Friday, 14 February 2014

நாவல் சிறுகதையானது பின் நாவலாகும் - சிறுகதை

பனிபொழியும்  அதிகாலை நேரம்
உன் முகம் பார்க்க சூரியனும்
எட்டி எட்டிப் பார்க்கும்
உன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்...

நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்த்து சூரியனும்
தலை சுற்றி தான்
மேகத்தினுள் புதைந்து  போகும்...

சிரித்து கொண்டே கார்த்திக்கை பார்த்து போ படிக்க மாட்டேன் என்று சிணுங்குகிறாள் சந்தியா. ஹே என்ன ரெண்டு வரி படிச்சுட்டு அதுக்குள்ள வெட்கபடுற முழுசா படிடா என் செல்லம்ல என்று அவளின் கன்னத்தை தட்டுகிறான் அவளும் படிக்க தொடங்குகிறாள் மனதுக்குள்ளேயே.

நீ போடும் கோலம் கூட
கலைந்து கலைந்து நீண்டு கொண்டே
போகும் இன்னும் கொஞ்ச நேரம்
நீ கோலமிட  மாட்டாயா  என்று ....

 (அவள் படித்து உதிர்க்கும் உதடுகளின் சிரிப்பின் வெடிப்பை  கார்த்திக் அளக்கின்றான்  )

நீ போட்ட கோலம் கூட
உனக்கு நன்றி சொல்லி
சிரிக்கும் முடிவில்
நீ வைக்கும் பூவில் ...

உன் குளியல் அறை
கண்ணாடி உன்னை
பார்த்து பார்த்து
விரிசல் விடுவது
உனக்கு புரியவில்லை
போல நீயும்...
அதை மாற்றி கொண்டிருப்பதை
விடுத்து அதை தூக்கி விடு ....!

இந்த வரியை படித்து முடித்தவுடன் அவள் நாணம் கொள்ள முடியாமல் ச்சீ போடா என்னால படிக்க முடியலை என்று சிரித்து கொண்டே அவனை அடிக்கிறாள், அவனும் அவளின் அன்பை ஏற்று கொண்டே அவளை மேல் படிக்க சொல்லுகிறான் , வெளியில் நடித்தாலும் அவளுக்கும் அடுத்து என்ன எழுதி உள்ளான் என்று படிக்க ஆவல் தான் அதனால் தொடர்கிறாள்.

உன் அறையில்
உள்ள கண்ணாடியோ
நீ உடை மாற்றுவதை
பார்த்து பார்த்து விரிசல் விடுகிறது ...
உன் வீட்டில் இருக்கும்
கண்ணாடிகள் அனைத்தும்
பிறவி பலன் அடைகின்றது ....

( படித்து கொண்டே சிரித்து கொண்டும்  நாக்கை கடித்து கொண்டே கார்த்தியை பார்வையாலே விழுங்கிவிட்டால் சந்தியா.)

நீ சாலையில் நடந்து
செல்லும் போது
உன்னை ரசிக்க
ஒரு கூட்டம் என்றல்...
உன் நிழலை ரசிக்கவும்
ஒரு கூட்டம்
பின் தொடர்கின்றது ....

உன்னை தொட்டு செல்லும்
தென்றல் கூட மற்றவரை
தீண்டும் போது
அளவில்லா சூடுடன்
இருகின்றது ...

இவையனைத்தும் கடந்து
நீ பேருந்தில் ஏறினால்
அதுவரை மாநகர பேருந்து
கூட அழகு பேருந்தாகிறது....

நீ உன் கல்லூரியில்
இறங்கி செல்லும் போது
உன்னை பின்தொடரும்
கூட்டத்தில் ஒரு சலசலப்பு
நீ யாரை பார்த்தாய் என்று ...?

நீ உடை சரி செய்யும்
ஒவ்வருமுறையும்
மற்றவர்களும் அதை
மறந்து உன்னை போல்
செய்து பார்க்கிறார்களே ...அய்யகோ ?

இப்படி உன்னால்
பலர் பித்து பிடித்து அலைய
நீயோ ....!
எந்தஒரு
வியப்பும் இல்லாமல்
வருகிறாய் போகிறாயே...!
என் தேவதையே ....

படித்து முடித்தவுடன் என்னவென்று நினைப்பதற்குள் கார்த்திக்கை இறுக்கி அனைத்து கொண்டால் சந்தியா. அவனும் கொஞ்சம் திமிறி தான் அவளை அனைத்து கொண்டு இது தான் உனக்கு நான் தந்த பிறந்தநாள் பரிசு என்று கூறினான். எனக்கு நீ போதும்டா நீ மட்டும் போதும் என் லைப் நல்லா இருக்கும் என்று கூறும் போதே ஆனந்த கண்ணீரோடு அதை துடைக்க அவன் மார்பில் புதைந்தாள் சந்தியா.

கார்த்திக்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை சகஜநிலைக்கு கொண்டு வந்தான். அவளும் அவனிடம் சரி நான் கிளம்புறேன் வீட்டுக்கு, நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே கிளம்ப ஆயத்தமாகிறாள். கார்த்திக்கும் சரி வா நானே ட்ராப் பண்றேன் வீட்ல மாமாவையும் அத்தையையும் பார்த்துட்டு வந்தது போல இருக்கும் என்று கூற அவளும் அவனை சிரித்து கொண்டே வா போலாம் என்று அவன் வண்டியில் ஏறியதும்  இவளும் ஏறுகிறாள்.

                                             ****************************

கார்த்திக் தன்னுடைய காதலை எவ்வாறு நந்தினியிடம்  தெரிவிப்பது என்று கடந்த ஆறு மாதகாலமாக தடுமாறி கொண்டே இருக்கின்றான்.அவளோ இவனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை அது மட்டும் இல்லாமல் 11ஆம் வகுப்பு படிக்கையில் ஒரு பெண் காதலிக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை பாவம் ஆண்கள் தான் இப்பொழுதெல்லாம் 8ஆம் வகுப்பிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் காதலுக்கு கண் இல்லை என்பது போல வயசும் இல்லை தானே என்று பலதரப்பட்ட இரண்டாம்  தர காதல் தமிழ் சினிமாக்களை கண்டு இவனே இவனுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்தே தான் காதலிக்க தொடங்கினான் ஆறு மதங்களுக்கு முன்னே. கார்த்திக்கு இன்றும் ஞாபகம் உள்ளது அவளை கண்ட முதல் நாள்  ஜூலை 5 2004 அவனால் யுகம் தாண்டினாலும் அதை மறக்க முடியாது. அன்று இவன் மனதில் ஊற்று எடுத்த வேகம் நாள் ஆக ஆக வீரியம் கொண்டு இவனை காதலில் மூழ்கவைத்தது.

