Sunday 20 October 2013

முதல் முயற்சியும் என்னுடைய தேர்வும் -1


எப்பொழுதும்  நான் நினைக்கும் & எதிர்பார்க்கும்  ஒரு படம் வெளியாகி அதை குறைந்தது 3 நாட்களுக்குள் எப்படியாவது பார்த்தால் தான், என் மனம் நிம்மதி அடையும் , அதற்காக எந்த ஒரு படத்தையும் என்று கூற முடியாது வெளியாகும் படங்களின் தன்மைகளை பொருத்து  அமையும்.
 வெளியாகும் முன் தமிழ் திரைப்படங்களை என்னளவில்  ஒரு மதிப்பீடு செய்து கொள்ள முடியும், அது அந்த படங்களின் தொழில்நுட்பம் புரியும் நபர்களை முதன்மையாக கொண்டு முக்கியமாக இயக்குனரின் முன் வெளியான படங்களை கண்டு. ஆனால் இவைகளை தாண்டி புதிய படைப்புகளில் அதை வரவேற்க மிகவும் ஆர்வம் கொள்வேன் பல படங்களை அது போல என் விவரம் எட்டி நானாக முதல் நாள் சென்று பல படங்கள் பார்த்துள்ளேன், அவைகளில் பெரும் வெற்றி பெற்றும் உள்ளது (சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு , வெயில் .....) பலர் சில படங்களை  அப்பொழுது விட்டு இப்பொழுது கொண்டாடி கொண்டும் உள்ளனர் (சில படங்கள் மொக்கை வாங்கியும் உள்ளேன் ) . குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் அவ்வாறு செய்து நான் முதல் நாள் கண்ட படம் மூடர் கூடம்  அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட ஆரண்யகாண்டம் . இந்த இரண்டு படங்களையும் ஏன் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால் இந்த படங்கள் தமிழ் திரைஉலகின் முத்துகள் வேறு தளத்திற்கு கொண்டு சென்றவை. முழுக்க முழுக்க புதுமுகங்களால் புது முயற்சியில் எடுக்கப்பட்டு  புதிய அனுபவம் தந்தது என்னை சிறிதும் ஏமாற்றம் அடையசெய்யவில்லை. இப்படிப்பட்ட தமிழ் திரை உலகின் பெருமைமிகு படைப்புகளை திரை ரசிகனாக முதல் நாள் கண்டேன் என்பதில் எனக்குள் ஓர் பெரும் மகிழ்ச்சி.

அதுபோலவே இப்பொழுது புது முயற்சி கொண்டு வெளிவர போகும்
"சுட்ட கதை" படமும் என்னுடைய எதிர்ப்பார்ப்பில் நிச்சயம் குறைவைக்காது என்றே நம்புகிறேன்.

ஆரண்யகாண்டம் , மூடர் கூடம் எவ்வாறு மதிப்பீடு செய்து  சென்றேன் என்றும் , இப்பொழுது சுட்ட கதை என்ன எதிர்பார்ப்பில் உள்ளேன் ??? ஏன் ??? என்று உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஆரண்யகாண்டம்  -

ஆரண்யகாண்டம்  படம் வருவதற்கு முன் அந்த படத்தை பற்றி எந்தவொரு நுட்பமான  செய்தியும்  தெரியாது. யுவன் இசை , சரண் தயாரிப்பு இவ்வளவு தான் தெரியும்.யுவனின் இதுபோன்ற முதல்முறை ஒரு இயக்குனர் உடன்  பணியாற்றும் பொழுது மிக அருமையாக தன்னால் ஆன முழு உழைப்பையும் தந்து இருப்பார். அவரின் பல வெற்றி படங்களின் இசைகளை சர்வசாதரணமாக இதுபோல வரும் புது இயக்குனர்களின் முதல் படத்தில் கண்டுவிடலாம், (பதினாறு , காதல் சொல்ல வந்தேன் (யுவனிடம் முதல் முறை) , பானா காத்தாடி, தீராத விளையாட்டு பிள்ளை , வாமணன், சிவா மனசுல சக்தி ) இந்த படங்கள் பெரும்பாலும் முற்றிலும் இவர்களின் முதல் படைப்பு இதில் படம் தோற்றாலும் , யுவனின் இசை வெற்றியே ஆகையாலே யுவன் இசை என்றால் ஓர் எதிர்பார்ப்பு என்னிடம் உண்டு. இது முதல் காரணம்.


