Monday, 20 April 2020

காடோடி - நக்கீரன் ( அடையாளம் பதிப்பகம்)

காடோடி - நக்கீரன் (அடையாளம் பதிப்பகம்)

இயற்கையை முன்னின்று அழிக்கும் மனிதர்கள் அதில் முரணாக சிலர் இயற்கையை வாழ்வாதாரமாக நினைத்து உருகி கொண்டே அழித்து கொண்டு இருக்கும் இயலாதவர்கள் , இன்றைக்கும் இயற்கையின் பிள்ளைகளாக வரும் தொல்குடிகள், மரங்களை டாலராக பார்க்கும் முதலாளிகள், இது வரை அறிந்திடாத பலப்பல உயிரினங்கள், விலங்குகள்,செடிகள், மரங்கள், கனிகள் என்று பலவற்றை ஆவணப்படுத்திய நாவலே காடோடி.  முழுக்க முழுக்க இயற்கை அன்னையின் இருப்பிடமான காடுகள் விலங்குகள் பறவைகள் பூச்சிகள் ஓடை நதி அருவி என்று இவைகள் மேல் அளப்பறியா அன்பை செலுத்தி ரசித்து வணங்கி அவைகளை போற்றி பாதுகாக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்துகிறது.



மலேசியா இந்தோனேஷிய காடுகளை முன்னின்று அழித்த ( வெறும் அழித்த என்று கூற கூட முடியவில்லை பாதம் படும் இடங்கள் முழுக்க இழை தழைகளாகவும் காய் கனிகளாகவும் அன்னார்ந்து மேலே பார்த்தால் வானம் கூட அங்கங்கே மரம் கிளைகள் வழி விட்டு மின்மினிப்பூச்சின் ஒளி போல தெரிந்தது போகி மொத்த காடும் பாலைவனம் போல ஆக்கபட்டால் யோசித்து பாருங்கள்) நிறுவனங்களை மனிதர்களை காட்டிக் கொடுப்பது போல சாட்சியாக ஆசிரியரே வாக்குமூலம் அளிக்கிறார் நாவலாக.

காடு, அரிய வகை உயிரினங்கள் என்று இயற்கையின் மேல் அளவில்லா காதல் கொண்டவர் அதை அழிக்கும் வேலைக்கு செல்கிறார் அப்போதாவது அந்த இடங்களை காண முடியும் என்ற ஆசையில். ஆனால் இறுதியில் அவரின் மனநிலை என்ன கொடுத்த வெகுமதி என்ன என்பதை அவசியம் நாவலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். அப்படி அங்கு சென்று உடன் இருக்கும் நண்பர்கள், ஊழியர்கள் , வேலையாட்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலாச்சாரம் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூட குடும்பமாக முகாமில் இருக்கின்றனர். மலேசிய இந்தோனேஷிய பூர்வகுடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்து ஆசிரியர் கூறுகிறார். பல உயிரினங்களை அவர் பார்ப்பதாக நாம் வாசிக்கும் போதெல்லாம் நாமும் பார்க்க வேண்டுமே என்று ஏங்க வைத்து விடுகிறார். இன்னும் சொல்ல போனால் அவர் குறிப்பிட்ட பல உயிரினங்களை அப்பொழுது தான் முதல் முறை வாசிக்கிறேன். அவர் குறிப்பிட்டு இருக்கும் உயிரினங்களை எல்லாம் தனி பதிவாக போட வேண்டும்.

பல இடங்களில் வாசிக்கும் போது விஸ்வலாக உணர முடிந்தது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் மிகையாக நினைத்தாலும் உண்மையாக எனக்கு தோன்றியது கதையில் வரும் பிலியவ், ஒமர், ஆங், பார்க், அன்னா, ஜோஸ் என்று பலரை அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப உருவம் கூட கொடுக்க முடிந்தது பாதி நாவலை கடக்கும் போதே அந்த உருவங்கள் பேசுவது போலவே வாசித்தேன். அதிலும் பிலியவ் என்ற தொல்குடி பெரியவரின் செய்கைகள், பேச்சு , ஏக்கம் , விரகத்தி என்ற அத்தனையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.