ஒரு தலை காதல் ஆண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் அனுபவிக்க வேண்டியது. காதல் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அன்பின் ப்ரியம் எல்லாமும் மொத்தமாக நம்மை ஆட்கொள்ளும் காலம் அது. இன்பம் , துன்பம் , துக்கம் , வேதனை , பசி , தூக்கம் என்று எதுவும் தெரியாமல் எந்தஒரு நிகழ்வையும் நம் காதலியை இணைத்தே பொருள் கொள்ள தூண்டும் காலம் அது . கார்த்திக்கும் எப்பொழுதும்  நந்தினி நினைவில் அவளுக்காக ஏங்கியும் அவளுக்காக காத்திருந்தும் அவளுக்காகவே பிறந்ததும் போலவே உணர்ந்தான். இரண்டு மணிநேரம்  நந்தினிக்காக காத்திருப்பான் அவள் டியூஷன் முடித்து வருவாள் சைக்கிளில் ஒரு நொடியில் இவனை கடந்து போய்விடுவாள். இவனோ அந்த ஒரு நொடி ஏதோ ஒரு யுக  வாழ்க்கை வாழ்ந்தது போல பூரிப்பு அடைவான்.

 நந்தினி சைக்கிளில் முன்னே சென்று கொண்டு இருப்பாள் இவனோ அவள் பின்னே அவளை தொடர்ந்து கொண்டே போவான் ஒரு சில நாட்களில் அது இவனுக்கு சங்கோஜமாக இருக்க சிறிது நேரம் பின் தொடர்ந்து விட்டு சாடார் என்று வேகாமாக அவளை முந்தி செல்லும் போது திரும்பி நந்தினி கண்களை பார்ப்பான் அவளும் பார்ப்பாள் இவனிடம் காதல் கட்டுகடங்காமல் இருந்தது அவளிடம் இவனை பற்றிய எண்ணம் கீழ்தரமாகிக் கொண்டே போனது.

இப்படி தனியாக காதலில் வாழ்ந்து கொண்டு தன் 12ஆம் வகுப்பின் படிப்பை தாரைவார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவளோ இவனை பற்றி அவள் வீட்டில் சொல்லிவிட. அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கு படையெடுத்தார்கள். வழக்கம் போல அன்றும் அவளுக்காக  வகுப்பு வெளியே அவளை தேடிக்கொண்டு இருந்தான் அவளோ தன் அம்மாவுடன் பள்ளிக்கு வெளியில் இருந்து  உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியவுடன்  பயத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இதுவரை அவளுடன் ஒரு வார்த்தை பேசியது இல்லை அவளை பற்றி எங்கும் தவறாக பேசியது இல்லை அவளுக்காக காத்துகொண்டு மட்டுமே இருப்பான்  ஒரு நொடி பார்வைக்காக , சற்று அவளை மிதிவண்டியில் பின் தொடர்வான் அதுவும் அவள் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று அதை விட்டு அவளை முந்திசெல்லுவதை வைத்துகொண்டான்.

ஆனால் அவளோ இவனை பற்றி என்ன சொன்னாலோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வந்தது அழைப்பு கார்த்திக்கு, சென்றவன் அவளின் அம்மா காட்டிய ஆக்ரோஷத்தில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் " டேய் உனக்குலாம் வெட்கமாவே இல்லையா ஒரு படிக்கிற பொண்ண இப்படியா டார்ச்சர் பண்ணுவ , உன் தங்கச்சிய பாலோ பண்ண வேண்டியது தானே இத்யாதி இத்யாதி " என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தவன் பள்ளியில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருந்தது அதனால் அவனின் வார்த்தைக்கும் செவி கொடுக்கப்பட்டது.

"'சார் என் ஊருக்கு போற வழி அது தான் இவுங்க என்ன தப்பா நினைச்சிட்டு பேசுறாங்க "

"பொய் சொல்றான் சார் இவன் தினமும் என் பொண்ணு பின்னாடி தான் போவானாம், செருப்பாலயே அடிப்பேன் டா "

"சார் ப்ளீஸ் நம்புங்க என் மேல எந்த தப்பும் இல்லை "

இதை அனைத்தையும் அவளும் கண்டு கொண்டு தான் இருக்கின்றாள்.ஒரு முடிவாக இனி இது போல் நடக்காது என்று தலைமை ஆசிரியர் அவர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களும் அதை ஏற்று அவனை முறைத்துவிட்டு எச்சரித்து   சென்று விட்டனர். அவர்கள் சென்றபின் கார்த்திக்கின் அப்பாவை அழைத்துவருமாறு கூறுகின்றனர் அவனோ இடி விழுந்தவன் போல அப்படியே உறைந்து போனான். பின் சுதாரித்து கொண்டு கெஞ்சி கூத்தாடி எங்க அப்பா இங்கே வந்தால் எனக்கு சாவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே கதறினான். அதை கண்ட அவர்களும் ஒரு வாய்ப்பு தந்தனர் அவனுக்கு.

அடுத்தநாள் பள்ளிக்கு வரும் பொழுது புது நோட் வாங்கினான் அதில் அவன் முதல் பக்கத்தில்  எழுதியது,

"நீ இல்லாமல்
என்னால் நினைத்து கூட
பார்க்க முடியவில்லை
அந்த அழகு கற்பனை
தேவதை எப்படி தான்
இருப்பாள் என்று ...?

விளைவுகள் என்ன என்ன
வரும் உன் அழகை ரசித்தால்
என்று தெரிந்து தான் என்
உறக்கத்தை தொலைக்கின்றேன் ...!

அழகை ரசிக்க ஆரம்பித்தால்
கவிதை திருட தோன்றும்
கவிதை திருட தோன்றினால்
உன்னை  ஒப்பிட தோன்றும்
உன்னை ஒப்பிட்டு பார்த்தால்
கவிதையை திருத்த தோன்றும்
கவிதையை திருத்தி பார்த்தால்
உன்னால் ஒரு கவிதை தோன்றும்
என்று உன்னாலே  நானும் எழுதுகிறேன்"


                                   "நித்தமும் நிதர்சனமும் நந்தினியே "

                                            *****************************

இன்னும் சரியாக இரண்டு  மாதமே  உள்ளது கார்த்திக்-சந்தியா திருமணத்திற்கு அதுவும் 2014 காதலர் தினம் அன்று. இந்நாளை இவர்களே மிகவும் விருப்பபட்டு தேர்வு செய்தனர் நம்முடைய திருமணம் நடைபெறும் நாளில்  உலகில் அன்பின் பரவசம்  வெள்ளமாக  பெருக்கெடுத்து ஓட வேண்டும்  என்று நினைத்தே முகூர்த்த நாளும் வந்து அமைய இதையே பிடித்து விட்டனர். இருவீட்டாரின் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற போகின்றது.

