Sunday, 30 August 2015

வாசிப்பினால் பெற்றிடும் அனுபவங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திக்கின்றோம்  வேறு வழியின்றி இன்றோடு இந்த தளம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியதால் ஏதாவது உருப்படியாக பதிவு செய்யலாம் என்று கடந்த மூன்று மாதங்களாக நான் வாசித்த புத்தகங்களை பற்றிய என் கருத்தக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்......

ஆதவனின் காகித மலர்கள் -

ஆதவனின் எழுத்தை படிக்க நிச்சயம் மன தைரியம் வேண்டும் எப்படியென்றால் அவர் கூறும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள் அனைத்திலும் வாசிப்போரின் எண்ணங்களை பிம்பங்களாக கூறுவது போலவே அமைந்திருக்கும். இதை ஏற்று கொள்ள நிச்சயம் மன தைரியம் இருந்தாலொழிய வாசிக்க இயலாது.மனிதர்களின் எண்ணங்களை அப்பட்டமாக தன்னுடைய எழுத்தின் மூலம் எடுத்து வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்காக அணியும் வேஷங்களை வெளிப்படையாக கூறுகிறார் அதில் அம்மா, அப்பா, தம்பி , தங்கை என்று பாரபட்சமெல்லாமில்லை.

பசுபதி ,பாக்கியம் மிஸ்ஸஸ் பசுபதி அவர்களின் மகன்கள் விசுவம் , செல்லப்பா , பத்ரி, விசுவதின் மனைவி பத்மினி , செல்லப்பாவின் நண்பன் ரமணி , சங்கர் , பத்ரியின் நண்பன் கணேசன், தோழி தாரா. கணேசனின் அப்பா ஐயர், அம்மா , தங்கை, பத்திரிக்கையாளர் நரசிம்மன்,விசுவத்தின் நண்பன் உண்ணி அவன் மனைவி. பத்மினியின் வீட்டார்கள் அப்பா மற்றும் அவள் அண்ணன். பசுபதியின் மகன்களின் நினைவலைகளில் அடிக்கடி வரும் அவர்களின் தாத்தா. உணவுத்துறை மந்திரி, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என்று இவர்கள் தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் முறையே விசுவம் , செல்லப்பாவின் பார்வைகளில் அதிகம் சென்றாலும் அனைவருமின்றி கதை முழுமை அடைந்திருக்காது.

நாவல் முழுக்க டில்லியை சுற்றி தான் கிட்டத்தட்ட டில்லியை சுற்றி பார்க்க இந்நாவலை க்கைடாக கூட உபயோகிக்கலாம் போல. அங்கும் வசிக்கும் மூன்று வர்க்க குடும்பங்களின் எண்ணவோட்டங்களே கதை. ஒவ்வொருவர்களுடைய குணாதிசியங்களை அப்பட்டமாக பதிவு செய்துள்ளார். குடும்ப உறவுகள், தொழில்துறை போட்டி, மாணவ அரசியல், பொது அரசியல், காதல் , நட்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, துரோகம், காமத்தின் வேட்கை , மனிதர்களின் பாகுபாடுகள் , என்று இவைகளை பற்றி அதிகம் விவரிக்கின்றது கதை.

இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே தனித்துவம் வாய்ந்தவைகள் முதன்மை பாத்திரமான விசுவம் அமெரிக்காவில் இருந்து பத்மினியுடன் ஆய்வுக்காக இந்தியா வருவதில் தொடங்குகிறது நாவல். விசுவம் - தன்னிடம் யார் உரையாடினாலும் பழகினாலும் அவன் மனம் என்னவோ அவர்களின் அந்நேரத்தில் அவர்கள் அணியும் வேஷங்களையே ஆராயும் அது அம்மா , அப்பா , மனைவி என்று யாராகினும். அது போல அல்லாமல் தான் தனித்துவமானவன் என்றே எண்ணிக்கொண்டு இருப்பவன் அதன் வழியாக தன்னை தானே யார் என்ற கேள்விக்கு விடைத்தேடி கொண்டிருப்பவன். நாவலில் எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் விசுவம் தான். அவனின் எண்ணங்கள் பெரும்பாலும் என்னைப்போல பலருக்கு ஒற்றுப்போகும் ஆனால் அதை ஏற்க உங்கள் மனதில் தைரியம் வேண்டும். விசுவம்- பத்மினியிடையே வரும் உரையாடல்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அதிலும் இருவரும் மனமிட்டு தங்களுக்குள்ளே இருக்கும் கேள்விகளுக்கு விடை தேட ஒருவருக்கொருவர் விவாவதம் செய்யும் இடங்கள் வாசிக்கும் போதே படபடப்பாகும்.

