Friday 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)

10 comments:

  1. நண்பா இது போல நமக்கு ஏகப்பட்ட பேர் இருக்காங்க ...
    வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி :)

    ReplyDelete
  2. ஒரு செல்வா வெறியனால தான் இந்த மாதிரி ஒரு பதிவ எழுத முடியும்...!! ஒரு செல்வா வெறியனா நானும் இந்தப்பதிவ ஒவ்வொரு வரியா ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்..!!

    இதே மாதிரி எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சமகால இயக்குனர் "வெற்றிமாறன்" - அவரப்பத்தியும் எழுதுவீங்கன்னு நினைக்கறேன்..!! இது ரிக்வஸ்ட் இல்ல.. அன்புக்கட்டளை.. :) :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நீங்களும் செல்வா விசிறி தானோ வெறித்தனம் நண்பா , அப்புறம் கண்டிப்பா வெற்றிமாறன் பற்றி நிச்சயம் எழுதுவேன் அவரின் இரண்டு படங்களும் என்னை மிக மிக ஈர்த்தவை :) :)

      Delete
  3. நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்...
    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G மட்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. முனுமே நான் காலேஜ் படிக்கிற காலகட்டத்துல ரீலீஸ் ஆனா படங்கள். 7G ரொம்பவே ரியல்ஸ்டிக்காக இருந்தது. கிட்ட தட்ட முன்று மணி நேரத்துக்கு மேல், ஆனாலும் கொஞ்சம் கூட போர் அடிக்கல. என் கூட வந்த கல்லூரி நண்பர்கள் எல்லோரும் கடைசி சீன்க்கு அழுதாங்க.
    புதுபேட்டை படத்துல இருந்து அவரோட படைப்புகள் எனக்கு பிடிக்காம போயிருச்சு. ஆ.ஒ என்னை பொறுத்த வரைக்கும் அபத்தத்தின் உச்சம். சோதனை முயற்சி என்றாலும் நான் ரொம்பவே எதிர்பார்த்து போயிட்டேன். "மயக்கம் என்ன" என்னோட பொறுமையை ரொம்பவே சோதிச்ச படம். அவருக்கு நல்லா வரது காதல் படங்கள். Stubborn பீமேல் கேரக்டர்ஸ் படைக்கிறதுல அவர் ஒரு எக்ஸ்பெர்ட். காலேஜ் கடைசி பென்ச் பையன், மிடில் கிளாஸ் வாழ்கை பத்தி எல்லாம் நல்லா எடுக்கிற மனுஷன்னால வேற எந்த சோதனை முயற்சியிலும் வெற்றி பெற முடியவில்லை. புதுப்பேட்டை, ஆ.ஒ , மயக்கம் என்ன போன்ற படங்களின் வணிக ரீதியான் தோல்விகள் அதற்க்கு சாட்சி.
    இரண்டாம் உலகம் படமும் சோதனை முயற்சியே. பார்க்கலாம் அது பெருபான்மை மக்களை கவருகிறதா என்று. :):)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ, வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படங்கள் பலரை கவர்ந்தது நாட்கள் கடந்தே என்பது உண்மை தான். இதில் வெற்றி தோல்வி என்று கணிப்பதை விட அவர் எடுக்கும் முயற்சிகள் , நம் திரையுலகை பலதளங்களில் செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பு நன்றாகவே வெளிப்படும். வரபோகின்ற இரண்டாம் உலகம் நிச்சயம் பெரும்பாலோரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன் பார்ப்போம் :) நன்றி

      Delete
    2. ஆயிரத்தில் ஒருவன் oru nalla padaipu.. avar 2 varusam ulaichu, research panni ancient tamil language kondu vanthu irupar.. atha poi அபத்தத்தின் உச்சம் solringale... kastam.. oru padatha pathi vimarsanam pannum pothu yosichu pannunga..

      Delete
    3. நன்றி நண்பா வருகைக்கு , ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய விவாதம் என்றைக்கும் சிறப்பு வாய்ந்தது. :) :)

      Delete
  4. சுப்பர் பாஸ்.... கலக்குறீங்க... நான் ஒருவன் தான் செல்வாவின் பித்தன் என்ற நினைப்பில் இருந்தேன்... :) :) :) இத்தனை நபர்கள் இருப்பது அளவில்லா சந்தோஷத்தை தருகிறது...

    நான் 7G படம் பார்க்கையில் அதை படம் என்பதை மறந்து ஓவென தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன்... இறுதி காட்சியை பார்க்கவேயில்லை... அப்புறம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பி பார்த்தால், ஊறே நம்மளை பார்க்குது... செல்வாவின் தாக்கம் அப்படி... :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பா செல்வாவிற்கு நம்மை போல பலர் உள்ளனர் , இந்த கால இளையர்களின் அதிகம் செல்வராகவனின் ரசிகர்கள் தான். வருகைக்கு நன்றி நண்பா :)

      Delete