சந்தியா எப்பொழுதும் கார்த்திக்கை விட்டு கொடுக்கமாட்டாள் அவன் தான் அவளுக்கு உலகம். இப்படி ஒரு காதலன் கிடைக்க மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவளுக்கே அவள் மேல் ஒரு கர்வம் இருந்தது. சந்தியா கார்த்திக்கை அழைக்க வேண்டும் என்று நினைத்தால், கார்த்திக் அவளை பார்க்க தான் வந்து கொண்டே இருப்பான்  என்று இருவருக்கான எண்ணங்கள் ஒற்று போனதாலே, நல்ல காதல் திருமணம் ஆக போகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் தான் அவளை துரத்தி துரத்தி காதலித்தான் அதுவும் ஆரம்ப காலத்தில் அவனை சந்தியா  மிகவும் கஷ்டபடுத்தி இருக்கிறாள். சந்தியாவின் கல்லூரி இருப்பது தஞ்சாவூர்-புதுகோட்டை சாலையில் ,கார்த்திக்கின் கல்லூரி இருப்பதோ திருச்சி -திண்டுக்கல் சாலையில் .ஆனால் அவளின் மேல் உள்ள காதலினால் இவளை காண இரண்டு மாதம் ஒரு முறை சென்றுவிடுவான் ஆனால் அவளை பார்போதோ இவனை கடந்து போகும் ஒரு நொடி. இப்படியாக அவளை நினைத்து நினைத்து அவளுக்காகவே வாழ்ந்து வந்தான்.

இதில் இவனின் அனைத்து நண்பர்களும் இவனையும் இவனின் காதலையும் மிகவும் மதித்து வந்தார்கள். அதிலும் சிலர் இவனை அவனின் காதல் கதை கேட்டு இவனையும் பெருமிதம் கொள்ளவைப்பர். 6வருட ஒரு தலை காதல் இவன் கல்லூரி முடித்தும், அவள் கல்லூரி முடித்தும். ஒரு தலையாக இருந்தவனுக்கு காலம் கனிந்து வந்ததது சென்னையில் .

 இவன் சென்னையில் வேலை பார்த்துகொண்டு இருக்கும் பொழுது அவள் கல்லூரி முடித்துவிட்டு அப்பொழுது தான் சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். அவள் நேசிக்கவில்லை என்றாலும் அவளின் அனைத்து விஷயங்களையும் இவன் யார் மூலமாக தெரிந்து வைத்து கொண்டே இருந்தான். சென்னையில் சி.டி.எஸ் நேர்முகத்தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு ஆச்சிரியம் கார்த்திக் நின்று கொண்டு இருந்தது. இம்முறை ஒரு நொடி பார்வை நீண்டுகொண்டே போகின்றது அதுவும் சந்தியா கார்த்திக்கை நோக்கி நடந்து வருகிறாள். இவன் நெஞ்சம் படபடப்பில் துடிக்கின்றது கொளுத்தும் வெயிலில் இவனுக்கு நடுங்குகிறது. அவள் நடந்து வர வர இவன் கண்ணை மூடி ஒருமுறை யோசித்தான் இனியும் உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து இருக்க முடியாது,இப்பொழுதே முடிவு தெரிந்து தான் போகணும் என்று யோசித்து முடிப்பதற்குள்ளே கேட்டது அவனுக்கு ,

"கார்த்திக்" ...

கண்களை திறகின்றான் கலங்கி கண்ணீர்  வெளியில் வர ஆயத்தமாகின்றது.

"சென்னைக்கு நேற்று  தான் வந்தேன் வீட்டுக்கு போகணும் பயமா இருக்கு என் கூட துணைக்கு வரியா "

"எப்படி இருக்க சந்தியா"

"நீ எப்படி இருக்க ? எங்க வொர்க் பண்ற ? "

ஆட்டோவை மறித்து கொண்டு அதில் ஏறுகிறார்கள்

" வா போகலாம் வீடு எங்க வேளச்சேரி தான"

" உனக்கு எப்படி தெரியும் "

"அதெல்லாம் தெரியும் நீ வா , சென்னைல தான் வொர்க் எல் & டி "

"நல்லா இருக்கேன் நீ எப்படி இன்னும் அப்படியே இருக்க"

" எப்படி ??? "

" என்னைய பத்தி தெரிஞ்சிட்டே எங்க போறேன் வரேன் என்ன பண்றேன்னு " (சிரித்துவிட்டாள்)

"என்னபன்னாலும் நீ தான் ஒன்னு சொல்ல மாட்டேங்குற"

"கார்த்திக் நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்"

" ...."

"எனக்கு வேலை கிடைச்சவுடன் சொல்லபோறேன் வீட்ல கூட தெரியும் "

"......"

"வா வீட்டுக்குள்ள வா அம்மா இருக்காங்க பார்த்துட்டு போ"

" இல்லை நீ பார்த்துக்க நான் வரேன் "

"கார்த்திக் ஐ லவ் யு "

பற்களை கடித்துக்கொண்டு கண்கள் துடிக்கின்றது அவனிற்கு திரும்பி அவளிடம்

"என்ன சந்தியா ?"

"ஐ லவ் யு டூ மச் " என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டால்.

அப்பொழுது அவனுக்கு தோன்றியதை அவன் டைரியில் குறிப்பிட்டான் பின் வரும் எழுத்துகளால்,

"காதலை அவளும் உணர்ந்தால் என்னை
தன் உயிர் என்று நினைக்கிறாள் ....

அவளின்
அன்பை நேசித்தேன்...
சுவாசித்தேன்...
உணர்ந்தேன் ...
அனுபவித்தேன்...

நொடி பொழுது பல மணி பொழுதானது
அவள் இல்லாதபோது ....
பல மணி பொழுது நொடி பொழுதானது
அவளுடன் இருக்கும் பொழுது...

