றைய நாளின் முடிவுகள். இப்படி தினமும் மூன்று முறை எம்.டிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லோரும் மீண்டும் ஒருமுறை உச் கொட்டினர் அவர்களுக்குள்ளே தான் கேட்டு கொண்டது. நான் இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல் தொடர்ந்தேன் சில நாட்கள் ஆனால் என்னுடைய மேலதிகாரி மூலம் அனுப்ப வேண்டும் என்று செயல்படுத்தபட்டேன். 

அன்று முதல் தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன் அனுப்பிவிடுவேன், முதல்நாள் மட்டும் பதில் ஓகே என்று இரவு வந்தது பின்னர் மூன்று மாதங்கள் பதிலே வரவில்லை என்றாலும் நான் அனுப்புவதை விடவில்லை. எதேச்சையாக சந்திக்கும் போது ஒருநாள்  எம்.டி, உன்னோட அப்டேட்ஸ் டெய்லி பாக்குறேன் குட் கீப் இட் அப் , ஜஸ்ட் கண்டினியு யுவர்ஸ் வே என்றார். அப்பாடி முதல் வாழ்த்து கிடைத்துவிட்டது இதை தொடர வேண்டும் என்று நினைத்து  கொண்டு இருக்கும் போது, அடுத்த நாளே அலுவலகத்திற்கு மிக மிக அருகில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டேன். நான்கு தளங்கள் கொண்டவையாக வரை படங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. கோபி என்ற அந்த நிறுவனத்தில் 3 வருடங்களாக  பணிபுரிந்தவர் , எனக்கு மேல் அதிகாரியாக நியமிக்கபட்டார். முழுக்க முழுக்க சைட் கண்ட்ரோல் என்னுடையாதாக வழங்கப்பட்டது. உதவி தேவை என்றால் கோபி அவர்களிடம் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். நிறுவனத்திலும் மற்ற சைட்களை விட இதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவை எல்லாம் நான் சேர்ந்து மூன்றுக்கு குறைவான  மாதங்களில் அங்கே நியமிக்கப்பட்டேன் ஏப்ரல் 17, 2011 அன்று.

தொடங்கியது முதல் ஏற்கனவே நான் பழகிய வேலை என்பதால் எளிதாக கையாளமுடிந்தது , ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் சென்றது.கடுமையான இட நெருக்கடிக்குள் வேலை செய்வது ஒன்று தான் புதிதாக இருந்தது.நகரின் மையமான பகுதி என்பதால் கான்க்ரீட் இரவு 10 மணிக்கு மேல் தான் போட அனுமதி கிடைக்கும். பத்து மணிக்கு ஆர்டர் செய்தால் அதன் பிறகு இரண்டு மணிநேரம் கழித்து 12 மணிக்கு மேல் தான் வரும் ரெடி மிக்ஸ் கான்க்ரீட். பின்னர் தொடங்கி வேலை முற்றிலும் முடிய அதிகாலை 5ல் இருந்து 6 மணி ஆகிவிடும். அப்பொழுதும் அந்நேரத்தில்  மெசேஜ்  செய்துவிடுவேன் விவரமாக எப்பொழுது தொடங்கியது ? எவ்வளவு அளவு ? எப்பொழுது முடிந்தது ? என்று அதற்க்கு மட்டும் அந்நேரத்தில் கூட ரிப்ளை வரும் முதலில் அதிர்ந்தேவிட்டேன். என்னடா இந்நேரம் கூட பதில் வருது என்று.

குறிப்பிட்ட நாட்களுக்குள் மிக வேகமாக வேலை நடந்து கொண்டு இருந்தது, ஆகஸ்ட் 9ஆம் தேதி மூன்று தளம் கூரை கான்க்ரீட் முடிந்து விட்டது , இதர வேலைகள் கூட தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தநேரம், என்னுடைய சக ஊழியர் அம்பேத்கர், இவரும் ஒருவகையில் தொழில் ஆசான் தான் என்னை வேலையில் மிக பயங்கரமாக ஊக்கபடுத்துவார். அவரின் மூலம் வேறு நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு இருக்கின்றது (நான் தான் அந்த வாய்ப்பை கேட்டேன் ஆனால் ஏன் என்று விவரமாக கூறினால் இது போல இன்னும் நாற்பது பதிவுகள் ஆகும் விவரமாக பின்னர் காண்போம்) என்று கூறினார். நானும் அங்கே சென்று நேர்காணலில் நன்கு பேசி எப்பொழுது சேருகிறேன் என்று வரை முடிவு செய்துவிட்டு வந்தேன். அரசால் புரசலாக அலுவலகத்தில் தெரிய தொடங்கி எம்.டி அழைத்து விட்டார். இது நான் அவரை காண்பது மூன்றாவது முறை. ஏன் வேலை விட்டு போக போகிறாய் ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நன்றாக போய்கொண்டு இருக்கும் உன் சைட் நீ போய்விட்டால் அதை டேக் ஓவர் செய்வது வீண் நேர செலவு என்று என்னை சமாதானபடுத்தி, சம்பள உயர்வு அங்கேயே முடிவு செய்து , மாதம் 3000 ரூபாய் இன்சென்டிவ் என்றும் அதை ப்ராஜெக்ட் முடியும் போது மொத்தமாக பெற்று கொள் என்று என்னை சம்மதிக்க வைத்தார்கள் சாமர்த்தியமாக. முதல் முறை தொழில் நிமித்தமாக என்னை நான் புரிந்துகொண்டேன்.