 ஆரண்யகண்டம் படத்தை காண வேண்டும் என்பதற்கு.
இதை போலவே தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்றால் அவரின் படங்களும் அதுவரையில் எதிர்ப்பார்ப்புடன் தானே இருந்தது , இதே இந்த இருவர்களை  நம்பி சென்று ஏமாந்தேன் (அதிலும் யுவனின் இசை நிறைவு செய்தது குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் ).  அதற்காக எல்லாம் ஒரு படைப்பாளியை தவிர்த்து விட கூடாது என்பது என்னுடைய கருத்து.

இவைகளை தாண்டி இப்படத்தின் முன்னோட்டம் கண்டவுடன் முடிவே செய்து விட்டேன் , அதில் அத்தனை ஒரு புதுமை இயக்குனரின் வெளிப்பாட்டை  முன்னோட்டத்தில் கண்டவுடனே பிடித்து விட்டது . அவரின் திரை மொழி அவ்வளவு ஈர்த்தது என்னை.
 ஆரண்யகாண்டம் பற்றிய என் சிறு பார்வையை இந்த இணைப்பில் காணலாம்  http://arjiththala.blogspot.sg/2013/08/blog-post.html

மூடர் கூடம் -


இந்த படமும் ஆரம்பம் முதல் பசங்க பாண்டிராஜ் வெளியீடு என்றே விளம்பரபடுத்தியதில் தான் நான் இதை பின் தொடர்ந்தேன். அதுவரையில் வந்திருந்த பாண்டிராஜின் அனைத்து திரைப்படங்களையும் முழுமையாக உள்வாங்கி இருந்தேன் , வம்சம் படத்தில் கூட என்னை மிக கவர்ந்தது அந்த இடத்தின் நேடிவிடியை அப்படியே அச்சு அசலாக காட்டி இருப்பார், அது உண்மை என்றும் பல நண்பர்கள் கூறும் போதே ஆச்சிரியம் அடைந்தேன். அதனால் இவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என்று மனதார நம்பினேன்.

என்னுடைய அந்த நினைப்பை அப்படியே இன்னும் அதிகமாக்கியது படத்தின் முதல் முன்னோட்டம் அதில் வேறு எதுவும் இடம் பெறாது மூடர் கூடம் என்றால் என்ன என்று ? பொது மக்களிடம் கேட்க பட்டு இருக்கும் அதுக்கு அவரவர் சொல்லும் பதில்கள் இன்றைய நம் ஊரின் தமிழ் மொழியின் நிலையை நமக்கு கூறாமல் நம்  பொட்டில் அடித்தது போல இருக்கும். அடுத்து அடுத்து இதே போல வந்த முன்னோட்டங்களும் மொழிபற்றை வலுவாக கூறுவது போல இருந்து இறுதியில் அவர்கள் ஏதோ திட்டம் போடுறாங்க அது என்ன போல வைத்து அதில் இடம் பெரும் வசன உச்சரிப்பு அப்பொழுதே ஒரு வித புதுமையை உணர்த்தியது.

படமும் எதை நம்பி போனேனோ அதை வட்டியும் முதலுமாக எனக்கு தந்தது , என் ரசனையின் தன்மையை இன்னும் மெருகு ஏற்றியது.

மூடர் கூடம் பற்றிய என் விரிவான பார்வையை இந்த இணைப்பில் காணலாம் http://arjiththala.blogspot.sg/2013/09/blog-post_14.html


சுட்ட கதை -


சுட்ட கதை வரும் 25ம் தேதி வெளியாகின்றது , இப்படம் முழுக்க புதியவர்களின் முயற்சி தான் மேற்கூறிய படங்களை போலவே ,படத்தின் மேகிங் கூட புதியதாக இருக்கும் என்று தெரிகிறது இவர்களின் முன்னோட்டம் மற்றும் விளம்பரம் செய்யும் யுக்தி இவைகளை கண்டால்.

இப்படத்தின் முன்னோட்டத்தை காண இந்த இணைப்பை காணுங்கள்
http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o
http://www.youtube.com/watch?v=E1Pcxlh7kNk
http://www.youtube.com/watch?v=7Ymsp4edrjY
http://www.youtube.com/watch?v=NkzkWwlgTS8

இப்படத்தின் விளம்பர முறையை காண இந்த இணைப்பை காணுங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zTfa6HHEPJQ

பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் தொலைகாட்சிகளில் கூவி கூவி விற்கும் ஆண்மை மருந்து என்று அலப்பறை செய்வோரை மேற்கண்ட விடியோவில் கலாய்த்து எடுத்து விட்டனர்.இதுவே இப்படி என்றால்  படத்தில் இது போல இன்னும் எதை எல்லாம் துவம்சமோ , இதுவே சொல்லுகிறது இப்படத்தின் புது முயற்சியை.