அடுத்து என்னை மிக கவர்ந்தது செல்லப்பா கல்லூரி முடித்தும் இன்னும் டிகிரி வாங்காமல் அரியர் க்ளியர் பண்ண முயற்சித்து கொண்டு இருப்பான். இவனும் யாருடன் பழகினாலும் அவர்களை பற்றிய அந்நேர கோபங்கங்களை மனதினுள் போட்டு தன்னைத்தானே கோபடுத்திக்கொள்வான் ஆனால் வெளியே சகஜமாக உரையாடுவான். இயற்கையின் மேல் தீராத காதல் கொண்டவன் அதனாலே பெண்களின் மீது பேரார்வம் கொள்வான் ஆனால் அவனுக்கு எந்தவொரு பெண்ணின் அரவனைப்பும் கிடைத்தபாடு இருக்காது அவனின் அம்மாவின் செய்கையில் கூட இவனாக குற்றம் கண்டுபிடித்து தனக்கு தானே திட்டிக்கொள்வான். தீராத காம வேட்கையில் தவிப்பவனுக்கு வடிகாலே நீண்ட நேர பேருந்து பயணங்களில் கிடைக்கும் பெண் வாசம் தான் பின்னார் அதற்காவும் தனக்கு தானே வேதனையும் அடைவான் இப்படியாக தன்னிலை எதுவென்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தவனுக்கு நாவலின் முடிவில் மிக நன்றாக அவனுக்கு ஏற்றவையாக முடித்திருப்பார் ஆதாவன்.

கணேசன் பத்ரியின் கல்லூரித் தோழன் நடுத்தர வர்க்கத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு செல்ல துடித்துக்கொண்டு இருக்கும் மாணவன். தன் வீட்டாரையே எந்நேரமும் பழித்து கொண்டு தனக்குத்தானே வெறுத்துக்கொள்வான். பத்ரியிடம் கூட வெளிநட்பில் சகஜமாக இருந்தாலும் உள்ளுக்குளே வஞ்சம் தகந்து கொண்டு தான் இருக்கும் அதுவும் நாவலின் இறுதியில் கச்சிதமாக பத்ரியை பெரும் போராட்டத்தில் கோர்த்துவிடுவான் தன் சாமர்த்தியத்தால். இவன் எதிர்பார்த்தது போல நரசிம்மன் வழியாக தனக்கான அடையாளத்தை பெற்று கொண்டு இருப்பது போல இவனின் முடிவு இருக்கும்.

பசுபதி ஒவ்வொருவருக்காவும் அவர்களுக்கான வேஷம் அணியும் நடிகராகவே இருப்பார். அதன் பாதிப்பை இறுதியில் உணர்ந்து கலங்கவும் செய்வார். தன் தொழிநிமிர்த்ததில் தானாக செயல்பட முடியாமல் மற்றவர்களுக்காக மற்றவர்களாலேயே அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவராகவே இருப்பதாலே மிகவும் வருத்தப்படுவார். அப்படி இருந்தமையால் தான் தன்னுடைய நிலை இன்று இப்படி இருக்கின்றது என்பதையும் நினைத்து பார்க்கும் சாதாரண எண்ணவோட்டங்கள் கொண்ட சராசரி மனித பிம்பங்களை கொண்ட பாத்திரமாக இருப்பார்.

