Tuesday, 22 April 2014

உப்பு நாய்கள்-நாவலின் என் வாசிப்பு அனுபவம்

 (லக்ஷ்மி சரவணகுமாரின்)


புதுப்பேட்டை , ஆரண்யகாண்டம் போன்ற படங்களை பார்க்கும் போது அக்கதையின் கதாபாத்திரங்களை நாம் உள்வாங்கினால் தான் அப்படங்களை ரசிக்க முடியும். அதைவிட்டு தர்க்க நியாயம் பேசினால் அதுவும் ஒரு சராசரி படங்களை போலவே மிஞ்சும். அப்படி தான் இந்நாவலை வாசிக்கும் போது கூட ஆரம்ப அத்தியாயங்களே யாருடைய வாழ்க்கையை நாம் படித்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நமக்கு விளங்க வைத்துவிடுகிறது. அதை புரிந்து நாம் மேற்கொண்டு படித்தோம் என்றால் ஒரு ராவான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்வோரின் பக்கங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எந்தவொரு நாவலை வாசிக்கும் போதும் நான் அதற்க்கு பிற எழுத்தாளுமைகள் (பிரபலங்கள்) எழுதிய மதிப்புரைகளை வாசிக்காமல், முழுநாவலையும் வாசித்துவிட்டு பின்னரே அவர்களின் கருத்துகளை வாசிப்பேன். அது இவ்வாசிப்பிலும் தொடர்ந்தது. ஒவ்வொரு சராசரி மனிதர்களுக்குள்ளும் குறிப்பிட்ட குற்றங்களுக்கான எல்லை இருக்கும், அதை அவர்களின் செயல்களில் தாண்டாமலும் பின்னர் மற்றோர் செய்வதில் கூட அவர்களுக்கு என்று கூட நாமே ஒரு எல்லை வைத்து கொள்ளுவோம்.அப்படி தான் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலை நம்பி இருக்கின்றனர்.

பிக்பாக்கெட் , விபச்சாரம் , குழந்தை கடத்தல் , போதை வஸ்த்து விற்பனை என்று போகின்றது. கொஞ்சமும் சமரசமின்றி தன்னுடைய எண்ணங்களை எழுத்தால் கொண்டு வந்து இருக்கின்றார் நாவலின் ஆசிரியர்.

சம்பத் செய்யும் செயல்கள் ஒருசிலருக்கு வாசிக்கும் போது அன்னியமாக வெறுப்பாக தோன்றும், இன்னும் சிலருக்கு மணியின் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும், இதை போல முத்துசெல்வி , செல்வி , தவுடு , கோபால் , ராஜீ, ஷிவானி , சேட்டு, சுந்தர் , சம்பத்தின் அம்மா , சோபி, இளவாஞ்சளின் என்று அவரவர்களின் மனதில் நாம் வகுத்து வைத்து உள்ள பிரிவின் படி அவர்களின் குற்றசெயல்கள் நமக்கு அருவெறுப்பாக ஏற்று கொள்ள முடியாமல் இருக்கும். எனக்கு அப்படி மிகவும் வக்கிரமாக மனதில் தோன்றியது ராஜீயின் செயல்கள் தான் எனக்கு அந்த பாத்திர படைப்பின் மேல் உச்சபட்ச்ச வெறுப்பை கொடுத்தது.இதை நாம் ஏற்று கொள்ளுவதை விட எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தான் நாவல் ஆசிரியரிடம் இருக்கின்றது என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.

நாவலிலேயே என்னை மிகவும் உருகவைத்தது ஆதம்மா என்று சிறுமியும் , ஆர்த்தி என்ற பெண் பாத்திரமும் தான். முதலில் பாகம் ஒன்றில் விறுவிறுப்பாக வாசித்து முடித்தவுடன் பாகம் இரண்டில் தொடங்குகிறது இந்த சிறுமியின் கதை, அவளின் கதை சில அத்தியாயங்களில் தொய்வாக செல்வது போல தோன்றியது பின்னர் சம்பத் குழந்தை கடத்தல் தொழிலுக்கு மாறும் பொழுது நெஞ்சில் ஒருவித படபடப்பு வந்துவிடுகிறது எங்கே இறுதியில் இந்த சிறுமியை கடத்துவது போல வந்துவிடுமோ என்று சினிமா போல நினைக்க தோன்றிவிட்டது ஆனால் அது போல் அல்லாமல் நாவலாசிரியரையே இறுதி வரை பின்தொடர்வது போல இருந்தது சிறப்பு .

