Sunday 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்


தன்னுடைய முதல்படம் தொடங்கி இன்றுவரையில் அவரின் அனைத்து 6 திரைப்படங்களிலும் (முகமூடியிலும்) தன்னுடைய தனித்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார் , அவரின் கிளிஷேக்கள் கிண்டல் அடிக்கபட்டாலும் அதை தவிர்க்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இயக்குனர் என்று ஒரு குழுவின் தலைவனாக திரைப்படத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி , பாமரனுக்கும் இது மிஷ்கின் படம்பா என்று சொல்லாமல் புரியவைத்தது உள்ளார்.  இவரின் இருளுலக  படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்திற்கு காத்திருந்து சென்றேன்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் , கதாநாயகி இல்லை என்றால் பிரபல நாயகி இல்லாமல் (சூது கவ்வும் படத்துக்கு கூட சஞ்சீதா ரெட்டி தேவைப்பட்டு இருந்துச்சு பார்த்துக்கோங்க ) நாயகன் என்று ஒருவனை முன்னிறுத்தி பயணிக்காமல்.நீண்ட நாட்களுக்கு பிறகு  , என்ன கதையோ எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை எந்தவொரு சமரசமும் விட்டு கொடுத்தாலும் (முன்பு மிஷ்கினின் நந்தலாலா தவிர அனைத்திலும் சமரசம் செய்து இருப்பார் ) இல்லாமல் நேர்மையாக வழக்கமான மிஷ்கினின் கிளிஷேவுடன் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் அமர்ந்து இருந்த எனக்கு மிஷ்கின் விருந்து படைத்தார் என்றே சொல்ல வேண்டும், காட்சிக்கு காட்சி மிரள வைத்தது படத்தின் மேகிங், முதலில் சாலையில் தொடங்கும் காட்சி குண்டு துளைக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பவனை(ஓநாய் ) , எல்லோரும் எவ்வாறு அணுகிவிட்டு செல்கின்றனர் என்ற காட்சி அமைப்பு சமகால நிகழ்வுகளை வேதனை பகடி செய்கின்றது. அதிலும் ஒரு இளகிய மனம் கொண்ட மருத்துவ மாணவன் (ஆட்டுக்குட்டி ) அவனை காப்பாற்றுகிறது. பின் தொடர்ந்து அதனால் வரும் இன்னல்? ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று இயக்குனர் மிஷ்கின் நடத்திய வேட்டை தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

தமிழ் திரைப்படங்களில் இந்த படத்தின் திரைக்கதைக்கு தனி இடம் நிச்சயம் உண்டு, சர்வசாதரணமாக 2 மணிநேரம் பார்வையாளர்களை கட்டி போட்டுவிடுகிறார், பின் மீதி 20 நிமிடங்கள் அதுவரை இருந்த ஆர்வத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று அட்டகாசமாக வெற்றி கண்டுவிட்டார் மிஷ்கின்.

படத்தின் மொத்தமே எல்லோரும் பேசும் வசனங்களை பார்த்தல் 20 முதல் அரைமணி நேரம் தான் இருக்கும் , மீதி உள்ளவை அனைத்தும் இளையராஜாவின் ராஜாங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு (நந்தலாலா) அவரிடம் 20 வருடதுக்கு முந்தைய இசையை உணர முடிந்தது. கல்லறையில் நடைபெறும் காட்சி பின் கார் பார்கிங்ல் வரும் காட்சிகள் இசையில் உருக வைத்துவிட்டார். பின்னே படம் முழுக்கவும் இசை தனியே தெரியாமல் படத்தோடு பயணித்தது மிஷ்கின் & இளையராஜா இருவரின் நேர்மை வெளிப்பட்டது.

ஒளிப்பதிவு மிஷ்கினின் படங்களில் மிக சிறப்பான இடம் பெரும் என்பது எல்லோரும் அறிந்ததே அதிலும் இதில் பாலாஜி வி ரங்கா எனும் புதியவரின் ஒளியில் இருளை அழகாக்கி திரையில் விரித்து உள்ளார், குறிப்பாக கார் பார்கிங் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது , ட்ரைன் காட்சிகள் யதார்த்தமாக நம்மை நம்ப  வைத்தது இவரின் சாதுர்யம். அதே போல பல காட்சிகள் ஒளிபதிவில் புதுமை புகுத்தி உள்ளனர் அது வித்தியாச கோணங்கள் , லைடிங்கில் , என்று. எப்பொழுதும் மிஷ்கினின் படங்கள் ஒளிப்பதிவில் அவரின் அதுவரை படங்களை முந்தும் அதுபோலவே இப்பொழுது இது முதலிடத்தில் உள்ளது.