பாக்கியம் - பத்மினி , பத்மினி நவநாகரீகமான வாழ்க்கைமுறையால் மிக கேஸ்வலாக எல்லோரிடமும் பழகுபவள் அவளை பார்த்து பாக்கியமும் அவ்வாறு மாற துடிப்பவள் ஆயினும் அவளும் அப்படி தன் கணவரின் நட்பு வட்டங்களை அரவணைத்து பல பார்ட்டிகளுக்கு சென்று இடையில் நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும். தன் மருமகளின் நடவெடிக்கைகளை பார்த்து தன் மேல் மோகம் கொண்டவளாய் மாற துடிப்பவள் அவ்வாறே மாறியும் விடுவாள். அவள் மேல் கொண்ட பொறாமையுணர்வை மறைக்க எண்ணுவாள் அவளில்லாத போது அவள் எதிரே வந்துவிட்டாள் அதை மறைக்க நினைத்ததை மறந்து விடுவாள். குடும்பத்தில் எல்லோரையும் எப்படி இவள் ஒரேசேர திருப்த்தி படுத்த நினைக்கிறாள் என்று தன் அம்மா மீது விசுவம் ஆச்சரியம் கொள்வான் அவ்வாச்சிரியம் வாசிக்கும் நமக்கும் ஏற்படும். நவநாகரீகமான வாழ்கையின் உச்சமாய் இவள் எடுக்கும் ஓர் முடிவால் தான் நாவலின் முடிவாக இறுதி வாக்கியம் இருக்கும்.

பத்திரிக்கையாளர் நரசிம்மன் இளையோர்களின் பேச்சை நன்கு கவனிப்பவர் அவர்களின் பேச்சிற்கு மதிப்பளிப்பவர். தாரா, கணேசனின் கட்டுரைகளை பிரசுரித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். அரசியல் சம்பாஷனைகளை விவாதித்து வாசிக்கும் நம்மையும் ஊகிக்க வைக்கும். கல்லூரி மாணவ அரசியல், பொது அரசியல் எல்லாம் இன்றும் விவாதிக்க வேண்டிய வகையில் விவரித்து இருப்பார் ஆசிரியர்.

அதிலும் நாவல் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோ ஒரு கதாபாத்திரங்களின் பார்வையில் தான் சென்றது ஆனால் இறுதி இரண்டு அத்தியாயங்கள் மூன்று வரிகளுக்கு மாறி மாறி பலரின் பார்வையில் எளிதாக புரியும்படி அமைத்தது தான் ஆகச்சிறப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. பாக்கியம் நாடகத்தில் நடிப்பாள், செல்லப்பா- தாரா அங்கே காண இருப்பார்கள், நரசிம்மன்- கணேசன் உரையாடி கொண்டு இருப்பார்கள், விசுவம்-உண்ணி அவன் மனைவி காரில் பேசிக்கொண்டு வருவார்கள்,பசுபதி மந்திரியை வரவேற்று உரையாற்றுவார் இத்தனை சம்பவங்களையும் எவருக்கும் எளிதாக புரிவது போல ஒரு கேள்வி பதிலை இரண்டு சம்பவங்களோடு கோர்த்து புதிய நான்-லீனியர் வகையில் அமர்களபடுத்திருப்பார் ஆதவன்.

ஆதவன் அவர்களின் எழுத்தில் அடிக்கடி இதை காணலாம். "உதட்டை பிதுக்கினான் (பிதுக்கிக்கொண்டான்)" "தோள்களை குளுக்கினான்(குளுக்கிக் கொண்டான்)" பெண்களிடம் போலி காதலை வெளிகாட்டுமிடத்தில் அவனை நாயாக உருவபடுத்தி அவளின் சிரிப்பை ரொட்டியாக கூறுவார்( அவன் பேச்சிற்கு மீண்டுமொரு ரொட்டி துண்டு கிடைத்தது). இப்படி பல வாக்கியங்கள் தனித்துவமாக இருக்கும் அது வாசிக்கும் போது நமக்கும் அதை யூகித்து ரசிக்க வைக்கும். மனிதர்களின் உள்மனதை நம்முடைய உள் எண்ணங்களை வாசிப்பின் வடிவில் தெரிந்து கொள்ள மிக சரியான தேர்வு ஆதவனின் படைப்புகள். அதில் இந்த காகித மலர்களும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றது. இணையதளத்தில் காகித மலர்களின் விரிவான நிறைய விமர்சனங்கள் இருக்கின்றது அதையும் வாசித்து பாருங்கள். நாவலையும் வாசியுங்கள் உங்களை நீங்கள் யாரென்று அறிந்து கொள்ள உதவும்.