என் கவிதைகளை அவள் ரசிக்க
அவளை மிக மிக ரசித்தது என் கவிதைகள் ... "

                                                 ************************************
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கார்த்திக் நந்தினியை விடுவதாக இல்லை , தொடர்ந்து நேசித்தான் முன்னை விட மிகுதியாக.  அவளை பின் தொடர்ந்தான் அவளுக்காக காத்துகொண்டு இருந்தான் ஆனால் இம்முறை நந்தினியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மாறாக அவள் தோழிகள் அவளை கிண்டல் செய்ய தொடங்கினர். கார்த்திக் அவளுக்காக காத்துகொண்டு இருக்கும் போது  அந்த பெண்கள் கூட்டம் கடந்து செல்கையில் அத்தனை பேரும் நந்தினியை பார்த்து ஏதோ சொல்லி சிரிக்க, அவள் மட்டும் மௌனமாய் கடந்து செல்வாள். கார்த்திக் இதையும் ஒரு முன்னேற்றமாக எடுத்து கொண்டே சென்றான்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வேறு நெருங்கிக்கொண்டே இருந்தது , "காதல்" திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்துவிட்டு மிகவும் உருகி போனான் வழக்கமான நம் தமிழ் கலாசார மாணவர்கள் போல அவனுள் இன்னும் காதல் ஊறிப்போனது. அவளோ இவனை ஒரு தூசியாக கூட நினைக்காமல் கடந்து சென்று கொண்டே இருந்தால். பள்ளியில் உள்ள பலருக்கு இந்த காதல் கதை தெரிய ஆரம்பித்தது. ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில்  சொல்லி இவனை பள்ளியில் எச்சரித்தும் மீண்டும் அவளை விடாமல் நேசிக்கும் அவன் யார் என்று பலர் தேடி வந்து பார்ப்பார்கள்  கார்த்திக்கை ஆனால் அவனோ  அவளின் நினைப்பில் தன்னை போல ஒருவன் பெண்ணை காதலிக்க முடியாது காதல் என்பது என்னிடம் வந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெருமிதத்தில் இருப்பான் .

ஒருமுறை நந்தினி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தான் வரைந்த படத்தை பின் கசக்கி தூக்கி எறிந்துவிட்டால் (படுகேவலமாக இருந்தது என்று தோழிகள்  கூறி இருப்பார்கள் போல) அதை கார்த்திக் எடுத்து தன்னுடைய இயற்பியல் ரெகார்ட் நோட்டிற்கு அட்டையாக போட்டுவிட்டான். அதை அவள் பார்க்க வேண்டும் என்றே தினமும் அதை எல்லோருக்கும் தெரிவது போல எப்பொழுதும் எங்கும் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவள் டியூஷன் 7மணிக்கு முடியும் ஆனால் பள்ளி முடிவதோ மாலை நான்கு மணி வீட்டில் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க இன்னுமொரு டியூஷன் சேர்ந்தான் ,ஏற்கனவே கணக்கு , வேதியல் என்று இரண்டுக்கும் காலை நேரம் 6 டு 8 , இப்பொழுது இதற்க்கு மாலை 6 டு 7.எத்தனை டியூஷன் சென்றாலும் அங்கேயும் நந்தினி நந்தினி நந்தினி தான்.

தேர்வு நாட்கள் வந்தது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் 11ஆம் வகுப்பு  மதியம் தான் தொடங்கும். அந்த நாட்களில் கூட தேர்வு முடித்துவிட்டு  அவள் வரும் வரை காத்திருந்து பார்த்த பின்பே செல்லுவான் ஆனால் இம்முறை டைரி மில்க் சாக்லேட் வைத்துகொண்டு காதலை தெரிவிக்க போகின்றேன் என்றே எல்லா தேர்வும் கடந்தது  சாக்லேட் தினமும் கரைந்து போனது. இறுதி தேர்வு முடிந்து  அவளிடம் சென்றான் இம்முறை அவளும் இவனுக்காக காத்திருப்பது போல அவ்விடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தாள்.

பதற்றத்துடன் சென்றவன் இன்று சாக்லேட் கையில் இல்லை வாங்க மறந்ததை நினைத்து கையை பிசைய அவள் எதேச்சையாக பார்த்துவிட்டாள்.

அருகில் சென்று நாந்தினி என்று அழைப்பது அவனுக்குள்ளேயே கேட்டது அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை மீண்டும் ஒருமுறை நந்தினி என்று அழைக்க,

நந்தினி தன் செருப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.

இவனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது அன்று அப்பொழுது அவன் நினைத்ததை பின் ஒருநாளில் டைரியில் எழுதி வைத்துகொண்டான்,
       
"என் துயரம் நீ அறிய
என் உயிர் பிரிய வேண்டுமோ ??? "

பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு  முடிவுகள் வந்தது , அடித்து பிடித்து கார்த்திக் தேர்ச்சி பெற்றுவிட்டான் ஆனால் தான் விரும்பும் படிப்பை படிக்க முடியவில்லை வீட்டில் இன்ஜினியரிங்  தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறிவிட யோசித்தான், "தன்னுடைய காதலுக்கு நந்தினியின் சம்மதம் மட்டுமே தேவை அவள் இறுதிவரை காதலிக்கவில்லை என்றாலும் கூட நன்கு பொறியியல் துறையில் படித்து சாதித்து பின் நம் வீட்டில் சொன்னால் நிச்சயம் ஒற்றுகொள்வார்கள் ஏன் என்றால் அவளும் எங்கள் ஜாதி தான் அதனால் எதிர்ப்பிற்கு காரணமே இருக்காது ஆக நான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் ஒரு எஞ்சினியராக பொண்ணு கேட்டு போகலாம் " என்று நினைத்து படிக்க ஒற்றுகொண்டான்.

கார்த்திக் எடுத்த மதிப்பெண்ணிற்கு திருச்சியில் தான் ஜே.ஜே  கல்லூரியில் இடம் கிடைத்தது.  முதல் முறை தன் சொந்தஊர் திருவையாறை விட்டு வெளியூரில் தங்கி படிக்க போகின்றான். தஞ்சாவூர் கல்லூரியில் தான் படிக்க ஆசை அப்பொழுது தான் தினமும் நந்தினியை பார்க்கலாம் அவளும் கண்டிப்பாக அக்கல்லூரியில் தான் சேருவாள் என்று நினைத்தவனுக்கு இது பேரதிர்ச்சி , இருந்தால் என்ன தான் எங்கே இருந்தாலும் என் காதல் மாறபோவதில்லை என்று முதலாம்  ஆண்டு கல்லூரி விடுதியில் அதுவரை வீட்டில் அடைபட்டு கட்டுபாடோடு இருந்தவனுக்கு அந்த சுதந்திரம் பரவசம் கொள்ளவைத்தது.