ஓநாயாக மிஷ்கினும் ஆட்டுக்குட்டியாக  ஸ்ரீயும் புலிகளாக காவல்துறையினர்களும் , கரடியாக தம்பா ஓநாயின் தலைவனும் , என்று அனைவரும் இயல்பு மீறாத நடிப்பில் பதிவு செய்கின்றனர் இவர்களை மீறி சில வேறு மென்மையான  ஆட்டுக்குட்டிகள் நெஞ்சில் பதிந்து போனது வழக்கமான மிஷ்கினின் வகையறா. இதில் ஒரே விதி  விளக்கு சாஜி சுத்தமாக பொருந்தவில்லை மிஷ்கினின் இது போன்ற பாத்திரங்கள் அற்புதமாக பொருந்தி போகும் அஞ்சாதே நரேன் , யுத்தம் செய் ஜே.பி ஆனால் இதில் தவறி போனது. அவரின் உடல்மொழி கூட அன்னியமாக பட்டது.


மிஷிகின் நடிப்பில் நந்தலாலாவை மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும் அதிலும் இதில் ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள் தான் பெரும்பாலும் ஆனால் கல்லறையில் வரும் ஒரே ஷாட் காட்சி இப்படத்தின் உச்சம் குறைந்தது 4 முதல் 5 நிமிடங்கள் உறையவைத்து விடும், அதுவரை படம் பிடிக்காதவருக்கு  (வாய்ப்பில்லை இருந்தும் சிலருக்கு ) கூட இந்த காட்சிக்கு பிறகு பிடித்துவிடும் என்பதை விட படத்தினுள்  உள்ளே இழுத்துவிடும். அவ்வளவு அற்புதமான காட்சி.

மருத்துவ மாணவர்கள் போதை மருந்து சர்வ சாதரணமாக உபயோகிப்பதை , அலட்சியமாக பதிவு செய்து உள்ளார். அதில் எந்த தர்க்க நியாயமும் கூறவில்லை ஏன் அந்த மருந்து தான் அடிபட்டவனை காக்கின்றது ஒரு வகையில்.

வில்லனை (கரடி) எழுந்து நடக்க கூட இயலாதபடி ஆரம்பம் முதல்  இறுதிவரை நோயாளியாக(ஓநாய் கடித்து குதறியதால் )  காட்டியது புதுமை.

சிறுமி தன் உடன் இருந்த சித்தி இறந்த பின்னும் கதை சொல்ல சொல்லி கேட்பது நமக்கும் அனுதாபம் ஏற்படும் .

பார்வை அற்றவர் துப்பாக்கியை மேல் நோக்கி சிரித்துக்கொண்டே சுடுவதும் தொடர்ந்து தானும் இறப்பதும், பல அர்த்தங்களை கூறிவிடுகிறது.

படத்தில் மரணிக்க போவோர்கள்  இறக்கும் தருவாயில் அதுவரை தன் வாழ்க்கையில் எவரை நினைக்கின்றனரோ அவர்களின் பெயரை சொல்லிவிட்டு இறப்பது போல காட்சிபடுத்தியதும் உணர்ச்சியின் அழகு.

படத்தின் குறை என்று எனக்கு படுவது பெரிதாக இல்லை என்ன அறுவை சிகிச்சை செய்து சில நிமிடங்களில் நேரங்களில்  ஒருவர் இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள முடியுமா ? இப்படி எல்லாம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முடியுமா என்று படத்தின் முதல் 20 நிமிடங்கள் அப்பொழுதே யோசிக்க வைத்தது. இவை தவிர அந்த புலி ஷாஜி நடிப்பு அவரின் தேர்வு.

திரைஅரங்கில் பார்க்கவேண்டும் என்றும் மக்களை இழுக்க வேண்டும் என்று எங்கள் படத்தில் இந்த சவுண்ட் சிஸ்டம் முதல் பயன் படுத்தி உள்ளோம் , சில காட்சிகள் இப்படி எடுத்து உள்ளோம் , vfx படத்தில் நிறைய உள்ளது என்று விளம்பர படுத்துவோருக்கு மத்தியில். அமைதியாக எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் பெரியதாக இல்லாமல் வெளியீடு கண்ட இப்படத்தை திரைஅரங்கில் மட்டுமே முழுமையாக கண்டு ரசிக்க முடியும் , நிச்சயம் வேறு எதிலும் அந்த அனுபவத்தை பெற்றுவிட முடியாது. இந்த படத்தை பொருத்தவரை எப்படியாவது திரை அரங்கிற்கு இழுக்க வேண்டும் , அவர்கள் உள்ளே வந்தால் போதும் மிஷ்கினின் திரை மொழி நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் கட்டி போட்டுவிடும்.