                                                      ***************************

வாடிவாசல்- சி.சு செல்லப்பா 


இன்னும் பத்து வருஷம் போனா ஏன் இப்ப கூட பல பேருக்கு வாடிவாசல்னா ஏதோவொரு ஊருனு தான் நினைப்பாங்க இல்ல நினைச்சிட்டு இருப்பாங்க. தமிழர்களின் கலாச்சாரத்தை வீர பெருமைகளை ஆவணப்படுத்தியது போக அழிந்து கொண்டு இருப்பது ஏராளம் அதில் கடந்த சில வருடங்களாக அழிவின் இறுதிகட்டத்தில் ஜல்லிக்கட்டு இருக்கின்றது.

1959ல் எழுதப்பட்டது இல்லை இல்லை ஆவணபடுத்தபட்டது ஆம் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கிலேயே முழு கதையும் எழுதப்பட்டுள்ளது. காலையில் தொடங்கும் ஜல்லிக்கட்டு மாலை முடிவதோடு கதையும் முடிந்துவிடுகிறாது. ஆனால் இவைகள் வாசிக்கும் போது தரும் பரவசம் சிலிர்க்க வைத்துவிடும் எவரையும்.

பிச்சு, மருதன்,கிழவன்,ஜமீன்தார்,முருகன் எல்லாத்துக்கும் மேல காரி இவர்கள் தான் நாவல் முழுக்க. விருமாண்டி படத்தில் வரும் முதல் ஜல்லிக்கட்டு காட்சிகளில் இக்கதையின் பாதிப்பு ஏகபோகமாய் இருக்கும். கிழவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் எல்லாவூரிலும் அவர் போன்றவர் நிச்சயம் இருப்பார்கள் எதேனும் விளையாட்டில் பங்கெடுக்காமல் ஆனால் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்தெடுப்பது அப்படி தான் இக்கதையிலும் இவர் உதவுவார்.கிழக்கத்தியன் என்ற ஏளன பேச்சுக்களை காதில் வாங்காமல் வந்த வேலையை முடிக்க வேண்டுமென்ற குறியோடு இருக்கும் பிச்சு தான் கதாநாயகன்.

திரைப்படமாக எடுக்க அட்டகாசமான கதைகளமிது ஏன் யாரும் எடுக்கவில்லையென்று புரியவில்லை. இந்த கதைக்கு திரைக்கதை எழுதினால் கூட மிக அருமையாக இருக்கும். வாசிக்கும் போதே காட்சிகளாக மனத்திரையில் விரிவதாக இருப்பது தான் இக்கதையின் ஆகச்சிறப்பு. அதே போல மாட்டை அடக்கினான் புடித்தான் மாடு தழுவியது என்றெல்லாம் இல்லாமல் காட்சியாக காணும் போது என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதையெல்லாம் எழுத்தில் கொண்டு வந்து விட்டார். 

ஜெட் ஸ்பீட் படம்னு சொல்லுவோம்ல அதே போல ஜெட் ஸ்பீட் கதை. சாதாரண பழிவாங்கல் கதை தான் அதை அட்டகாசமாக சொல்லி இருக்கிறார்.

இதை படித்தவுடன் ஒரு ஆசை இக்கதையை தற்கால எந்த இயக்குனர் எடுத்தால் சிறப்பாக இருக்குமென்று. அடுத்தகனமே தோன்றியது வெற்றிமாறன் தான். அந்த கிழவன் கதாபாத்திரத்திற்கு ராதாரவி அட்டகாசமாக பொருந்துவார். 