கல்லூரி வாழ்க்கை நான்கு வருடங்கள் கார்த்திக்கை புரட்டிபோட்டது அவன் வாழ்க்கையை , அவ்வபோது ஊருக்கு செல்லும் போது நந்தினியை எந்த நேரத்தில் காண முடியும் என்று தெளிவாக முடிவுசெய்துவிட்டே செல்வான் அதுவும் ஒருநொடி பார்வைக்காக. நந்தினி பள்ளி முடித்து எந்த கல்லூரியில் சேருவாள் என்று நினைத்தானோ அதே கல்லூரியில் தான் , தினமும் வீட்டில் இருந்தே சென்று வந்துவிடலாம். அதில் இவனுக்கு அவ்வளவு சந்தோசம் ஏன்??? கல்லூரி விடுதி எப்படி இருக்கும் என்று தான் இவனுக்கு தெரிந்துவிட்டதே. பார்த்தீகளா இங்கே பிறக்கின்றது இவனிடம் உள்ள ஆணாதிக்க திமிர். இப்பொழுது ஊருக்கு வரும் பொழுது அவளை காணும் நேரம் ஒரு நொடியில் இருந்து சில மணித்துளிகள் ஆனது அவள் கல்லூரி பேருந்து வரும் வரை நந்தினியும் இதை கவனிக்க தொடங்கினால். மாதம் மூன்று நான்கு முறை அதில் அவன் வீடிற்கு கூட செல்ல மாட்டான் அவளை காண்பதற்காக மட்டுமே 65மைல்கள் வந்து செல்லுவான்.கல்லூரி நண்பர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் என்று அனைவரும் இவனின் 6வருட  காதல் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிகொண்டனர். பல இரவுகள் நினைத்தவுடன் கண்ணீர் வருவதை உணர்ந்தான். காதல் இவன் நெஞ்சில் தெய்வமாக ஆனது.

அப்பொழுது நந்தினி முகநூளில் நிச்சயம் இருப்பாள் என்று தேடி பிடித்து நட்பு விண்ணப்பம் கொடுத்தான். அவன் தேடியது எல்லாம் விரிவாக இங்கே கூற முடியவில்லை ஏற்கனவே நாவலாக வேண்டியது சிறுகதை ஆகிக்கொண்டு இருக்கின்றது இதில் அதை விரிவாக எழுத முடியவில்லை. நந்தினி என்று தேடினால் குறைந்தது ஒரு 30 அல்ல நாற்பது நந்தினிகள் வரும் அதில் இவனுடைய நந்தினியை பிடித்தான். அன்றைய தினம் முதல் இவனின் பொழுதுபோக்கு பாதி நேரம் அவளின் பக்கத்தையே பார்த்துகொண்டு இருப்பது எப்பொழுது தன்னை நட்பு வட்டத்தில் சேர்ப்பாள் என்றே நினைத்து உருகினான்.பின் ஒரு முடிவாக அவளுக்கு தன்னுடைய மனதில் உள்ளதை எழுதி(டைப்படித்து) உள்டப்பியில் அனுப்ப தொடங்கினான்.

Conversation started December 15, 2007
karthik
12/15, 1:31am
karthik
please read it....
ஹாய் நந்தினி ,
            ரொம்ப  கஷ்ட  பட்டு  உன்னை இதுல கண்டுபிடிச்சேன். நட்பு விண்ணப்பம் தந்து இருக்கேன் ஆனா நீ இன்னு அக்செப்ட் பண்ணலை.நீ என்ன எவ்ளோ வெறுத்தாலும் எனக்குள்ள இந்த 5 வருஷமா எந்த மாற்றமும் இல்லை உன்னை இன்னும் அதிகமா தான்  நினைக்க  தோணுது. உன்ன நினைச்சி எத்தனை நாள் நான் கலங்கி இருப்பேன்னு எனக்கு தான் தெரியும். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை சத்தியமா சொல்லுறேன் உன்னை தவிர எந்த பொண்னையும் நினைச்சி கூட பார்க்க தோணலை அப்போ 17 வயசுல என்ன நினைச்சி உன்ன காதலிக்க தொடங்கினேனோ இப்போ 21 வயசுல எந்த வித்தியாசமும் தெரியலை நான் உன் மேல வச்சிருக்குற அன்பு மட்டும் என்னைக்கு மாற போறது இல்லை நந்தினி. உனக்காக தான் நான் இந்த படிப்பே படிக்கிறேன் எந்த ஒரு சின்ன விஷயம் கூட தடங்களா இருக்க கூடாதுன்னு .இதை படிச்சி திரும்ப என்ன வெறுத்தாலும் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு எனக்கு எப்படி புரியவைப்பதுனு தெரியலை. இதை சொல்லுறப்போ கூட கலங்குறேன்.என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நந்தினி. நமக்கான லைப் காத்திருக்கிறது .

"உன்னை நினைத்து நினைத்து
என் நினைவற்று போகும் தருணம்
மிக அருகினில் தான் பெண்ணே ....! "

என்றும் உன் நினைவுடன்
கார்த்திக்

December 21, 2007
karthik
12/21, 3:05am
karthik
நந்தினி ப்ளீஸ் என்னை உன் நட்பு வட்டத்துல சேர்த்துக்கோ அந்த சந்தோசமாவுது கொடு. எதாச்சும்  எண்ட பேச நினைச்சா ப்ளீஸ் இது தான் என் செல் நம்பர் காண்டக்ட் பண்ணு 9944229004

March 31, 2008
karthik
3/31, 11:27pm
karthik
நந்தினி  how are u...

April 7, 2008
karthik
4/7, 11:53pm
karthik
hai நந்தினி  how are u...my mail password karthiknandhini   and my cell code nandhini and official mail password nandhini so anytime i am remember u... i cant forget u...

April 13, 2008
karthik
4/13, 11:44pm
karthik
காதலின் வலிகள் வாழ்க்கையில்  சுமைதான் மனதிற்கு அந்த வலி கூட சுகம்தான்.

May 10, 2008
karthik
5/10, 3:27am
karthik
i love u nandhini
9944229004 this is my anything tell to me pls call this number am waiting till my life endddddddddddddd

May 25, 2008
karthik
5/25, 1:35am
karthik
hai nandhini thanks ur's update frist time in my page thats your's chairman victory comment.... today my more and most important day..... pls if u call to my number 9944229004 or karthiknandhi@live.com or karthiknandhi@gmail.com all mail passwords karthiknandhini

இப்படி உருகி உருகி நேசித்தவனின் கல்லூரி  வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அவனுடைய முழு தொகுப்பையும் இங்கே தெரிவிக்க முடியவில்லை முன்னே கூறியது போல சிறுகதை என்பதால் பின் வரும் நாவலில் அனைத்தும் வரும் இதோ அவனின் நான்கு வருட கல்லூரி எவ்வாறு கடந்தது என்பதற்கு அவனின் செமஸ்டர் முடிவுகள்.

