Friday 21 March 2014

குக்கூ - காவியக் காதல்

சென்னையில் பணிபுரிந்து பொழுது சில மாதங்கள் வேளச்சேரி-மைலாபூர் மின்சார ரயிலில் தான் பயணம் , அப்பொழுது அங்கே ரயிலில்  காணும் மாற்றுதிறனாளிகள் பலரும் தங்களுடைய குறைகள் பற்றி எந்தவொரு கவலையும் இன்றி மிக கலகலாப்பாக தங்கள் பணியை செய்து கொண்டு இருப்பார்கள்.அதை காணும் பொழுதெல்லாம் ஏன் இவர்களுடைய இந்த இன்பமான பக்கங்களை எவரும் பதிவு செய்வதை மறுத்து இருளான பக்கங்களாக காட்டுகின்றனர் என்று தோன்றும்.அதை நிவர்த்தி செய்யும் வகையில் குக்கூ திரைப்படம் அற்புதமாக  பதிவு செய்து உள்ளது.

 வழக்கம் போல கதை சொல்லி உங்களின் சுவாரசியத்தை குறைக்க விருப்பமில்லை. காதல் கதை இருவர் சேர்ந்தார்களா இல்லையா அவ்வளவே. தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் 95% படங்களின் கதை தான் என்றாலும் அதை இயக்குனர் சொன்ன விதத்திலும் , கதாபாத்திரங்களின் நடிப்பிலும்  நமக்கு கிடைத்த அருமையான பதிவு இப்படம். இப்படத்தின் ஆக சிறந்த சிறப்பு ஒரு காட்சியில் கூட நமக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்று திணிக்கப்படவில்லை. கதையை அவர்களின் பார்வையில் யதார்த்தமாக காட்சிபடுத்தி உள்ளனர்.


அட்டக்கத்தி தினேஷ் , பிரமிக்க வைத்து உள்ளார் தன்னுடைய பங்கை மிக சிறப்பாக வெளிகாட்டி உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தமிழ் கதாபாத்திரமாக மனதை உருக்கிவிட்டார். சுந்திரகொடியை முதல்முறை சந்திக்கும் இடத்தில் நக்கல் அடிப்பதும் , பின் அவளின் கைகள் தன்னை தொட்டவுடன் அதில் காதல் உணர்வில் திளைக்கும் காட்சி, அவளோடு வாழ்ந்து விட போராடும் காட்சிகள் என்று தினேஷ் நடிப்பில் இப்படம் என்றும் அவருக்கு ஓர் பொக்கிஷம் தான். பல விருதுகள் நிச்சயம் காத்துக்கொண்டு இருக்கின்றது இந்த படத்திற்காக. நான் உங்களை ஒரு தடவ பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கட்டிபிடித்து உடலை தொடும் காட்சியில் நெகிழ வைத்துவிடுவார். தன்னுடைய இயலாமையை ஒரு காட்சியில் கூட வெளிகாட்டிகொள்ளாமல் பார்வை அற்றவனின் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளார். மொத்தத்தில் இவரின் நடிப்பு கிளாஸ்.

மாளவிகா சுதந்திரகொடியாக தன்னுடைய குறை மறந்து வாழ்க்கையில்  ஆசிரியராக ஜெய்க்க வேண்டும் என்று வாழ்ந்து வருபவர். காதல் தோல்வியின் போது அந்த வலியை நமக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு சிறப்பு தான் ஆனாலும் தினேஷ் நடிப்போடு போட்டி போட முடியவில்லை. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க இவருக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும். பிங்க் கலர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , ஆனா அது எப்படி இருக்கும் என்று கேட்டு கொண்டே அது இளையராஜா பாடல் போல இருக்கும் என்று கூறும் பொழுது கண்கள் கலங்கிவிடுகிறது.


சந்திரபாபு , எம்,ஜி.ஆர் , அஜித், விஜய் என்று இவர்களும் தங்களுடைய நடிப்பை வாரி வழங்கி உள்ளனர் அதிலும் விஜய் -அஜித் வரும் காட்சிகள் அட்டகாசம். சந்திரபாபு தான் அவர்களின் காட்பாதராக இருக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரே காட்சியில் இறுதியில் தான் யார் என்பதை மீண்டும் நிருபித்து இருப்பார் (படத்தை பார்த்து இங்கே நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்). அதுவும் தினேஷின் நண்பராக உடன் வருபவர் அட்டகாசமான நடிப்பு. அவரை எங்கோ பார்த்தது போலவே தோன்றுகிறது வேறு எந்த படத்திலாவுது நடித்து உள்ளாரா???. பின்னர் ஆடுகளம் முருகேஷ் தண்ணி பாரதியாக இசை பிரியராக தினேஷை புகழ்ந்து அவருக்கு உதவும் காட்சிகள் என்று தன்னுடைய இருப்பை சரி செய்து உள்ளார்.