காலச்சுவடு பதிப்பகம்.
                                                         *********************

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகமது பஷீர்இஸ்லாமிய சமூகத்தினரின் மூட நம்பிகையோ ??? தவிர்க்க வேண்டிய குடும்ப வழக்கங்களையோ (பெரும்பாலான மேட்டுக்குடியினர்களுக்கும் பொருந்தும்) முந்தைய தலைமுறையினரின் போலி பெருமைகளை பேசி திரிவோரை மிகச்சாதரணமாக அழுத்தமாக சாடியுள்ளார் பஷீர்.

அதிலும் எல்லாமதங்களிலும் இருக்கும் பிரசங்களை போல முஸ்லீம் மதங்களிலும் இருக்கும் பிரசங்களை பாரபட்சமின்றி இரவு நேர பிரசங்கள் பிரசங்கள் என்று எள்ளி நகையாடியுள்ளார்.

குஞ்ஞூத்தம்மா நாவலின் பிரதான பாத்திரம் அவளுடைய மழலையான மனம் , அப்பாவித்தனமான நிலை ,அவளின் இயலாமை என்று அவளுக்காக நம்மையும் இரக்கப்பட வைக்கும்.

பஷீர் அவர்களின் கதைகளை வாசிக்கும் போது அதில் வரும் வீடு, செடி, ஊர், மக்கள், மரம், ஆற்றங்கரை, பூ, ஆடு , மாடு , கோழி என்று அத்தனையும் நம்மை சுற்றி இருப்பது போன்ற உணர்வை தரும் அதே போல தான் இதிலும் என்னருகில் நடந்த கதையை கண்டவுணர்வே கிடைத்தது.

பால்ய கால சகி , மதில்கள் தந்த உணர்வால் இதில் இறுதி அத்தியாயங்களை வாசிக்கும் போது படபடத்து எங்கே இப்படி ஆகிடுமோ இல்ல என்னவாகுமோ என்ற பரிதவிப்பு தான் இந்த நாவலில் எனக்கு மிக பிடித்தது. 112 பக்கங்களே கொண்ட குறுநாவல் ஒரே வாசிப்பில் வாசித்துவிடலாம். வாசிக்காதவர்கள் அவசியம் வாசித்துவிடுங்கள்.

காலச்சுவடு பதிப்பகம்.


                                                              *******************

கானகன் - என்னுடைய வாசிப்புகள் எப்பொழுதுமே நான் தேடி போவது அல்ல சாருவை தவிர ஏனென்றால் நண்பர்களிடமோ அல்லது சாரு ரெஃபர் செய்வதை தான் விரும்பி வாசிப்பேன். அப்படி வாசித்தது தான் கானகன் நாவலும்.


எப்பொழுதுமே சாருவின் அறிமுகங்கள் மற்றும் நண்பர்களின் அறிமுகங்களும் தோற்றதே இல்லை விதிவிலக்கு உபபாண்டவம் , அறம் இவை தவிர்த்து அனைத்துமே என்னை ஒரே வாசிப்பில் வாசிக்க வைத்தவையே. அதில் இப்பொழுது கானகன்.

கானகன் லக்‌ஷ்மியினுடைய இரண்டாவது நாவல், உப்பு நாய்கள் அவரின் முதல் நாவல் அந்த நாவலே எனக்கு மிக பிடிக்கும் இதுவரை என்னிடம் உள்ள பதிப்பை நான்கு நபர்களுக்கும் மேல் வாசிக்க கொடுத்து உள்ளேன் இப்பொழுது கூட அந்நாவல் என்னிடம் இல்லை நண்பர்களிடம் தான் உள்ளது அவ்வளவு ஏன் சாரு கூட அந்நாவலை அவ்வளவு புகழ்ந்து எழுதினார். கானகனை கூட அவர் தான் வெளியிட்டாளும் அதை நாம் வாசித்து உணர வேண்டும் என்ற ஆசையிலே தான் வாசிக்க தொடங்கினேன்.

பொது வெளியில் வாழும் வாழ்க்கைக்கும் வனத்தில் வாழுவோர்க்குமான வாழ்க்கை எது என்ன எப்படி ஏன் என்ற கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொரு பக்கங்களிலும் உணர வைக்கன்றதே வாசிக்கும் போது.