முதல் செம் - 5 அரியர்ஸ் எழுதிய 6 தேர்வுகளில்
இரண்டாம் செம் -7 அரியர்ஸ் எழுதிய 7+5=13 தேர்வுகளில்
மூன்றாம் செம் -11 அரியர்ஸ் எழுதிய 6+7=13 தேர்வுகளில்
நான்காம் செம் -14 அரியர்ஸ் எழுதிய 7+11=18 தேர்வுகளில்
ஐந்தாம் செம் - 18 அரியர்ஸ் எழுதிய 6+14=20 தேர்வுகளில்
ஆறாம் செம் -23 அரியர்ஸ் எழுதிய 7+18=25 தேர்வுகளில்
ஏழாம் செம் -15 அரியர்ஸ் எழுதிய 6+23=29 தேர்வுகளில்
எட்டாம் செம் -5 அரியர்ஸ் எழுதிய 3+15=18 தேர்வுகளில்
ஒன்பதாம் செம் -0 அரியர்ஸ் எழுதிய 5 தேர்வுகளில்

இப்படி இறுதிகட்டத்தில் தான் சுதாரித்து தன் இழக்கை அடைந்தான், அதுவும் பட்டமளிப்பு விழாவின் போது கார்த்திக்கின் துறை மேலாளர் கட்டி தழுவி பாராட்டியது என்றும் அவனால் மறக்க இயலாது. அதில் அவன் பெற்ற வெற்றி காதல் காதல் காதல் அதற்காக மட்டுமே.இதோ கல்லூரி முடித்து தற்பொழுது சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டான். இங்கேயும் அவனின் நினைப்பு நிச்சயம் நந்தினி அடுத்த வருடம் கல்லூரி முடித்து சென்னை தான் வருவாள் என்று.

கார்த்திகை தீபம் அன்று இப்படி எழுதினான் நந்தினியை நினைத்து
"அகல் விளக்கு கூட
அழகு விளக்காகும்
தேவதை நீ ஏற்றும் தீபத்தில்..."

                                              ****************************

"கார்த்திக் எங்க இருக்க ???"

"உன்கிட்ட தான் இருக்கேன் "

"டேய் விளையாடாத சீக்கிரம் வா வீட்டுக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ண போகணும் "

"ஹே திரும்பி பாரு சந்தியா"

"ஹையோடா எப்போடா வந்த"

"இப்போதான் சரி சரி வா கிளம்பலாம் அம்மு"

"கொஞ்சுறத பாரு 2மினிட்ஸ்"

கார்த்திக்கும் சந்தியாவும் கிளம்பி வண்டியில் செல்ல நினைக்கும் போது கார்த்திக் நடந்தே போகலாம் பக்கத்துல  தானே என்று இருவரும் நடந்தே செல்லுகிறார்கள் கை கோர்த்து.

"சந்தியா உனக்கு ஒரு செம்ம சஸ்பென்ஸ் இருக்கு"

 "எனக்கு பிடிக்காதது கண்டிப்பா இருக்காது"

"ஹே எப்படி சொல்லுற ?"

"உனக்கு பிடிச்சது எனக்கு தான் பிடிக்குமே"

"மொக்கை போடாத"

"ம்க்கும் ச்சீ போடா "

"நான் எழுதுறேன்னு சொன்னேன்ல ஒரு நாவல்"

"ஆமா அதுக்குள்ள முடிச்சிட்டியா ??? "

"இல்லபா அதை ஒரு சிறுகதையா சுருக்கிட்டேன் ஒரு போட்டிக்காக "

"ஓஹோ சரி அது என்ன கதை ப்ளீஸ் சொல்லுடா"

"என்னோட லைப் தான் அந்த கதை"

"ஹை அப்போ நான் இருப்பேன்ல "

" நீ இன்னும் வரலை "

"நடிக்காத போடா சரி சரி நம்ம பேர் என்ன வச்சிருக்க"

"கார்த்திக் - நந்தினி"

"நந்தினி நந்தினி  நல்லா  தான்  இருக்குடா ஏன் சந்தியா பேர் வைக்கல நீ மட்டும் உன் பேர வச்சிகிட்ட"

 என்று செல்லமாக சண்டைபிடித்து கொண்டே சாலையில் காதல் மழை பொழிந்தால் நந்தினி ச்ச சாரி சந்தியா.

Friday, 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சூப்பர் பீல் குட் மூவி

திரைப்படம் பார்க்கும் பொழுது அதனுள் எளிதாக நாம் உள்நுழைய வேண்டும் அதனோடு பயணிக்க வேண்டும் இறுதியில் அதன் முடிவு நம்மையும் ஈர்க்க வேண்டும் அதை நினைத்து பெருமிதம் கொள்ளவைக்க வேண்டும். அப்படி தான் என்னை உணரவைத்தது நேற்று நான் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம்.


90களின் தொடக்கம் நம் கிராமங்களில் விஞ்சான படைப்புகளின் வருகை ஆரம்பித்த நேரம், அப்பொழுது எல்லாம் போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார்  வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர். அப்படி அதை மற்றவர்கள் உபயோகிக்கும் போது பெருமிதத்துடன் காண்பது அவ்வீட்டில் உள்ளவரின் வழக்கமாக இருக்கும். இந்த அனுபவம் எனக்கும் கூட உண்டு அப்படி அந்த ஊருக்கு முதல் முறை ஒரு சந்தர்பத்தில் கார் அந்த பண்ணையார் வசம் சில நாட்கள் இருக்குமாறு வந்து பின் இறுதிவரை உடன் இருந்ததா என்பது தான் கதை அதை எவ்வளவு சுவாரசியமாக தர வேண்டுமோ அப்படியே தந்து உள்ளனர்.

விஜய் சேதுபதி படத்திற்கு படம் மனிதர் மேன்மை அடைந்து கொண்டே இருக்கின்றார் , வளர்ந்து வரும் ஹீரோ நிச்சயம் இது போன்ற படைப்புகளில் நடிக்க தயங்கவே செய்வர் உதாரணம் சிவகார்த்திகேயன் அவரின் படங்களில் அவரை சுற்றி தான் களம் இருப்பது போல பார்த்து கொள்கிறார் அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் வி.சே படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லோரின் நடிப்பிற்கும் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடித்து தனி ட்ரென்ட் போல உருவாக்கி கொண்டு இருக்கின்றார். உடல் மொழியில் மனிதர் படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பது இவரின் தனித்தன்மையை நன்கு புரியவைக்கின்றது பார்வையாளர்களுக்கு. படத்தில் பண்ணையாரின் மகளிடம் உதவி கேட்க சென்று அக்காட்சியில் விஜய் சேதுபதி வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது. பண்ணையாருடன் சேர்ந்து கொண்டு துளசியை (பண்ணையாரின் .மனைவி ) கலாய்க்கும் இடமும் சுவாரசியமாக இருக்கும். இவரின் காதல் காட்சிகள் திணிப்பு என்றாலும் ஓகே தான். குறையாக தெரியவில்லை.