இதுபோன்ற களம் உள்ள படங்கள் பெரும்பாலும் அவர்களை பெரும் வாதைக்கு உள்ளாக்கி நம்மை அழவைத்து விட வேண்டும் என்றே இருந்து இருக்கும். அதை முற்றிலும் உடைத்து புதுமையாக படத்தில் வரும் பெரும்பாலோனரும் நல்லவர்களாக , இரக்கம் உள்ளவர்களாக விபத்து என்றால் உதவி செய்வோர் ,யார் என்று தெரியாத  பார்வையற்ற பெண் என்றாலும் அவருக்கு உதவி செய்வோர்கள் .... இப்படி ஆச்சிரியபடுத்தும் காட்சிகள் அதிகம் உண்டு.இரண்டாம் பாதியின் நீளம் சற்று அதிகம் தான்.

இசை அவ்வளவு அழகாக கதையோடு இழையோடுகிறது , சந்தோஷ் நாராயணன் அவர் மீது   எதிர்பார்ப்பை கூடி உள்ளது என்றால் மிகை இல்லை. பின்னணி இசை உறுத்தவே இல்லை இது போன்ற படங்களில் வயலினை போட்டு தீட்டி எடுத்துவிடுவார்கள் ஆனால் இவர் அழகாக ரசிக்க வைத்து உள்ளார் .அதே போல ஒளிப்பதிவும் ரம்மியமாக கவர்கின்றது , பார்வையற்ற அவர்களின் கரு விழிகளில் கூட கமெரா விளையாடி உள்ளது. அற்புதமான பாடல்களை இவரின் ஒளிப்பதிவில் இன்னும் மெருகேத்தி உள்ளார்.எடிட்டிங் தான் கொஞ்சம் இன்னும் கட் செய்து இருக்கலாம் ஆனாலும் அது குறையாக தெரியவில்லை.


இயக்குனர் ராஜு முருகன் தன்னுடைய முதல் படைப்பை காலத்திற்கும் அழியாத படைப்பாக தந்த வகையில் அழுத்தமான வருகையாக பதிவுசெய்து உள்ளார். படம் ஆரம்பித்தது முதல் பல கதாபாத்திரங்கள் வர தொடங்கியதும் அவர்களுக்கு என்று எந்த முன்னுரையும் காட்டாமல் காட்சிகளின் வழியாக நமக்கு புரியவைத்த இடங்கள் மிக சிறப்பு. இதையும் நீங்கள் காணும் போது உணருவீர்கள். படத்தில் ராஜு முருகன் அவராகவே நடிக்கவும் செய்து உள்ளார் நல்லா தான் இருக்கார். சார் ப்ளீஸ் நீங்களும் அமீர் , சசி குமார் , சேரன் போல வர வேண்டாம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்க வைத்துவிட்டது உங்களின் முதல் படைப்பே.

குக்கூ- காவியக் காதல் , அனைவரும் நிச்சயம் திரை அரங்கில் சென்று காண வேண்டிய திரைப்படம்.

4 comments:

  1. இந்தப்படத்துக்குப் போலாம்னு என் ஃப்ரண்ட்சைக் கூப்பிட்டா வர மாட்டேங்கிறாய்ங்க.. என்னாத்தச் சொல்ல ?? மாற்றுத்திறனாளிகளின் மற்றொரு பக்கத்தைக் காட்டும் படம்ங்கறதுக்காகவே படம் பாக்கலாம் போல.. நீங்க எழுதியிருக்கறதைப் பார்த்தா நல்ல ஃபீல் குட் படமா தெரியுது.. பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் தான் போல..!!

    எது எப்டியோ, ஃப்ரண்ட்ஸ் வந்தாலும் வராட்டாலும் கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பாக்கறேன் தல.. :) :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பாருங்கள் நண்பா உங்களை ஏமாற்றாது இப்படம் ... நிறைய காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கின்றது அதுவும் சிலிர்க்க வைக்கும் அதற்க்கு நான் உறுதி ....

      Delete
    2. ///என் ஃப்ரண்ட்சைக் கூப்பிட்டா வர மாட்டேங்கிறாய்ங்க.. என்னாத்தச் சொல்ல ??///

      HArry potter also dealing same problem here..

      Delete
    3. வருகைக்கு மிக்க நன்றி நண்பா .... கண்டிப்பாக திரைஅரங்கில் காணுங்கள் :)

      Delete