இவைகளை பார்க்கும் போதே நிச்சயம் புதிய அனுபவம் தரும் என்ற நம்பிக்கை தருகின்றது ,மேலும் படத்தை பற்றி வரும் முன் செய்திகள் கூட எல்லோரையும் கவரும் விதமாகவே வருகின்றது.
விரிவான "சுட்ட கதை"யின் முன்னோட்டம் என் பார்வையில் இந்த இணைப்பை பாருங்கள் http://arjiththala.blogspot.sg/2013/10/blog-post_15.html

இது போல மதிப்பீடு செய்து நானும் இது போன்ற படங்களை  முதல் கண்டு நமக்குள் நெகிழ்ச்சி மற்றும்  மகிழ்ச்சி அடைந்து கொண்டு அதை மற்றவர்களிடம்  கொண்டு செல்கையில் வரும்  ஓர்விதமான  பெருமிதம் அவ்வளவே. நல்ல படைப்புகளை நாமும் கண்டு அதை வரவேற்கின்றோம் என்ற நப்பாசை. அதனாலே அடுத்த புது முயற்சி கொண்ட படம் என்ற நினைப்பிலும் புதியவர்களை வரவேற்க வேண்டியும் சுட்ட கதை படத்தை எதிர்பார்த்து உள்ளேன். இது போல பெரும்பாலும் முதல் படைப்பாளிகளை கண்டு பிடித்து அவர்களின் திறமையை எளிதில் உணர்ந்து விடலாம் ஆனால் வழக்கமாக நற்பெயருடன் இருக்கும் சிறந்த இயக்குனர்களை நம்பி தான் பல முறை ஏமாந்து விடுவோம். அது பற்றிய விவரங்களை பின்னர் காண்போம்.

Tuesday 15 October 2013

சுட்ட கதை - முன்னோட்டம் என் பார்வையில்




பெரும்பாலும் இந்த வருடத்தில்  கலை ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது திரைப்படங்களின் வருகைகள் ஆகஸ்ட் மாதம் வரையில் அதன் பிறகு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ஆதலால் காதல் செய்வீர் முதல் தங்கமீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் , மூடர் கூடம் , ஓநாயும் ஆடுகுட்டியும் என்று எதிர் விமர்சனகளை விஞ்சி வசூலில் இவைகளில் சில வெற்றி பெற்றும்  பெரும்பாலனோர் நெஞ்சில் பதிந்தது இப்படங்கள் அந்த வரிசையில் அப்பொழுதே ஆகஸ்ட் மாதமே வெளிவரவேண்டிய இப்படமும் பெரும் இடையுறுக்கு பிறகு வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகின்றது. "சுட்ட கதை" .

ஒரே வாரம் அக்டோபர் 25க்கும் தீபாவளி திரைப்படங்களின் வருகைக்கும் ஆன இடைவெளி. வெறும் 7 நாட்களை நம்பி இக்கால சூழலில் திரைரசிகர்களை மட்டுமே நம்பி வெளிவரும் இப்படத்தை , எல்லோரும் நிச்சயம் திரை அரங்கில் பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டும்.இதுபோன்ற புது முயற்சி கொன்ற திரைப்படங்களை வரவேற்கும் பட்சத்தில்  , நம் திரை உலகமும் மென்மேலும் வளரும் புது புது வகைகளான திரைப்படங்களையும் நாம் காண முடியும்.

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் வெளிவர இருக்கும் இப்படத்தின் "சுட்ட கதை " முன்னோட்டம் காண கீழே உள்ள இணைப்பை காணுங்கள்

http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o

இந்த முன்னோட்டத்தை கண்ட பொழுதே எனக்கு இப்படத்தின் மேல் ஓர் எதிர்பார்ப்பு வந்து விட்டது. புதியவர் சுப்பு அவர்கள் எழுதி இயக்க ஏனைய அனைத்து திரை மறைவு உழைப்பை தந்தவர்களும் புதியவர்களே . இப்படமே அவர்களுக்கு முகவரியாய் இருக்க போகின்றது. முதன்மை காதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் இப்படமே நல்ல முகவரியாய் இருக்க போகின்றது.