ஜெயப்ரகாஷ் -துளசி இவர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி தான் படத்தின் மொத்த கதையும். இருவரும் மிக மிக அழகாக நடித்து உள்ளனர். ஒரு படத்தில் ஜெயப்ரகாஷ் நடித்து உள்ளார் என்று தெரிந்தாலே அந்த படத்தின் தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான் அப்படி தான் மூடர் கூடம் படம் எல்லாம் நம்பி போனேன். அவரும் ஒவ்வொரு படத்திலும் அந்த நம்பக தன்மையை என்னுள் அழுத்தமாக நிருபித்து கொண்டே இருக்கின்றார். படம் முழுக்க நடிப்பு வேட்டை நடத்தி உள்ளார். வெள்ளாந்தியாக இவர் கேட்கும் கேள்விகள் , சிரிப்பு ,பார்வை என்று பிச்சு உதறி உள்ளார் , அதுவும் இவர்களுக்கான காதல் காட்சிகளை நமக்கும் உணரவைத்து நம்மை ரசிக்க வைத்த இடத்தில் கிளாஸ் மிக அருமையாக இருக்கும். இவர்களுக்கான அன்னியோன்யம் நிச்சயம் படத்தை காணும் எல்லோருக்கும் பொறமை கொள்ள தான் செய்யும் படத்தின் வெற்றி அதில் தானே உள்ளது.

பீடையாக வரும் பாலா இப்படத்திற்கு பிறகு நிச்சயம் நகைச்சுவை பாத்திரங்களில் தனி வளம் வருவார். இயல்பான காட்சிகளில் எல்லோரையும் இவர் தான் சிரிக்க வைத்து உள்ளார்.சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் பதிந்து போனது இயக்குனரின் தேர்விற்கு கிடைத்த வெகுமதி அதை படம் பார்க்கும் பொழுது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.

இசை ஜஸ்டின்  மண் சார்ந்து மண் வாசத்தோடு இருபது வருடம் பின்னே அழைத்து சென்று விட்டது படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது.கோகுலின்  ஒளிப்பதிவு உறுத்தவில்லை ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம் சில காட்சிகள் ப்ரேமில் செட் ஆகாமல் இருப்பது என்ன யுக்தி என்று தெரியவில்லை. ஒரு வரி கதையை வைத்து அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக எடுத்தால் அதில் மிக மிக முக்கியமான பங்கு எடிட்டிங்க்கு இருக்கும் அது இந்த படத்தில் மிக அருமையாக இருக்கின்றது . ஸ்ரீகர் பிரசாத்திற்கு சொல்லியா தர வேண்டும் ???

இயக்குனர் அருண் குமார்  தன் முதல் வருகையை மிக அழுத்தமாக பதிவு செய்து அதில் நல்ல வெற்றியையும் பெற்று உள்ளார். இயக்குனராக அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி மிக சிறந்த படைப்பாக கொண்டு வந்து உள்ளார்.குறும் படத்தை  எப்படி திரைப்படமாக எடுக்கலாம் என்று பாடமாக  எடுபதற்கு படமாக எடுத்து விட்டார் போல , வாழ்த்துக்கள் அருண்  குமார்.

பண்ணையாரும் பத்மினியும் குடும்பத்தோடு நிச்சயம் எல்லோரும் காண வேண்டிய அருமையான சிறந்த திரைப்படம்.

Friday, 24 January 2014

கோலி சோடா - யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் படம்


விஜய்மில்டன் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களில் பணி புரிந்து இருந்தாலும் இயக்குனராக அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வியாபார ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது ஆனாலும் நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது இயக்கிய படமே கோலி  சோடா அதுவும் அவரின் தயாரிப்பிலேயே துணிவுடன் பசங்க படத்தில் நடித்த பசங்களை கொண்டு எடுத்து உள்ளார்.

படத்தின் முன்னோட்டங்களில் கூட படத்தை பற்றிய சின்ன டீடேயிளிங்  கூறாமல் விட்டது தானோ என்னவோ படம் பார்க்கும் போது அதுத்த காட்சி என்னவாக இருக்கும் எந்தஒரு யூகமும் இல்லாமல் காண முடிந்தது. யதார்த்தமான பாத்திர அமைப்பில் நல்ல ஒரு கமெர்சியல் படைப்பாக வந்துள்ளது.

கதை என்று கூறி உங்களையும் ஒரு யூகத்துக்குள் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. கோயம்பேடு மார்கெட்டில் அவர்களுக்கு  அடையாளம் என்று ஏதும் இல்லாத  மூட்டை தூக்கும் நான்கு இளம் பையன்கள் அவர்களுக்கான அடையாளங்களை தேடி எளிதாக பெற்று பின் எதிர்பாராமல் அதை பெரும் வலியுடன் இழந்து மீண்டும் பெறுவது தான் கதை. புரியாதவங்களுக்கு படம் பார்க்கும் போது நிச்சயம் புரிந்துவிடும்.


பசங்க படத்தில் நடித்த அந்த முக்கியமான நான்கு சிறுவர்கள் தற்பொழுது இந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வளர்ச்சியை பெற்று இருந்த காரணத்தினாலோ அவர்களையே நடிக்க வைத்துவிட்டனர். அந்த பையன்கள் மிக சிறப்பான நடிப்பை தந்து உள்ளனர் அதுவும் அவர்களுக்கென்று நிறைய மாஸ் சீன்கள் கூட இருக்கின்றது. கதைக்கு ஏற்றவாறு அவைகளும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது. அதுவும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கின்றது பசங்களிடம். உணர்வுள்ள காட்சிகளில் அவர்கள் கலங்கும் போது நிச்சயம் நாமும் கலங்கி தான் போகின்றோம்.

ஆச்சியாக பருத்திவீரன் சுஜாதா நடித்துள்ளார் மிக யதார்த்தமான அளவான நடிப்பு , தன் பெண்ணையும் உடன் வேலை  செய்யும்  அந்த நன்கு பசங்களையும் வாஞ்சையுடன் நேசிக்கும் போது நல்ல பாத்திரமாய் நெஞ்சில் பதிந்து போவது சிறப்பு.

இமான் அண்ணாச்சி பசங்கள் உடன் தங்கி வேலை செய்து கொண்டு அவர்களுக்கு அவ்வப்போது உதவி கொண்டும், முதல் பாதியில் கானா பாலா பாடிய பாடல்கள் இவர் பாடுவது போல வந்து குதுகலிக்க வைத்தது அதுவும் பாடல்கள் கானா பாலாவின் குரலில் மிக அருமையாக இருந்தது. அண்ணாச்சி அனைத்து காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்தாலும் , சில நொடியே பாடலில் வரும் ஒரு காட்சியில் அவரின் சோகத்தை காட்டி உருக்கி விட்டனர்.