இறுதியில் படம் முடிந்து எல்லோரின் பெயர்களை தொகுக்கும் பொழுது அவரவரின் பாத்திரங்களுக்கு ஏற்ப ஓநாய் , ஆட்டுக்குட்டிகள் , புலிகள் , கழுதை புலிகள் என்று மிருகங்களின் பெயர்களை கூறியதும் எல்லோரையும் போட்டுவிட்டு அதுவே இரண்டு நிமிடங்களுக்கும் மேல் பின் கடைசியாக இணைய இயக்குனர் புவனேஷ் என்று பெருமை படுத்தி விட்டு இறுதியாக

எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடித்துவிட்டு வந்தேன்.

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்
---------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :(படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும்)

*சிங்கப்பூரில்  எப்பொழுதும் எதிர்பார்ப்பு உள்ள சிறு முதலீடு கொண்ட திரைபடங்கள் கூட எளிதாக  வெளியீடு கண்டுவிடும் ,ஆனால் அதை நாம் காண ஞாயிறு தவிர மற்ற நாட்கள் பெரும்பாடு படவேண்டும் . அதுபோலவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டு திரைஅரங்கில் வெளியாகி விட்டது, அதை நான் காண்பதற்கு வழக்கம் போலவே பெரும் பாடுபட வேண்டியானது.முதலில் சென்ற திரை அரங்கில் வெள்ளிகிழமை ஆள் இல்லை என்று கூற சரி அடுத்த காட்சிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால் அதற்கும் இல்லை ஷோ நேரத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட கடுப்பாகி , அடுத்த திரைஅரங்கு சென்று(இந்த இடம் பெயரே லிட்டில் இந்தியா அதனால தமிழர்கள் நிறைந்து இருப்பர்  ) அங்கும் இதை போலவே கூற வேறு வலி இல்லாமல் என் நண்பனை வர சொல்லிவிட்டு காத்திருந்து படத்தை பற்றி நண்பர்களிடம் செல்லில் பயங்கர பப்ளிசிட்டி போல கொஞ்சம் சத்தமாக பேச , ஒரு சில புண்ணியவான்கள் எப்படியோ டிக்கெட் எடுத்துட்டாங்க , ஒரு படம் பார்க்க எவ்ளோ வேலை பண்ண வேண்டியது இருக்கு அப்படின்னு நினைச்சிடே உள்ளே போனோம் நானும் என் நண்பனும் (அவனும் என் மேல் செம்ம காண்டாகி இருந்தான் ராஜா ராணி டிக்கெட் என்று வர சொல்லிவிட்டு இதை காட்டினேன் அதனால் )

*இறுதியில் எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடிக்கும் பொழுது ஒரு ஜோடி எங்களோடு இருந்து, பையனை வழுக்கட்டாயமாக நிற்க சொல்லி அந்த பெண் பார்த்து சென்றது ஆச்சிரியமாக இருந்தது.

*பிடிக்காமல் படத்திற்கு உடன் வந்த நண்பன் முடிந்து சூப்பர் படம் மச்சி அஞ்சாதே வராம இல்லை அந்த படத்த பார்க்காமா இத பார்த்தா இன்னும் மிரட்சியா இருக்கும் என்று பாராட்டு பத்திரம் வாசித்தான்.

7 comments:

  1. தல,
    அருமையான விமர்சனம். படம் இன்னும் பாக்கலங்கறதால நீங்க கதை சொல்லிருக்கறத போர்ஷன் மட்டும் படிக்கலை. படம் பாத்துட்டு வந்து அதையும் படிச்சுக்கறேன்.

    அப்பறம் இந்த வேர்ட் வெரிஃபிகேஷன தூக்கி விடுங்க.. ஒவ்வொரு டைம் கமெண்ட் போடும்போதும் வந்து எரிச்சல கெளப்புது..
    Steps to disable : 1) Blogger --> Settings --> Posts and comments -- > Show word verification --> change to NO.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா , நீங்க சொன்னத்தை இப்போ செய்து விட்டேன் அதற்கும் நன்றி :)

      Delete
  2. நேர்த்தியான பார்வை. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. முடிஞ்சா blogger Follower widget வையுங்க. உங்களை Follow பண்ண வசதியா இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கூடிய விரைவில் தொடரும் வசதியை ஏற்படுத்துகிறேன் :)

      Delete
  3. நன்றி பாஸ்...

    ReplyDelete
  4. மிக அருமையான, நேர்மையான விமர்சனம் நண்பரே... நான் தியேட்டரில் பார்த்து நிங்க சொன்ன அனைத்ததையும் பெற்றேன்... நண்பர்கள் அனைவரும் தியேட்டரில் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா ... மீண்டும் வருக

      Delete