 கதை என்று என்னால் யூகிக்க முடிந்த வரையில் கொலை வழக்கை விசாரிப்பது அதை பற்றிய கண்டு பிடிப்பு என்றே முன்னோட்டம் காண்பதில் என் பார்வைக்கு புரிபடுகின்றது. அதுவும் அக்கொலை சுட்டு கொல்லப்பட்டு இருக்கும் போல அதனாலோ என்னவோ சுட்ட கதை என்று தலைப்பு இவ்வாறே யூகிக்கின்றேன். நிச்சயம் இது முது மாதிரியான முயற்சி என்பதை மேற் கூறிய என் கருத்தையும் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தலுமே புரிந்துவிடும்.


இவைகள் விடுத்து இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை பார்க்கும் பொழுதே என் நம்பிக்கை நிச்சயம் பொய்த்தல் ஆகாது  என்றே தோன்றுகிறது . நாசர் , ஜெயப்ரகாஷ் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் , எம்.எஸ் . பாஸ்கர் இவர்களின் தேர்வும் இவர்களின் முன்னைய திரைப்படங்களின் பங்களிப்புகளும் பெரும்பாலானவை எல்லோராலும் போற்றபட்டவையே. ஆகையாலே என்னால் உறுதியாக இப்படத்தை நம்ப முடிகின்றது.

இதுபோன்ற புதுவகையான  திரைப்படங்களை நாம் எப்பொழுதும் வரவேற்க மறந்து பின் வழக்கம் போல வெட்டி கதை பேசுவதை விடுத்து , சுட்ட கதை படத்தையாவுது திரை அரங்கில் சென்று கண்டு புதியவர்களின் முயற்சிக்கு கைகொடுப்போம் அதுவும் அக்டோபர் 31 தலயின்  ஆரம்பம்  வெளியீடு என்று குறிக்கொண்டு இருக்கும் நிலையில் வெறும் ஏழு நாட்களை நம்பி நம்மை போன்ற திரை ரசிகர்களை நம்பி வெளியீட படும் "சுட்ட கதை" படத்தை நிச்சயம் வெற்றி படம் ஆக்க வேண்டும்.

" நம்பி வாங்க நிச்சயம் நிறைவா போவீங்க"

Sunday 13 October 2013

"க்ராவிடி" (GRAVITY) - சாகச அனுபவம்

போனவாரம் வெளியான ரெண்டு தமிழ் படமும் (வணக்கம் சென்னை & நய்யாண்டி ) வெளியாவதற்கு முன்னேயே அதை பற்றிய என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது இப்பொழுது வெளியானதுக்கு பிறகு, ஆனா அதுலையும் வணக்கம் சென்னை வம்படியாக போகி மொக்கை வாங்குனேன். அந்த சோகத்த எப்படிடா போக்குறதுனு நினைச்சிட்டு இருந்தப்போ, நாமலும் ரெம்ப நாள் ஆச்சு திரைஅரங்கில் ஹாலிவுட் படம் பார்த்து , இங்கையும் சில நண்பர்கள் சொல்லிடே இருந்தாங்க கடந்த இரண்டு வாரமாக படம் மிக அருமையாக இருக்குது பாருங்க என்று,  அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம குழு (https://www.facebook.com/groups/ThirstForCinemas)  திரைப்படங்கள் பற்றி விவாதிக்க கூடிய அருமையான களம் எந்த நாட்டு படமும்   என்ன மொழிப் படமும் பற்றி முழுமையா தெரிஞ்சிக்கலாம். அப்படி அவுங்கட்ட கேட்டா இதலாம் இப்படி கேட்ககூடாது போய்  பார்த்துட்டு வந்து சொல்லணும் அப்படின்னு நமக்கு  இன்னும் ஹைப் ஏற்றி விட கண்டிப்பா போய்டனும்னு, போயாச்சு.          "க்ராவிடி" (GRAVITY)


பெரும்பாலும் நான் என்னோட திரைப்படம் பற்றிய பார்வையை தெரிவிக்கும் போது அந்த படத்தின் தன்மையை பொருத்து கதை சொல்லி தெரிவிப்பதும் இல்லை சொல்லாமல் கூறுவதும் அமையும். அதே போல இந்த படத்தின் கதை வெறும் இரண்டு வரி என்பதால் நிச்சயம் சொல்லிடவேண்டும் அப்படி சொல்லாம எனக்கு ஹாலிவுட் படம்  விவரிக்க வாராது அது வேற விஷயம். அதனால நாம நேரடிய கதைக்கு போவோம்

விண்வெளியில்  இன்ஜினியர் ஸான்திரா , விண்வெளி வீரர் ஜார்ஜ் க்ளூனி இருவரும் விபத்துக்குள்ளாகின்றனர், தப்பித்து இவர்கள் தரை இறங்கினார்களா என்பது தான் கதை.