நாயுடுவாக வருபவர் தான் பசங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தருபவர் , மார்கெட்டின் சங்க தலைவராக செல்வாக்குள்ள மனிதராக கச்சிதமாக கதையில் பொருந்தி போகி காட்சிகளுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து உள்ளார் அவரின் மச்சானாக வரும் மயில் கூட லோக்கல் ரவுடி எப்படி இருப்பானோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நாயுடுவின் மனைவிகளாக ஆம் அவருக்கு இரண்டு மனைவிகள் வருபவர்களும் கணவனின் கம்பீரத்தை தாங்களும் ஏற்று அவாறே நடந்து கொண்டனர், அதிலும் மீனாள் சில காட்சிகளில் தூள் சொர்னாக்காவை மிஞ்ச பார்த்துள்ளார்.

ஆச்சியின் மகளாக வருபவர் அழகு, பசங்களுக்காக உருகுவதும் அந்த வயதுக்கு ஏற்ற காதலில் விழும் போது நம்மையும் விழுங்கிவிட்டார் மென்மையாக. பசங்களின் முதல் தோழியாக வருபவர் அழகில்லை என்று படத்தில் அவளே கூறினாலும் காணும் நமக்கு நிச்சயம் அந்த வலி தெரியும் அதுவும் அதற்காக அந்த பெண் கூறும் பதில் "என்னால தப்பு நடந்து இருந்தா நான் கவலை படனும் , யார் செஞ்ச தப்போ " என்று சர்ச்சில் கூறும் பொழுது செவுட்டடியாய் இருந்தது. பசங்களுக்காக அந்த தோழி முயற்சி எடுக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவளையும் மதிக்க  தொடங்கிவிடுவோம்.

படத்திலேயே மிக சிறந்த காட்சிகள் என்றால் அவர்கள் பெற்ற அடையாளத்தை எப்படி இழக்கின்றனர் என்று இடைவேளைக்கு முன் வரும் போது , அங்கே தான் படம் கமெர்சியல் என்பதையும் மீறி எல்லோர் ஊர்களிலும் எளியோர்கள் வளியோர்களால் படும் வேதனைகளை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து தனி இடம் பிடிக்கிறது. அதன் பின் அவர்கள் அதை திரும்ப பெற கமெர்சியல் சினிமா என்ற மாயயைக்குள் சிக்கினாலும் நம்மை பரிசோதிக்காமல் இனிதே சென்றவகையில் நல்ல படமாகிவிட்டது.

வசனம் மிக பெரிய பலம் படத்திற்கு பாண்டியராஜ் பட்டைய கிளப்பிவிட்டார், ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வையும் அபத்தங்களையும் சோகங்களையும் பிரதிபலித்தது. அதுவும் ஆச்சியிடம் பசங்கள் தாங்கள் ஏன் இப்படி இருக்கின்றோம் என்று கூறும் இடம் மிக அருமையாக இருந்தது. டாஸ்மாக் சில்மிஷங்கள் என்று பல அபத்தங்களை வசனம் மூலம் போகிற போக்கில் தெளித்துவிட்டு போகிறார். பசங்களுக்கு என்று வரும் மாஸ் காட்சிகளில் அவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாக கையாண்டு நம்மையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடும் இடத்தில் வெற்றி பெற்று விட்டார் பாண்டியராஜ்  வசனகர்த்தாவாக.

ஒளிப்பதிவு ஷூட்டிங் சென்று படம் பிடித்தது போல் அல்லாமல் கதை களங்களில் கேமரா பதுக்கி வைத்துவிட்டு எடுத்தது போல இருந்த இடத்திலும் இந்த படம்  கமெர்சியல் படமா என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது. பாடல்கள் என்று தனியாக காட்சியை விட்டு இல்லாமல் கதையோடு உணர்ந்து  காட்சிகளோடு இனைந்து உறுத்தாமல் இருந்தது. மீண்டும் கூறுகிறேன் கானா பாலா பாடல் அருமை. பவர் ஸ்டார் ஒரு பாடலில் பவராகவே &  நடன இயக்குனராக சாம் அன்டேர்சன் உடன்  வந்து சிரிக்கவைக்கிறார்.

படம் முடிந்து கோயம்பேடு மார்கெட்டை  பார்க்க  வேண்டும் என்ற ஆவல் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு நிறைவுடன் வந்தேன் . நிச்சயம் இது தவிர்க்க வேண்டிய சினிமா இல்லை ஒரு தடவை ஆச்சும் எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா கோலி சோடா , யதார்த்த பாத்திர படைப்பில் கமெர்சியல் கலவை.

பின் குறிப்பு :
1. மொத்தம் இரண்டு பேர் மட்டும் தான் இன்று பார்த்தோம் அதுவும் நான் சென்று டிக்கெட் எடுக்கும் போது இன்னொருவர் வந்தால் தான் என்று வழக்கம் போல கூறிவிட காத்திருந்து ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்வமுடன் அண்ணே என்ன படம் என்று பதட்டத்தில் கேட்டு (ஜில்லா வீரம் வேற ஓடிட்டு இருந்தது ) கோலி சோடா என்று கூறியவுடன் திருப்தியுடன் சென்றோம். அவருக்கு இது போல 600 நபர்கள் கொள்ளளவு கொண்ட திரை அரங்கில் வெறும் இரண்டு நபர்கள் மட்டும் காண்பது முதல் முறை போல . நமக்கு மூடர் கூடம் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , என்றென்றும் புன்னகை என்று பழகிடுச்சு. 

Wednesday, 8 January 2014

வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி

தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை  பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும்  இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. 

வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)


இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற  பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.

நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)


ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை  நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக  சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக  தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)


தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)


ரஜினி-கமல் அடுத்து  அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு  இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை  பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.

வில்லன் -பகவதி (2002)


அஜித் அவர்கள்  வித்தியாச முயற்சி , காதல்  , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால்  பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.

திருமலை -ஆஞ்சநேயா (2003)


அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.

பரமசிவன் - ஆதி (2006)


அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும்  மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு  இருந்த வரலாறு  பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின்  தயாரிப்பில்  நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு  அவரேஜ் படமாக தான் போனதே  தவிர  நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில்  தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று  மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.

ஆழ்வார் -போக்கிரி (2007)


வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


அதை  தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை  காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும்  வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே தள்ளிவிட்டது.  எப்பொழுதும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி   தான்  அதே  நம்பிக்கையில்    தான்  அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு  வித்தியாசமும்  தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும். 

ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி  படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங்  என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது    விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித்  ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா  வெற்றி பின்   தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார  கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த  ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.

ஜில்லா- விஜய்க்கு அவசியம்  தேவையான முக்கிய வெற்றி 

வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி 

பின் குறிப்பு :

1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.

2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன்.