கதையில் சிலாங்கன் பத்து என்ற மூதாதை மரம் வரும் அதை பற்றிய விவரனைகள் அதற்காக பிலியவ் அவர்கள் ஏங்குவது மற்ற ஒமரும் ஆசிரியரும் இயலாமையில் தவிப்பது என்று மிக உணர்ச்சிபூர்வமாக அமைந்திருக்கும் அந்த பகுதி. அந்த மரம் அழிக்கபட்டதை விவரிக்கும் இடமே எவரையும் கலங்க வைத்து விடும்.

ஜோஸ் என்ற நண்பனுகாக அவனின் பூர்வ குடியினர் தங்கி இருக்கும் இடத்துக்கு செல்லும் ஆசிரியர் அவர்களின் கலாச்சாரங்களை பற்றி குறிப்பிடுவது வேட்டை முறைகள் பண்பாடு என்று கூறுவதை வாசிக்கும் போது நம்முடைய பண்டைய கால வழக்கங்கள் மனதில் வந்து உறுத்தியது. அந்த இடத்தில் வரும் மென்மையான காதல் பின்னர் வரும் பிரிவு என்று மனித உறவுகளை உணர்வு பூர்வமாக வாசித்த நிறைவை தரும் அந்த பகுதி.

ஒமர் எழுதியதாக வரும் கடிதம் கிட்டத்தட்ட ஆசிரியரை மட்டுமல்ல நம்மையும் உறையவைத்துவிடும் அந்தளவுக்கு இயலாமையின் உச்சமாக இருந்த மனதின் எழுத்தாகவே பதியபட்டுள்ளது. ஏனென்றால் தந்தை மகன் போன்று இருந்த உறவு என்னவானது என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் கல்லூரியில் நான்காண்டுகள் முடிந்து இறுதி நாள் தங்கி இருந்த வீட்டை விட்டு கிளம்பும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிய எண்ண ஒட்டங்கள், பின்னர் நான் கோவையில் வேலை பணி புரிந்த போது அந்த ப்ராஜெக்ட் முடிவுற்று பின்னர் ஒவ்வொருவரும் கிளம்பும் போது வந்த உணர்ச்சிகரமான தருணங்களை இந்நாவலில் முழு வேலைகளும் அழிப்பும் முடிந்துவிட்டு ஒவ்வொருவராக சில குழுக்களாக என்று குடும்பமாக எந்தவித பிரிவினைகளன்றி வாழ்ந்துவந்தவர்கள் பிரிந்து போவதை ஆசிரியர் பதிவு செய்து இருப்பது ஆகசிறந்தது மனதை கொள்ளை கொண்டது அந்த பகுதி.

இது போல நாவல் முழுக்கவும் மெய் மறக்க செய்திடும். அவரின் உண்மையான வலி வேதனைகளை வாசகனுக்கு கடத்தியதில் இந்நாவல் மிக பெரிய வெற்றி பெறுகிறது. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சில வகைகள் தான் கலங்க செய்யும் அவைகளுக்கு பிறகு வாசிக்கும் போது கண் கலங்கியது ஆசிரியர் நக்கீரன் அவர்களின் காடோடி நாவல் தான் . அதிலிருந்து மீள முயற்சித்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் என்னளவில் வாசிப்பால் என்னை மாற்றம் தேடல் என்று மனம் வேறொரு நிலை கொண்டு சேர்க்க போகின்ற மிக முக்கியமான நாவல்.

பிலியாவ் போல தொல்குடியாகவே பிறந்திருக்கலாமோ என்று ஏங்குகிறேன்.

கான் நிலங்களை கண்டு ஆசை தீர சுற்ற வேண்டும் போல தோன்றுகிறது.

காடோடி- வன அழிப்பை ஆவணப்படுத்திய உன்னதமான படைப்பு.

Lakshmi Saravanakumar அண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

சென்னையில் புத்தகங்கள் வாங்கிய போது சில புத்தகங்களை கழிக்க வேண்டிய நிலை அப்போது இந்த நாவலை அப்புறம் வாங்கிக்கலாம்ணா என்று சொன்ன போது உரிமையாக இதை கண்டிப்பா வாங்கு நல்ல நாவல்னு பரிந்துரைத்தது லக்‌ஷ்மி அண்ணன் தான்.