90நிமிடங்கள் இதை எவ்வளவு சுவாரசியமாக ,  பார்வையாளர்களை  எந்தளவுக்கு பரவசம் தர முடியுமோ அதை அப்படியே நமக்கு தந்து உள்ளனர். படம் முழுக்க இந்த இருவர் மட்டுமே வேறு எவரையும் ஒப்புக்கு கூட காட்டவில்லை , முழுக்க முழுக்க விண்வெளியில், இன்னொரு உலகம் என்பதை கண்ட பரவசம் படத்தை காணும் பொழுது உணர முடிந்தது.


படத்தின் என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது பல காட்சிகள்.

இன்ஜினியர் ஸான்திரா விண்கலம் வெளியில் பிடிப்பு இன்றி தடுமாறிக்கொண்டு இருக்கும் பொழுது இவரை ஜார்ஜ் க்ளூனி காப்பாற்றும் உதவும் காட்சி என்னை சீட் நுனிக்கு கொண்டு வந்து விட்டது.

அதே போல விண்வெளியில்  நிறைய கோள்கள் நட்சத்திரம் சில கற்கள் ஏதோ பாய்ந்து வருவது போல நம்மை உணரவைத்து பின் மெல்ல மெல்ல வர வர அது அந்த இரு வீரர்கள் தான் என்று தெரியும் பொழுது , என்னமா எடுத்துருக்காய்ங்க என்று ஆச்சிரியபடாமல் இருக்க முடியவில்லை.

இன்ஜினியர் ஸான்திரா தன்னந்தனியாக தடுமாறிக்கொண்டு எப்படியாவது விண்கலம் உள்ளே சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கும் காட்சிபொழுது  எதிர்ப்பார்ப்பு நமக்கும் உள்ளே செல்ல வேண்டும் என்று நம்மை அறியாமல் தொற்றிக்கொள்ளும்.

விண்கலத்தின் உள்ளே நுழைந்தவுடன் அவளின் படபடப்பு , உடற்கவசங்களை அவிழ்க்கும் பொழுது அப்படியே விசையில் தவழ்ந்து கொண்டே அனைத்தையும் விடுவிக்கும் முறை , இப்படி தான் விண்வெளியில் இருப்பார்கள் என்றே முடிவு செய்தேன்.

விண்கலத்தின் உள்ளே  ஸான்திரா தன் நிலைமையை நினைத்து கலங்குமிடம் அவளின் கண்ணீர்துளிகள் அங்கே அப்படியே விளாமல் பறக்கும் பொழுது அதை காட்சிபடுத்திய விதம்வியப்பில் மூழ்கிவிட்டேன்.

விண்வெளி , விண்கலம் அங்கே என்ன உணர்வான ஒலி  ஒளி இருக்குமோ இப்படி தான் இருக்கும் என்றே என்னை பரவசபடுத்தியது.அதிலும் ஸ்பேஸ் வெளியில் இருக்கும் பொழுது அந்த கவசங்களை உடன் அணிந்து பேசும் பொழுதும் , அதே அவர்கள் விண்கலம் உள்ளே பேசும்பொழுது வெளியில் கேட்பது எவ்வளவு நுட்பமாக பணியாற்றி உள்ளனர் என்பது பளிச்சிடுகின்றது.

வெறும் இரண்டு கதாபாத்திரங்கள் அதிலும் ஒருவர் மட்டுமே குறைந்தது 50 நிமிடங்கள் வருகிறார் , அதை காணும் நமக்கு எந்தவொரு சலிப்பும் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் பரவசமாக்குகிறது க்ராவிடி . இதன் கிரியேடிவிட்டி அல்போன்சோ இவருக்கு என்னா அறிவு என்னா மூலை.


சகச பயணம் விரும்புவோர் , விண்வெளி பற்றிய தகவல்கள் விரும்புவோர் , விண்வெளியில் பயணிக்க விரும்புவோர் நிச்சயம் இந்த படத்தை தவிர்க்க விட கூடாது. நுட்பமான பல அறிவியல் பூர்வமான விஷயங்களை கையாண்டு மிக சிறப்பாக வெளி கண்டுள்ளது.