வாசிக்கும் போதே எனக்கு உறுத்தியது ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வாசகனுக்கு கூறுவது போல இருந்தது(சம்பத்தின் தொழில் திறன் , ஆதம்மா விருப்ப விளையாட்டு இன்னும் சில ) , சில வார்த்தைகளை ஒரே பத்தியில் நான்கு , ஐந்து முறைகளுக்கு மேல் எடுத்து கூறியது போன்றவைகள் தான் உறுத்தலாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமும் இலக்கிய நடையில் முடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இறுதி பத்தியை எழுதியது போலவும் தோன்றியது.மணியின் கதை என்ன ஆனது சுந்தரிடம் மீண்டும் சம்பத் வந்தவுடன் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ??? , அளவுக்கு மீறிய காமம் என்பது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை அவர்களின் வாழ்வில் அவ்வாறு இருப்பது போலவே நினைத்து வாசித்தமையால் இருக்கும் போல எனக்கு.

லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு பாம்புகள் மீது அளவில்லா ப்ரியம் இருக்கும் போல முன்னர் அவரின் யாக்கை சிறுகதை தொகுப்பில் கூட ஒரு சிறுகதையில் முழுக்க ஸர்பங்களை மையபடுத்தியே இருந்தது, இந்நாவலில் கூட அந்த ஈர்ப்பு தெரிகின்றது. காமத்தில் திளைக்கும் போது கூட ஸர்பங்களை எடுத்து காட்டி கூறுகிறார்.

எனக்கு நாவலை வாசித்து முடித்தவுடன் தோன்றியது, வாசிக்கும் போதே இவ்வளவு சுவாரசியமாக இவர்களின் முகங்களை தேட தூண்டுகிறதே. இதை ஏன் ஒரு ராவான திரைப்படமாக எடுக்க கூடாது நல்ல கதாபாத்திர தேர்வுடன் சமரசமின்றி லக்ஷ்மி அவர்களே எடுத்தால் என்னவோ என்று தான் நினைத்தேன். யாருக்கு தெரியும் அவர் கூட நினைத்து இருப்பார்??? இயக்குனர் ஆக தானே முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார். வாழ்த்துக்கள் நண்பா 

5 comments:

  1. வாசிக்கற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போயி இப்போ சாகற நிலையில கெடக்குது.. :( ஏதோ உங்களால தான் இந்தமாதிரி புத்தகங்களை வாங்கி வாசிக்கனும்னு தோணுது.. கண்டிப்பா இதை வாங்கி படிக்க முயற்சி செய்றேன்.

    அதுசரி யாரிந்த லஷ்மி சரவணகுமார் ?

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் வாசித்துவிடுங்கள் , சினிமா பார்ப்பது போன்ற உணர்வு போல கூட இந்த நாவல் இருக்கும். இனி நிறைய நாவல் பற்றி பதிவிட போகிறேன் உஷார் நண்பா.

      லக்ஷ்மி சரவணகுமார் ஒரு இளமையான எழுத்தாளர்.இரண்டாவுது நாவல் வெளி வர போகின்றது , அவை அல்லாமல் சில சிறுகதை தொகுப்புகள் எழுதி உள்ளார். இணை இயக்குனராக வசந்தபாலனிடம் பணி புரிகின்றார். இயக்குனராக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்.

      Delete
    2. தமிழ் நாட்ல இருந்தா இன்னும் நிறைய வாங்கி படிக்கலாம் போல...

      Delete
  2. Replies
    1. விதை பதிப்பக வெளியீடு நண்பா , தங்கள் வருகைக்கு நன்றி

      Delete