Friday, 1 August 2014

ஜிகர்தண்டா - MASS + COOL

கடந்த மூன்று மாதங்களாக எத்தனை படம் பார்த்தாலும் அது பற்றி சிலாகித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை , இன்று படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் போட்ட டைட்டில்ஸ் போதும் அது பற்றியே நாலு பத்தி எழுதலாம் அந்தளவுக்கு  அதை ரசிக்க வைத்து விட்டார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இது நிச்சயம் மிக தைரியமான முயற்சி அதில் வெற்றி பெறுவது பார்வையாளர்களாகிய நம் கையில் தான் உள்ளது. நான் பார்த்த திரைஅரங்கில் என்ன மாதிரியான மனநிலையில் எல்லோரும் சென்றார்கள் என்பதை இறுதில் சொல்லுகிறேன்.


குறும்பட போட்டியில் தோற்றவனுக்கு அம்மேடையிலையே முழுநீள திரைப்படம் எடுக்க வாய்ப்பு வருகிறது, அதற்காக அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறானா என்பதே கதை,எப்பொழுதும் கதை சொல்லுவது எனக்கு பிடிக்காது என்றாலும் இப்படம் பற்றி கூறும்பொழுது கதை ஒரு விஷயமே இல்லை என்பதால் தான் கூறுகிறேன்.முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படைப்பு. கதாபாத்திரங்களின்  தேர்வு , காட்சி நேர்த்தி , இசை , கலை , எடிட்டிங் என்று மிக கச்சிதமாக வேலை வாங்கி உள்ளார்.

சித்தார்த் இந்த படத்தில் நடிக்க ஒற்று கொண்டதற்கே அவரை பாராட்டலாம் , அவரைவிட மற்றவர்களுக்கு தான் இப்படத்தில் நிறைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ளது. லக்ஷ்மி மேனன் மேக் அப் இல்லாமல் பார்க்க சகிக்கவில்லை, கலகலப்பாக சென்று கொண்டு இருக்கும் காட்சிகளில் இவர்களின் காட்சிகள் தான் பெருந்தடையாக இருந்தது இறுதிவரை.


சிம்ஹா அசால்ட் சேதுவாக  சும்மா சிங்கம் போல நடிச்சு இருக்கார் , அரங்கம் அதிர்கின்றது முதல் பாதியில்  அவரின் காட்சிகளுக்கு, அதுவும் சேதுவை போட வந்தவன் தவறுதலாக இன்னொருவனை போடும் காட்சியில் பின்னணியில் அதை சேது காணும் பொழுது பின்னணி இசையோடு சேதுவின் பார்வையில் செம்ம கெத்து சீன , அதுபோல அவரின் வீட்டில் கொலை செய்துவிட்டு பின்னர் போலீசிடம் பேசி கொண்டு இருப்பது என்று முதல்பாதி முழுக்க அவரின் ராஜாங்கமே அதுவும் இடைவேளை ட்விஸ்ட். கிளாஸ் பிளஸ் மாஸ் படம் டோய் என்று எல்லோரும் கைதட்டி கொண்டே சென்றனர்.

இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாம் நிமிடம் படம் அப்படியே வேறுஒரு கோணத்திற்கு செல்ல தொடங்கிவிட்டது சிறிது நேரம் முதல் பாதியில் இருந்த அந்த ஆர்வம் இதை ஏற்று தயங்கினாலும் பின்னர் இயக்குனரின் கைவண்ணத்தில் அதனுள்ளும் நம்மை இழுத்து கொண்டு சென்று விடுகிறார். அது தான் படத்தின் சிறப்பே.

ஊரணி என்று வரும் கருணாகரன் படத்திற்கு படம் பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கின்றார். படம் முழுக்க ஹீரோவுடன் வந்து நிஜமாகவே செகண்ட் ஹீரோ கூடியவிரைவில் ஆகிவிடுவார் போல. அதுவும் அவர் கனவு கண்டு பதறும் காட்சிகள் , அடியாட்களுக்கு எப்படி மிரட்ட வேண்டும் என்று டிப்ஸ் தரும் காட்சி , நடிப்பு கற்று கொள்ளும் இடங்கள் எல்லாம் அரங்கில் சிரிப்பதிர்வு அடங்க பல நிமிடங்கள் ஆனது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு வழியை  தமிழ் சினிமாவிற்கு வகுத்துள்ளார். சேதுவிற்கு போடும் பின்னணி இசை அட்டகாசம் அதே போல இடைவேளைக்கு முன் நடக்கும் செம்ம ட்விஸ்ட் காட்சிகளுக்கும் அஃதே. படம் முழுக்க பின்னணி இசை பின்னி பிடலேடுக்கின்றது. அதிலும் பாண்டிநாட்டு கொடியின் மேலே பாடல் இந்த ஆண்டின் சிறந்த குத்து சாங்.

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் A FILM BY KARTHIK SUBBURAJ  என்று போட்டு கொள்ள முழுதகுதியானவர். கடைசி அரை மணி நேரம் பார்வையாளர்களின் எண்ணங்களை திரையில் கொண்டு வராமல் தன்னுடைய படம் என்று காட்சிகளால் அழுத்தமாக புரியவைத்துவிட்டார். படம் நல்ல வெற்றி பெற்றால் (???) நிச்சயம் அவரின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியே.


எப்பொழுதுமே ஒரு படத்தின் உண்மையான  வெற்றி இறுதியில் போடப்படும் இயக்குனரின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டலே, இங்கே இன்று நான் கண்ட இரவுக்காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் பெயருக்கு இறுதியில் அரங்கம் அதிர கைதட்டல் கிடைத்தது. இது போல நம்ம ஊரிலும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராவலுடன் இருக்கின்றேன்.