90 நிமிடங்கள் படம் முடிந்து என் இருக்கையை விட்டு நான் எழுந்து வெளியில் வந்த பொழுது , விண்கலத்தில் இருந்து பூமிக்கு வந்து நடக்க முடியாமல் தவழும் பொழுது சிரித்து கொண்டே ஓர் உணர்ச்சியை வெளிக்காட்டும் உணர்வு படத்தில் வருவது போல  எனக்கும் தந்தது  அதுவரை நானும் அவர்களோடு பயணித்த உணர்வு. வேறுஒரு உலகத்தில் பயணித்த அனுபவம் இந்த படம் உறுதியாக தரும். தவறவிடாமல் அனைவரும் நல்ல திரை அரங்கில் சென்று காணுங்கள்.

பின்குறிப்பு:

1.ஒலி  ,ஒளி   சிறப்பு மற்றும் இதர பல விஷயங்களுக்காக I-max 3D தான் சிறந்தது என்று அங்கேயே போய்ட்டேன்.மிக அருமையாக உணர முடிந்தது அதுவும் பல காட்சிகள் கையை இருக்க கட்டிகிட்டேன்.

2. இது தான் முதல் முறை ஒரு வேற்று மொழி படத்த பற்றி நான் எழுதுவது. அதனால குறை இருந்தா ப்ரீயா விடுங்க , சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.

         

Thursday 10 October 2013

இவரின் படங்களில் கற்றேன் பல

கல்லூரி வாழ்க்கை ஓவ்வொரு மாணவர்களுக்கும் அது போல் ஒரு ஆனந்தமான சூழல் வாழ்வில் கிடைப்பது மிகவும் அரிது, தன்னுடைய முழுமையான தேடலை தொடங்கும் காலம் அதில் பலர் வெற்றி தோல்வி என்று அடைந்தாலும் எல்லோரும் நிச்சயம் பெறுவது வாழ்க்கைக்கான மிக பெரிய பாடம் அனுபவம் , அந்த அனுபவ  சூழலே பின் வரும்  மிக பெரிய இடையூறுகளை எளிதாக கையாள கற்று தந்து இருக்கும். அந்த அனுபவம் உன்னாலும் உனக்கு கிடைக்கும் , உன் நண்பனாலும் உனக்கு கிடைக்கும் ,  உன் வாசிப்பாலும் உனக்கு  கிடைக்கும் , நண்பர்களோடு நீ செல்லும் திரைபடங்களாலும் கிடைக்கும். இவைகளின் அனுபவங்கள் எப்பொழுதும் கிடைக்குமே என்று நீங்கள் நினைத்தால் , எங்கே கிடைத்தாலும் இந்த சுழல் போல கிடைக்காது. இன்னும் நன்றாக சொல்ல போனால் என்னுடைய தற்பொழுதைய நிலை கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இன்றும் நான் என்னுடைய பல கடினமான சுழலில் அந்த அனுபவத்தை எடுத்து கொண்டே செல்லுகிறேன்  என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுபோல் அப்பொழுது நண்பர்களோடு அன்று பல திரைப்படங்கள் சென்று இருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் அன்றும்  இன்றும் என்றும் நிறைய கற்று கொடுத்த ஒரே திரைப்படம் இது மட்டும் தான் , எங்களின் சில தவறுகளை , நாங்கள் மறந்ததை எங்களுக்கு நினைவூட்டியது அதிகம் இந்த திரைப்படமே. இப்படம் மூலமாகவே எனக்கு கிடைத்த இன்னுமொரு மிக பெரிய பொக்கிஷம் அந்த இயக்குனர்.

இயக்குனர் ராம் "கற்றது தமிழ்" இத்திரைப்படம் தான் என்றும் கற்க நிறைய உதவி புரிகின்றது.


கற்றது தமிழ் படம் பார்த்து முடித்தவுடன் குறைந்தது மூன்று நாட்கள் நிம்மதியாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எல்லாவகையிலும் இப்படமே நினைவில் வந்து மிகவும் ஒரு ரண வேதனை ஆக்கியது. நண்பர்களுடன் இப்படத்தை பற்றி கலந்து ஆலோசிக்கும் போதும் பலவகையான விஷயங்களை பற்றிய பேச்சுகள் நீளும். எங்களுக்கு தெரியாதவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை இது தந்தது.

பொறியியல் படித்து கொண்டு இருந்த எங்களுக்கு எங்கள் நண்பர்கள் என் கல்லூரியில் ஏன் இன்றும் பலதரப்பட்ட மக்களிடம் சிவில் இன்ஜினியரிங் என்று கூறினால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக தான் காணுவார்கள். அதை ஒரு பிரிவு என்று ஏற்று கொள்ள கூட தயங்குவது நான் அதிகம் கண்டது (ஆனா உலக அளவில் அதற்கான மதிப்பு இன்று கண் கூட உணர்கிறேன்) . அதே போன்று தமிழ் மொழி படித்தவர்களின் வலிகளை காணும் போது எங்களையும் அறியாமல் பயந்தோம்.