வனத்தின் அழிப்பை இது போல எவரும் விவரித்ததில்லை அப்போது வனத்தின் குடியிருப்போரின் மனநிலையை மையமாக முழு கதையையும் அவர்களின் பார்வையில் கொண்டு சென்றது தான் ஆக சிறப்பு.

இதுவரை எந்தவொரு சிறுகதை , குறுநாவல், நாவலை வாசித்தடாதவர்கள் கூட இந்நாவலை வாசிக்க தொடங்கினால் வைக்க மனமிருக்காது. அதனுள் இறங்கி முடிக்காமல் வெளி வர இயலாது.....

...... கானகனின் என் பார்வை தொடரும் ( மீள் வாசிப்பு செய்து விரிவாக எழுத ஆசை நிச்சயம் பதிவு செய்வேன்)
                                                                      *******************

நகுலன்- (நினைவு பாதை)பல சந்தர்ப்பங்களில் நான் ஒரு கோழை என்று எனக்குத் தோன்றுகிறது. யாருக்குக் குழைந்த மனம் இருக்கின்றதோ அவன் கோழை ஆகிறான். இதனால்தான் வேண்டாம்,முடியாது , இல்லை என்று சொல்ல வேண்டிய சந்தர்பங்களில் இவைகளைச் சொல்லாமல் நான் அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.

நகுலனின் நினைவு பாதை வாசித்து கொண்டு இருக்கின்றேன். புனைவை அடியோடு வெறுக்கிறாரே. அந்தவொரு காரணமே போதும் நகுலன் அவர்களின் அனைத்து பதிப்புகளையும் நான் வாசித்துவிடுவேன்....

மனிதன் ஒரு அசை போடும் மாடு- நகுலன்

நினைவு பாதை கடைசி இரண்டு அத்தியாயங்களில் கிட்டத்தட்ட இல்ல மொத்தமுமாகவே குழம்பி போகிவிட்டேன் ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு முறை முறையே படித்தும் புரியாமல் ஆனால் விட்டு விடவும் முடியாமல் இழத்துச்செல்லும் எழுத்து. இறுதி அத்தியாயத்தில் முன்னர் ஏன் அப்படி இருந்தது என்பதை விளக்கினாலும் மீண்டும் இந்நாவலை முழுக்க வாசிக்க வேண்டும் உடனடியாக அல்ல கொஞ்ச நாள் சென்று... 

நாவலில் இருந்து... 

//நாயாக பிறந்திருந்தால்
நகரமெல்லாந்திரிந்திருக்கலாம்//

சச்சிதானந்த பிள்ளை கூறுவதாக வருவதையெல்லாம் நூலாகவே பதிவு செய்யலாம் அவ்வளவு உயிர்பானவைகள்.