அதே வேகத்தில் வேலையும் சென்றது செப்டம்பர் மாதம் நான்கு தல ரூப் முடிந்துவிட்டது. இனி உள்வேலைகள் தான் அதுவும் தொடர்ந்து  கொண்டே வந்தது. பின்னர் நிறுவனத்தில் கட்டுபாடுகளுக்கு தான் பஞ்சம் இல்லையே அதில் இன்னொன்று எவருடைய வேலை அம்மாதத்தில் சரிவர இல்லையோ அவரின் குறிப்பிட்ட அளவு ஊதியம் பிடித்து கொள்ளப்படும் அவை பின்னர் தான் வழங்குவார்கள். எவ்வளவு வேதனையான  ஒன்று இது. எனக்கு அது  போல ஒருமுறையும் நடந்தது இல்லை அப்படி நடந்து இருந்தால் அன்றே வேலையை விட்டு இருப்பேன்.


அக்டோபர் 22,2011 நிறுவனத்தில் தீபாவளி போனஸ் தருவதாக கூறப்பட்டு, எல்லோரும் அலுவலகம் அழைக்கப்பட்டு இருந்தனர். அதுவரையில் நான் பெற்றிடாத பணம் அன்று என் கையில் புரண்டது. என் நண்பர்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு சந்தோசமடைந்தேன். ஆனால் என் வீட்டில் சொல்லவில்லை. பின்னர் வேலை சுணக்கம் கண்டது உரிமையாளர்களின் நேர  வீணடிப்பு தான் காரணம் என்பதால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. அதே போல இன்னுமொரு கட்டுப்பாடு என்னை அழைத்து என்னுடைய சைட்டிற்காக மட்டும் போடப்பட்டது. வேலையாட்கள் அசைவம் சைட்டில் சமைத்து சாப்பிடகூடாது அருகாமையில் உள்ளவர்கள் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள்  என்று. அடங்கோ அப்போ மாமிங்க தான் சித்தால வரணும் , அய்யர்வாள் தான் மேஸ்திரியா இருக்கணும் என்று காட்டமாக கூறிவிட்டேன். 
முக்கியமான அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்து கொண்டே இருந்தது, சில நேரத்தில் பல வாக்கு வாதங்கள் திட்டினாலும் பின்னர்  சமாதானமும் செய்து கொண்டே வந்தார் எம்.டி. என்னுடைய மேல் அதிகாரி இடைப்பட்ட நாட்களில் விலகி அவருடைய சைட்டை முழுகவனம் செலுத்த தொடங்கியமையால்.முழுக்கவே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில் பணியாற்றினேன்.

அந்நேரத்தில் தான் கோபி அவர்களிடம் முன்னமே கூறி இருந்தேன் , சிங்கப்பூரில் வேலை இருந்தால் சொல்லுங்கள் போகிறேன் என்று.அதை நீண்ட நாட்களுக்கு பிறகு என்னிடம் கூறினார் நண்பரின் நிறுவனத்தில் வேலை என்று நானும் சரி அப்பளை பண்ணுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டேன்.

ஒரே வாரத்தில் பிப்ரவரி 17 2012 ,விசா வந்துவிட்டது. மீண்டும் ப்த்துபிடித்த நிலை ஆனால் இம்முறை பரிபூரண அனுமதி பெற்று நிறைவாக வெளியேற வேண்டும் ஆனால் அதற்குள் சிங்கப்பூரில் போருக்க வேண்டுமே மார்ச் 22 அங்கே வந்துவிட வேண்டும் என்று வேற அழுத்தம் கொடுத்தனர். இங்கே வேலை முடியவே இன்னும் 3மாதங்கள் (சிவில் எஞ்சினியரிங்கில் இறுதி கட்ட வேலை தான் போட்டு தாக்கி நிம்மதியை கெடுத்து விடும்) ஆகுமே விசா வேல்யு வேறு மூன்று மாதங்கள் தான் , அய்யயோ என்று புலம்பவிட்டுவிட்டனர். அதை எல்லாம் தாண்டி மார்ச் 6 என்னுடைய  ராஜினாமாவை அனுப்பிவிட்டேன் 22ஆம் தேதி என்னை விடுவித்து விடுமாறு. இரவு அனுப்பினேன் இ-மெயிலில் காலை முதல் அழைப்பு எம்.டியிடம் இருந்து. அலுவலகத்தில் வந்து காணுமாறு கூறிவிட்டார்.

சிறிதுநேரம் என்னை சமாதானபடுத்த பார்த்தார், பின்னர் வெளிநாடு என்று நினைத்து கூட என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் ஆனால் ஒரு வேண்டுகோளுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துவிட்டு , ஏப்ரல் 5 வரை இருக்குமாறு கேட்டுகொண்டார். நானும் அதை ஏற்று கொண்டேன் நிறைவுடன். ஆனால் சிங்கப்பூரில் என்ன சொல்லி சமாளிப்பது என்று வேறு பயம் தொற்றி கொண்டது. கோபி அவர்களிடமே சொல்லி அதையும் அவர் நண்பரிடம் சம்மதம் வாங்கிவிட்டேன். 

இந்த நிறுவனத்தையும் அந்த நிறுவனத்தையும் பார்த்தேனே ஒழிய , என் வீட்டை நினைக்க மறந்துவிட்டேன். என் மேல் எண்ணிலடங்கா கோபத்தில் இருந்தனர். எங்கயோ போகபோற வீட்டுல வந்து ஒரு மாதம் இருக்க வேண்டாமா என்று தொடங்கி 20 நாள் இருக்க வேணாம் என்றும் 10நாள் இருக்க வேணாமா என்றும் இறுதியில் 3நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். ஆம் ஏப்ரல் 5ல் சந்தோசமாக நிறைவாக  நிறுவனத்தில் இருந்து  நிறைய வாழ்த்துக்களுடன் அனுப்பிவைக்கப்பட்டேன்.   

வெறும் மூன்று நாட்கள் மட்டும் இருந்தவிட்டு ஏப்ரல் 9, 2012. சிங்கபூர் வந்தடைந்தேன். நேற்றோடு இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை என்னை இவ்வாறு எழுத தூண்டிவிட்டது. இங்கு வந்தது முதல் நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக மிக அதிகம் இங்கே நான் கண்ட , கண்டுகொண்டு இருக்கின்ற , காண போகின்ற ஒவ்வொருத்தரும் ஓராயிரம் கதைகள் கொண்டவராக இருக்கின்றனர். அவைகளை நான் கூற தொடங்கினால் எங்கெங்கோ போக வேண்டி இருக்கும்.என்னை என்னுடைய விருப்பங்களை என்னுள் இருந்தவற்றை என்னுடைய ஆசைகளை என்னுடைய ஏக்கங்களை என்னுடைய ஆர்வங்களை எனக்கு நன்றாக விளங்க வைத்த பெருமை. சிங்கபூருக்கு முழுக்க முழுக்க உண்டு.

என் சிந்தனை சிறகை சிறகடிக்க வைத்த சிங்கபூருக்கு சல்யுட் _​/\_

பின்குறிப்பு : என்னடா சுயதம்பட்டம் என்று நினைக்காமல் தொடர்ந்து படித்து வருவோருக்கு நன்றி.இதை நான் என்று கூறாமல் அவன் என்று கூறி சிறுகதை போல எழுதவே நினைத்தேன் ஆனால் அது எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டு தவிர்த்தேன்.அதையும் நேற்று ஒரு நண்பரிடம் கேட்டேன் அவரும் கேள்விக்குறியாகவே பதில் சொல்ல நல்லது இப்படி எழுதியது என்று நினைத்து கொண்டேன்.

6 comments:

 1. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

  தன்னிலையிலேயே எழுதியது நல்லது... 'அவன்' என்று இருந்திருந்தால் அது ஒரு கதையாய், சற்று அந்நியமாய், தோன்றியிருக்கலாம்... மற்றபடி, இதில் உள்ள பெயர்கள் உண்மையெனின், பாராட்டுக்கள்...

  அப்புறம், எழுத்துப் பிழைகளை மற்றும் ஒற்றுப் பிழைகளை சற்று கவனித்துக் கொள்ளவும்... :-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா , அனைத்து பெயர்களும் உண்மையே. பிழைகளை களைய முயல்கிறேன்.அடிக்கடி வந்து போகவும் நட்புடன் :)

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி நண்பா உங்களின் மதிப்பான கருத்துக்கு :)

   Delete