உலகமயமாக்குதல் என்றால் என்ன என்பதின் உண்மை அர்த்தத்தை இந்த படத்தின் மூலமே கற்றோம்.

 ஒவ்வொரு மக்களும் தன் நாட்டின் ஏற்ற இறக்க பொருளாதார நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது.

நாட்டின் உணமையான வளர்ச்சி என்பது எதில் உள்ளது என்பதை எடுத்து கூறியது.

எந்த படிப்பு  படித்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து உரைத்தது.

தனிப்பட்ட சந்தோசம் மற்றவரின் இடையூறுகளை எப்படி பெற்று தரும் என்று விளக்கியது.

இவைகள் எல்லோரின் வாழ்விற்கும் மிக அத்தியாவசிய தேவைகள். திரைப்படமாக குறைகளை தாண்டியும் இது பாதுகாக்க வேண்டிய முக்கியமான திரைப்படம்.

தற்பொழுது வெளிவந்த தங்கமீன்கள் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.


அடுத்து அவரின் வெளியீடாக வரபோகும் தரமணி இப்பொழுதே எனக்குள் மிகபெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையில் எதை குறை யாரால் அதிகம்  அவதி என்று கூறினாரோ. இப்பொழுது அவர்களின் காதலை கதையை கூறபோகிறார். அவர்களின் பக்கம் இருக்க போகும் நியாயத்தை எடுத்து கூறுவார் என்று நினைக்கின்றேன்.என்னை பொருத்தவரை அவரின் படத்தில் எதை தெரிந்து கொள்ள போகின்றேன் என்ற ஆர்வம் தான் இருக்கும். அதே போல தரமணி படத்திலும் எதை கற்க போகின்றேன் என்று எதிர்பார்த்துகொண்டே இருப்பேன்.

இயக்குனரின் ராமின் திரைப்படத்தை ஒரு முறை நீங்கள் கண்டால் இருபது சிறுகதைகள் வாசித்த உணர்வும் அல்லது ஒரு நாவல் வாசித்தது போலவும் நிச்சயம் உணர முடியும்.அவ்வளவு நேர்த்தியாக பல காட்சிகள் ஏன் முடிகிறது என்ற ஆதங்கம் தரும். இவர் படங்களில் வரும் காட்சி படுத்தும் இடங்கள் கூட பல கதைகள் பேசும். ஒரு பழமொழி சொல்லுவாங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று அதுபோல ராம் அவர்களின் படத்தின் தரம் இவர் தேர்வு செய்யும் இடங்களிலேயே தெரிந்து விடும் போல. என்னுடைய ஆசையும் , சிறந்த உணர்வுபூர்வமான , அத்தியாவசிய அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய  நாவல் ஒன்றை ராம் அவர்கள் திரைப்படமாக நமக்கு தர வேண்டும். அதையும் கற்க வேண்டும்.


திரைப்படம் என்பது திரைபாடமாக இருக்கும்பச்சத்தில் அது எத்தனை காலம் ஆனாலும்  அந்த படைப்பிற்கு அழிவு இல்லை. பிரபாகரன்,ஆனந்தி , தமிழ் வாத்தியார், செல்லம்மாள்,கல்யாணி,எவிட்டா மிஸ் இவர்களுக்கும் இவர்களின் கதைகளுக்கும் (கற்றது தமிழ் & தங்க மீன்கள்)  என்றும் அழிவே இல்லை.இன்னும் பல லட்சம் நபர்கள் இவர்களை கற்க வேண்டும்.

என்னை கவர்ந்த இயக்குனர் ராமிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

Friday 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)

Thursday 3 October 2013

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா -

எவுளோ பெரிய பேரு எழுதவே அவ்வளோ நேரம் ஆகுது, எல்லாரும் விஜய்சேதுபதி படம் என்று பெரிய வரவேற்ப்பு கொடுக்க , அவரும் இதுவரை இயக்குனரின் நாயகனாகவே வெளிப்பட்டு கொண்டு இருக்க, ஸ்டுடியோ 9 வெளியிடும் படங்கள் வேறு தேர்ந்து எடுத்து வந்து கொண்டு இருப்பதாலும் , ரௌத்திரம் பட இயக்குனர் என்பதில் மட்டும் கொஞ்சம் பயந்துட்டே தான் நேற்று படத்துக்கு போனேன்.


விஜய்சேதுபதி வழக்கம் போல வேறு ஒரு புதியமுகமாக இதில் தெரிகிறார் , அது தான் அவருடைய மிகபெரிய ப்ளஸ். ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய படங்கள் நினைவில் வரவில்லை. சும்மார் மூஞ்சி குமாரு என்று புகுந்து லந்து பண்ணி இருக்கார் அவர் வருகின்ற அனைத்து காட்சிகளுக்கும் , பேசுகின்ற அனைத்து வசனங்களுக்கும்  விசில் பறக்கின்றது. நிச்சயம்  இவரின் அடுத்த அடுத்த படங்களும் பெரும் வரவேற்ப்பு இருக்க தான் போகின்றது.

பசுபதி (அண்ணாச்சி ) நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது முதல் பாதியில் வி.சே வுடன் சேர்ந்து கொண்டு கல கலக்குகிறார் ஆனால் இரண்டாம் பாதியில் ஒப்புக்கு கூட ஒரு காட்சியில்  இல்லை.

நந்திதா குமுதவாக கிறங்கடிக்க வைக்கிறார் சுமார் மூஞ்சி குமாரை , அந்த பாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து உள்ளார் ஆனால் ஒரே விதமான பாவனைகள் தான் படம் முழுக்க இவரிடம். குமுதா ஹாப்பி தான்பா


பாலா - சுவாதி இவர்கள் ஜோடியாக தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு இருக்கும் , அவ்வப்போது இவர்களின் பகுதியில் வரும் பாஸ்கரின்   காட்சிகள் தள்ளி கொண்டு இவர்களை கரை சேர்க்கும், ஆனால் இரண்டாம் பாதி இவர்களுக்காகவே கதை நகரும். சுப்ரமணியபுரம் சுவாதியா இது என்று சில காட்சிகளில் வியக்க வைத்தார் , பாலாவின் குடி அரட்டைகள் போர் ராகம்.

சிலநேரமே வந்தாலும் செம்மையா ஸ்கோர் பண்ணிருக்கார் சூரி , எத்தனை எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ் , கண்டிப்பா இவரோட போர்ஷன் சிரிக்காம இருக்க முடியாது குறிப்பா இஷ்க் இஷ்க் ஷாஆஆஆஆஆ  அந்த காட்சி அப்டி தான் இருக்கும்.

படத்தின் இடைவேளைவரை கொஞ்சம் அலுப்பாகவும் ஒரு சில காட்சிகள் நீளமாவும் போய்ட்டு இருந்துச்சு , விஜய் சேதுபதி வர காட்சிகள் நிம்மதியா கடத்திட்டு போச்சு ஆனா அப்புறம் இடைவேளைக்கு பிறகு படம் பறக்க ஆரம்பிச்சிடுச்சு வரவன் போறவன் எல்லாம் சிரிக்க வைக்குறாங்க. எத்தனையோ காமெடி படம்னு நம்ம கழுத்த அறுக்குற படைகளுக்கு மத்தியில் மூடர் கூடம் , இந்த படம் போல யாரும் எடுக்க மாட்டேன்குறாங்க.

படத்தில் வரும் சென்னை பாஷை வசனங்கள் மிக அருமை, குமாரு நண்பர் என்று ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வருபவர் இரண்டாம் பாதியில் ஒரு 30 தடவையாச்சும் கூறி இருப்பார் " ஹே குமாருக்கு லவ் ப்ராப்ளம் அப்செட்டா இருக்காரு ஆப் அடிச்சா கூல் ஆய்டுவாறு " இதை ஒவ்வரு முறையும் சிரிக்கலாம் சிலருக்கு அலுப்பாகும்.

இந்த படத்தில் சிரிப்பதற்கு எல்லோரின் உடல் மொழி தான் முக்கிய காரணம் , அவரவரின் செய்கைகளில் வட்டார பேச்சுகளில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் கடைசி 15நிமிடங்கள் விஜய்சேதுபதியின் அட்டகாசம் அதகளம் செய்து உள்ளார் . படம் முடிந்து வெளியே வந்தாலும் அவை நினைவில் வந்து வந்து சிரிக்கவைக்கும்.

எல்லாத்துக்கும் மேல இப்படத்தின் மூலம் இயக்குனர் கோகுல்  நல்ல கருத்தை எல்லோரும் ஏற்று கொள்ளும் படி தந்து உள்ளார்.

SAY NO TO DRINK

 நம்பி போகலாம் பேரு  தாங்க சுமார் மூஞ்சி குமாரு ஆனா பார்க்க நல்லாவே இருக்கார்பா