                                                                      *******************-
ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முகமது மீரான் ( காலச்சுவடு பதிப்பகம்)வடக்கு வீட்டு முதலாளி அகமது கண்ணு , அவரின் தங்கை நூஹூத்தும்மா , அவரின் மகள் ஆயிஷா அவரின் தங்கை மகன் பரீது அவரின் கணக்குபிள்ளை போன்ற அவுக்கார் மற்றும் அவரின் சொல்லையே நம்பி இருக்கும் லெப்பை , ஊர் மக்கள். முதலாளியை எதிர்க்கும் மஹமூது, மேக்கு வீட்டு ஆளுங்க , அசனார் லெப்பை என்று நாவலின் ஒவ்வொரு பாத்திரங்களும் வாசிக்கும் போது பரவசபடுத்துகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் இன்றும் கூட காணலாம் அல்ல வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கதை கேட்டு இருப்போம் அது போல இதிலும் நல்ல நிலையில் பல தலைமுறைகளாக இருந்து வந்த குடும்பம் அழிந்து போகிறது அதையும் மீறி இஸ்லாமிய சமூகத்தின் மூட நம்பிக்கைளை அவர்களின் பார்வையிலேயே நியாபடுத்தாமல் அந்த அபத்தங்களை அப்படியே நமக்கு தெரியபடுத்துகிறார் ஆசிரியர். அதிலும் ஒருவன் மூட நம்பிக்கைகளை மிதித்து வாழ்ந்தால் அவனை ஊரே சேர்ந்து தூற்றபடுவதும். ஆங்கில கல்வியை சாத்தனின் வருகையாகவே எண்ணுபவர்களும் அதை தடுக்க சாத்தானை விட கேவலமான எண்ணங்களால் மக்கள் இருப்பதும். பள்ளி ஆசிரியரை ஊரை விட்டு விரட்ட அவரின் வீட்டின் முன் நிற்க இடமில்லாமல் மலம் கழித்து வைக்க சொல்லுவார் அசனார் லெப்பை. அதை கண்டு ஆசிரியர் மெஹூப்பூகான் அடையும் விரக்தி வாசிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்ளுகிறது. தங்ஙள் என்ற கதாபாத்திரம் தான் அத்தனை மூட நம்பிக்கைகளுக்குமான காரணியாக இருக்கின்றது அதிலும் அவரின் ஆசைகள் ,திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று வரும் பெண்ணிடம் தங்ஙள் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அருமையாக தெரியபடுத்தியுள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் முடிவை சொல்லி அடுத்த அத்தியாயத்தில் அவை விளக்கப்படுகிறது. இந்த வகை மிக நெருக்கமாக உணரமுடிகிறது வாசிக்கும் போது. மொத்தமாக நாவலை வாசித்து முடித்தவுடன் ஒரு தலைமுறையினரின் அபத்தமான மூடநம்பிக்கையான வாழ்வியலை கண்ட உணர்வை தருகிறது. அதே போல எந்தவொரு கற்பிதங்களையும் ஆசிரியர் கூறவில்லை அவர்களின் வாழ்க்கையை அப்படியே கூறியது தான் நாவலே முடிந்தாலும் அந்த மக்களின் எண்ணங்கள் மனதை விட்டு விலக மறுக்கின்றது.

வடக்கு வீட்டு முதலாளியின் இறுதி நிலையும் ஆயிஷாவின் முடிவும் மிகவும் பாதித்தது. செய்த தவறுக்காக பெறும் தண்டனையை விட , தவறு நடந்திடுமோ என்ற பயத்தில் தன்னை தானே தண்டித்து கொள்வதும் என்னவென்று நினைக்க சமூகத்தின் அவலங்கள் தானே அதற்கு காரணம். இறுதி வரை அந்த மக்களின் நம்பிக்கையிலேயே நாவலும் முடிந்து போனது அவர்களிடம் சென்று யார் புரியவைப்பது என்ற ஆதங்கத்தோடும் வேதனையாக மனமே நிலையில்லாமல் தவித்தது நாவலை முடித்த நிமிடங்களில். அது தான் இந்த நாவலின் வெற்றியாக எனக்கு புரிகிறது.

அடுத்த பதிப்புகளில் கடைசி பக்கங்களில் இருக்கும் வட்டார சொல்லாடல்களின் விளக்கங்களை அந்தந்த சொல்லுக்கு நேரே கொடுத்தால் இன்னும் எளிமையாக இருக்கும் இருந்தாலும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை வாசிப்பாளர்களின்றி அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புத படைப்பு.

                                                                   *******************

மரம்- ஜீ.முருகன் - உயிர்மை பதிப்பகம்சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசாரியர்.

நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள் , உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார் நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று.

ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது.

நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது.

நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக கூற முடியும்.
                                                        *******************
இந்த கருத்துக்கள் ஏற்கனவே முகனூலில் பதிவு செய்தவை தான் ஆனால் இன்று இங்கே ஒன்றாக தொகுக்க வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

 நன்றி .......4 comments:

 1. Manathirkku man(itham) tharuvathil puutthagangalukku perumpangundu..
  Vaasippugal menmealum valara vaazhthugal nanbaa..

  ReplyDelete
 2. அடேயப்பா... தனிதனியா ஒரு ஏழு blog போட்டுருக்கலாம்... ;) ;)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா அவசியம் வாசித்து விடுங்கள் ☺️

   Delete
 3. அனைவருக்கும் வணக்கம்

  சுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete